Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
எங்கும் இருக்கும் இறைவனைப் பற்றி வள்ளல் பெருமான் கூறும் பாடல்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருப்பெருஞ்ஜோதி


எங்கும் இருக்கும் இறைவனைப் பற்றி வள்ளல் பெருமான் கூறும் பாடல்கள்


எல்லாம் வல்ல இறையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கும் நிறைந்துள்ளார். வியாபகமாக இருக்கிறார் என்றும் முதலில் கூறப்பட்டிருந்தது. வியாபகம் என்றால் பரவியிருக்கும் தன்மை என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.

மேலும் அன்பர் ஒருவர் மலேசியாவில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில் எங்கும் இறைவன் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே இந்த பதில் குறை சொல்வதற்காகக் குறிப்பிடவில்லை. எல்லாம் வல்ல இறைவனாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதற்கான திருவருட்பா பாடல்களைக் குறிப்பிடுவதற்காக இங்குத் தரப்பட்டுள்ளது. மேலும் அன்பர் எங்கும் இறைவன் நிறைந்திருக்கவில்லை என்று திருவருட்பாவில் ஆதாரம் இருந்தால் தெரிவிக்கவும், அன்பர்கள் பலர் பார்ப்பதற்கும் இது வசதியாக இருக்கும்.

முதலில் ஒரு கருத்தைத் தெரிவிக்க வேண்டும், அஃதாவது உடம்புடனும், உடம்பு இல்லாமலும் தோன்றுவது என்பது உடலை நீத்தப் பிறகு தோன்றுவது இல்லை, தோன்றியும், தோன்றாமலும் இருப்பது. எம்பெருமான் அவர்கள் கி.பி 1865- ம் வருடம் முதலே இவ்வாறு பிறர் கண்களுக்கு தோன்றியும் தோன்றாமலும் இருந்துள்ளார், இதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளது. மேலும் ஞான தேகம், திருநிலை, இறைநிலை எல்லாம் ஒன்றே.

மேலும் உங்களுடைய பதிலில் பெருமான் அவர்கள் எங்கும் வியாபித்திருக்கிறார் என்பது பொருந்தாது (“ Peruman engum viyaabithu irukkirar enbathu poruntathu )என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

இறைவன் இருக்குமிடம் தான் வள்ளலார் இருக்குமிடம், ஏனெனில் பெருமானும், இறையும் இப்பொழுது வேறில்லை. பெருமானாரின் தேகத்தில் ’இறை’ இப்பொழுது இருக்கிறார். இதற்கானப் பாடல்கள் 100க்கும் மேல் உள்ளது. உடம்பு இல்லாமல் உயிர் இயங்காது என்பது உண்மையே, ஆனால் வள்ளலார் இப்பொழுது இறையின் தேகத்தில் இருக்கிறார் அல்லவா! இறைவனின் தேகம் பெற்றவர் எங்கும் இருக்க வேண்டும்.

இறைவன் எங்கும் இருக்கிறார் என்பது என்னுடைய வார்த்தையில்லை, சத்தியவான் வள்ளல் பெருமானார் வார்த்தை.
உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
கலகநிலை அறியாத காட்சி யாகிக்
கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
தானந்த மயமாகி அமர்ந்த தேவே
உயிர்கள் அனைத்திலும் இறைவன் இருக்கிறார் என்பதை :

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்த மெய்ச்சிவமே

மேலும் இறைவன் உள்ளே இருந்தால் நமக்கு குறைகள் இருக்கக்கூடாது என்பது தவறான வாதம். ஆன்மாவைச் சுற்றியிருக்கிற மாயைத்திரைகள் நீங்க வேண்டும், உள்ளொளியாகிய உயிர் ஒளியைக் காண வேண்டும். அதற்கான முயற்சியை மனிதனே எடுக்க வேண்டும் என்பதே இறையின் சித்தம். மேலும் மாயைத்திரைகளை வைத்து தான் உலக இயக்கமும் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.



மேலும் அண்ட கோடிகள் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவெளியில் -அருள்வெளியில் ஒரு சிறு அணுக்கள் என்பதற்கு:
ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்னமுடி யாஅவற்றின்
ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
உற்றகோ டாகோடியே
திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
சிவஅண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
சீரண்டம் என்புகலுவேன்
உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
உறுசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
ஒருபெருங் கருணைஅரசே
மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
வரந்தந்த மெய்த்தந்தையே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே
. இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
இன்பமே என்னுடை அன்பே
திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
திகழுறத் திகழ்கின்ற சிவமே
மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
வெளிஅர சாள்கின்ற பதியே
பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே
உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
உவப்பிலா அண்டத்தின் பகுதி
அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
றிருந்தென விருந்தன மிடைந்தே
இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
தென்பர்வான் திருவடி நிலையே
அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே
அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
அறிந்திடப் படாதமெய் அறிவைப்
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
கடைக்கணித் தருளிய கருணைக்
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே

இவ்வளவு பெரியஅளவிட முடியாத அண்டங்கள் எல்லாம் இறைநிலையில் ஒரு கோடிக்கூற்றில் ஒன்றாக இருக்கிறது.
அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
பேசநின் றோங்கிய பெரியோன்
களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
கருணையா ரமுதளித் துளமாம்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
வள்ளலைத் தடுப்பவர் யாரே
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
உளவுயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
கருத்தெலாம் இனிதுதந் தருளித்
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
தந்தையைத் தடுப்பவர் யாரே

இவ்வாறு நிறையப் பாடல்கள் உள்ளன.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம் புருவமத்தியிலும் நிறைந்திருக்கிறார், அதுபோல் எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ளார் என்பதும் வள்ளலார் வாக்கு.

இறைவன் எங்கும் நிறைந்திருக்கவில்லை என்று திருவருட்பா பாடல்கள் இருந்தால் தெரிவிக்கவும், தெரிந்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும்.நன்றி.
இது ஒரு சத்விசாரம் மட்டுமே, தவறாக நினைக்க வேண்டாம். நன்றி


reference
www.vallalarