Maha Mandhirapeedam
மெய் ஞானத்தை அடையும் வழி-பகுதி-24

மெய் ஞானத்தை அடையும் வழி
பகுதி-24


சன்மார்க்க வழிபாட்டு முறைகள்

வள்ளல் பெருமான் ஆரம்ப காலத்தில் சைவ சமயத்தை பின்பற்றி பிறகு ஆண்டவரின் அருட்துணையால் சுத்த சன்மார்க்கத்தை உணர்ந்து ,பின்பற்றி சுத்தமாதி மூன்று தேகங்கள் பெற்றார்.

வள்ளல் பெருமான் சமயத்தை பின் பற்றியகாலங்களிலும் சரி, சுத்தசன்மார்க்கத்தை பின்பற்றிய காலங்களிலும் சரி அவர் நம்பிய அந்தந்த வழிகளில் மிகுந்த ஈடுபாட்டுடனும் நம்பிக்கையுடனும் செயல் பட்டார்.அதே சமயம் தமது கருத்துக்களில் மாற்றங்கள் உருவானதும் அதை தைரியமாக வெளியிட்டார்.

வள்ளல் பெருமான் பேருபதேசத்தில் "நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக்கொண்டிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது. அந்த லக்ஷியம் இப்போது எப்படி போய்விட்டது பார்த்தீர்களா. அப்படி லக்ஷியம் வைத்ததற்கு சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கின்ற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும், மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்கு கொண்டு வந்தால் அவைகளே சொல்லி விடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது'' என்று கூறுகிறார்.

வள்ளல் பெருமானின் சைவ சமய பக்திக்கு எடுத்துக்காட்டாக ஐந்து திருமுறைப் பாடல்கள் அனைத்தும் இருந்தாலும், அதில் உச்சக் கட்டமாக திருநீறு பற்றியும் அதன் மீதுள்ள பற்று பற்றியும் இரண்டாம் திருமுறையிலுள்ள சிவ புண்ணியத்தேற்றம் என்றத் தலைப்பில் எழுதப்பட்டுள்ள பத்து பாடல்கள் தெளிவாக வெளிப்படுத்தும்.

அவற்றின் ஒரு பாடலைக் கண்போம்

இனிய நீறிடா ஈன நாய்ப் புலையர்க்
கெள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
இனிய நீறிடும் சிவனடியார்கள்
எம்மைக் கேட்கினும் எடுத்தவர்க்கீக
இனிய நந்நெறி ஈது காண் கரங்கள்
ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்
கினிய மால்விடை ஏறிவந்தருள்வோன்
இடங் கொண்டெம்முள்ளே இசைகுதற்பொருட்டே


என்று பாடியுள்ளதுடன் மற்ற ஒன்பது பாடல்களிலும் திருநீறு தரிக்காதவர்களை

கடவுள் நீறிடா கடையர்கள்
என்றும்
போற்றி நீறிடா புலையர்கள் என்றும்
தெய்வ நீறிடா சிறியர் என்றும்
தூய நீறிடா பேயர்கள் என்றும்
நல்ல நீறிடா நாய்கள் என்றும்
அருள்செய் நீறிடார் என்றும்
முத்தி நீறிடார் என்றும்
நாட நீறிடா மூடர்கள் என்றும்
நிலைகொள் நீறிடா புலையர்கள் என்றும் கூறி

திருநீரு அணியாதவர்களுக்கு எந்த உதவியும் செய்யாதீர், திருநீறு அணிந்தவர் எப்படிப்பட்டவராயினும் அவரை ஏற்று செயல்படுக, அவ்வாறு செய்தால்தான் நமது மனதில் ஈசன் உறைவார் என்று வலியுறுத்தி கூறுகிறார்.

திருவருட்பாவில் இவ்வளவு கடின சித்தம் காட்டும் பாடலா, வள்ளல் பெருமான் இதை பாடினாரா என சன்மார்க்க அன்பர்கள் வியப்பு கொள்வதும், ஐயம் கொள்வதும் இயற்கை.

இந்த ஐயத்தின் பதில் பிறகு உரிய நேரத்தில் உரிய பகுதியில் வெளியிடப்படும்.

இந்தப் பகுதியில் இந்தப் பாடல் எடுத்ததின் காரணம் வள்ளல் பெருமான் எந்த அளவிற்கு சைவ சமயத்தின் மீதும், தீருநீற்றின் மீதும், சிவ பெருமான் மீதும், பற்று கொண்டிருந்தார் என்பதை நிருபிக்கும் பொருட்டு எனக் கொள்க.

இந்தப் பாடல் எழுதப்பட்ட போது வள்ளல் பெருமான் வயது பதினாறு எனக்கொள்க.

மேலும் படிப்படியாக வள்ளல்பெருமான் முதலில் முருகரையும், அடுத்து தியாகராஜரையும், அதற்கடுத்து சிதம்பரம் நடராஜரையும் வழிபடு தெய்வமாக கருதி வழிப்பட்டு வருகிறார். ஒரு கால கட்டத்தில் நடராஜரை குருத்தத்துவமாக விளக்கம் கேட்கிறார்.

ஏறக்குறைய தமது நாற்பத்தியோராவது வயதில் சுத்த சன்மார்க்க பெரும்பதியாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதியரை குருதத்துவ விளக்கத்திலிருந்து அறிந்து கொள்கிறார்.

இனி இவர் சைவ சமய கோட்பாட்டிலிருந்து கடந்து சுத்த சன்மார்க்க நிலைக்கு செல்லலாம் என்பதற்கு அனுமதியளித்ததின் அடையாளமாக நடராஜரிடம் இருந்து செஞ்சுடர்ப்பூ கிடைக்க பெறுகிறார்.

செஞ்சுடர்ப்பூ கிடைக்கப் பெற்ற அனுபவத்தை திருவருட்பா நான்காவது திருமுறையில் "பிரசாத மாலை" என்ற தலைப்பில் பத்து பாடல்கள் எழுதி விவரிக்கின்றார். அதில் ஒரு பாடலை இங்கு காண்போம்.

திருவுருக்கொண் டெழுந்தெருளிச் சிறியேன்முன் அடைந்து
திருநீற்றுப் பைஅவிழ்த்து செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியாநான் மீட்டும்
தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
மகிழ்ந்தளித்தாம் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
குரு உருக் கொண் டம்பலத்தே அருள்நடனம் புரியும்
குருமணியே என்னைமுன்னாட் கொண்டக்குணக் குன்றே


(*மற்றைய பாடல்களை நான்காம் திருமுறையில் படிக்கவும்)



மேலும் வள்ளல் பெருமான் அவர்கள், முழுமையாக சுத்த சன்மார்க்க நெறிமுறைகளை ஈடுப்பாட்டுடன் பின்பற்றி அருட்பெருஞ்ஜோதியரை ஆழ்மனதில் ஆசனம் அமைக்கும் சன்மார்க்க அன்பர்கள் நான்கு ஆண்டுகளில் செஞ்சுடர்ப்பூ பெற்றுக்கொள்ளலாம் என்று உணர்த்தியுள்ளார்.

வள்ளல் பெருமான் செஞ்சுடர்ப்பூ பெற்றபின் அவருடைய எண்ண எழுச்சிகளும் கடவுள் கொள்கையும் செயல்பாடுகளும் முற்றிலுமாக சைவ சமய நெறியிலிருந்து சுத்த சன்மார்க்க முறைக்கு மாறிவிடுகிறது.

திருநீறு அணியாதவர்களை வெறுத்து திருநீறு அணிபவர்களை போற்றும் மனிதர்கள் மனதில்தான் சிவபெருமான் அமர்ந்து அருளரசாட்சி செய்வார் என்று கூறிய வள்ளல் பெருமான் தற்போது சாதி,சமய,பேத மற்ற மனிதர்களின் மனதில்தான் இறைவன் நடம்புரியும் இடம் என அறிந்து கொண்டதாக கீழ்கண்ட பாடல் மூலம் வலியுறுத்திகிறார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்முயிர் போல் எண்ணியுள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துக்ருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ


திருவருட்பா-ஆறாம் திருமுறை


மேலும் பிறரை வெறுக்கும் சமய வாதிகளை துன்மார்க்கிகள் என்று கீழ்கண்ட பாடலால் சாடுகிறார்.


சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற
தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்
காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்துள் கடுகடுத்தே
நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே


திருவருட்பா-ஆறாம் திருமுறை


மேலும் வள்ளல் பெருமான் கொள்கைகளில் முக்கியமானது. இறந்தவரை எரிக்காது சமாதி வைக்க வேண்டும் என்பது. இது சைவ சமயத்தின் திருநீறு தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது. திருவருட்பா ஆறாம் திருமுறையில் சமாதி வற்புறுத்தல் என்ற தலைப்பில் பத்து பாடல்கள் பாடியுள்ளார். அதில் பண்டைய காலத்தில் சைவ சமயவாதிகளால் திருநீறு என்று முக்கியத்துவம் வழங்கப்பட்ட சுடுகாட்டு சாம்பாலானது புன் செய் எருவுக்கு கூட பயன்படாது என்று கூறி சாடுகிறார். இறந்தவரை சாம்பலாக்குவது ஒரு கொலை செய்வதற்கு சமம் எனக் கூறுகிறார். அதில் ஒரு பாடலை இங்கு காண்போம்

அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை
பொங்கக்கோ ரணிகொண் டந்தோ
பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
இனிச்சாகும் பிணங்க ளேநீர்
கணங்கழுகுண் டாலுமொரு பயனுண்டே
என்னபயன் கண்டீர் சுட்ட
எணங்கெழும்சாம் பலைக்கண்டீர் அதுபுன்செய்
எருவுக்கும் இயலா தன்றே.


சன்மார்க்க வழிப்பாடு என்று தலைப்பிட்டு அதில் சைவ சமய சாதனங்கள் சின்னங்கள் அவைகளின் வரலாறு விவரிப்பதின் காரணம் வள்ளல்பெருமான் வழிவந்த அன்பர்கள் சைவம், சன்மார்க்கம் இரண்டையும் ஒன்றாக முன்வைத்து உலக மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கியதால் ஏற்பட்ட விளைவாகும்.


இதை புரிந்துகொண்ட பின்பும் சன்மார்க்க அன்பர்கள் சமய சங்கதிகளை கைவிடாமல் செயல் பட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கை திருமுறை நிலையிலேயே முடிந்துவிடும்.

எம்மால் இயன்றவரை சுத்த சன்மார்க்க சாரம் அனைத்தையும் எளிமையாக முன் வைத்து அவற்றை பின்பற்றி சன்மார்க்க அன்பர்கள் வழிபாடுகள் செய்து பலன் பெற வேண்டும் வெளியிட்டு வருகிறோம். இந்த வழிமுறைகளை முழு நம்பிக்கை கொண்டு, ஈடுப்பாட்டுடன் செய்து வந்தால் அருட்பெருஞ்ஜோதியரிடம் அருள்சக்தியை பெற்று சன்மார்க்க சாட்சியமாக திகழலாம் என்பதில் ஐயமில்லை.

முதலில் சன்மார்க்க வழிப்பாட்டு முறையில் ஞானத்தில் சரியை வகையைச் சேர்ந்த அகல் விளக்கு தகரகண்ணாடி விளக்கு ஆகிய வைகளால் வழிபடும் தினசரி வழிப்பாட்டு முறையை பார்ப்போம்.






(தொடரும்)

அடுத்த பகுதி அடுத்த வாரம்






Email : mahamandhirapeedam@yahoo.com
mahamandhirapeedam@gmail.com
jyothimaindhan@gmail.com
Cell: 9942062598,
04172-275071.

3 Comments
valli ramanathan
What is the meaning of "செஞ்சுடர்ப்பூ கிடைக்க பெறுதல்" ? Please explain. Thank you. Valli.
Sunday, July 5, 2009 at 18:40 pm by valli ramanathan
gomathyperumal
கருணைமிகு ஜோதிமைந்தன் அய்யா,
வணக்கம்.வள்ளல் பெருமானார் கடை பிடித்த சமய சன்மார்கத்தை போல் யாரும் கடைபிடிக்க வில்லை.அது போல சுத்த சன்மார்க்க கொள்கையை வள்ளலார் கடைபிடித்தது போல யாரும் கடை பிடிக்க வில்லை.மாணிக்க வாசக பெருமானை குருவாக கொண்டார்.சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு சிவத்தை வழிபட்ட வள்ளலார் சைவ சமயத்தில் இருந்து கொண்டு கருணையாக வாழ முடியாது என உணர்ந்தார்.திருநீறு அணிந்தவரை தான் சைவ சமயம் மதித்தது.திருநீறு அணியாதவரை ஒரு மனிதராக சைவ சமயம் அந்த காலத்தில் மதிக்க வில்லை.
அந்த சமயத்தில் வள்ளலார் திருநீறு அணியாதவரை கடிந்து சொல்லி இருக்கலாம்.
பின் காலத்தில் வள்ளலார் உண்மையை உணர்ந்து கருணையை சிவமாக கொண்டார்.கருணையை சமயத்தில் இருந்து கொண்டு முழுமையாக கடைபிடிக்க முடியாது என உணர்ந்தார்.அருள்பெரும்ஜோதி,தனிப்பெரும் கருணையை குருவாக கொண்டார்.கருணை,தயவு தான் அவரை மேல் ஏற வைத்தது.சைவ சமயம் அல்ல என அவரே பின்னால் சொல்லுகிறார்.நன்றி அய்யா.கருணையாக,கோமதி&அருள்ஜோதி சுஜாதா.
Monday, July 6, 2009 at 06:32 am by gomathyperumal
P Sujatha
கருணைமிகு வள்ளி அவர்களுக்கு,
வணக்கம்.செஞ்சுடர் பூ அடைதல் என்பது ஞான ஆன்ம உள் உணர்வு ஆகும்.
அருள்பெரும்ஜோதி என்னும் செழுமையான ஞான கருணை,தயவு,அருள் ஜோதியை
ஆன்ம உருக்க உணர்வினால் அனுபவித்த நிகழ்ச்சியை தான் செஞ்சுடர் பூ அடைதல்
என்கிறார்.அந்த உணர்வை கருணையால் பெற வேண்டும் என வள்ளலார் சொல்லுகிறார்.இந்த உணர்வை யாரும் எந்த நேரத்திலும் பெறலாம்.கருணை வாழ்க்கை ஒன்று மட்டும் இருந்தால் எல்லாம் கை கூடி வரும்.அக உணர்வினால் பெறும் உயர்த்த நிலை தான் அது. vallalar loving,aruljothisujatha.
Wednesday, July 8, 2009 at 05:55 am by P Sujatha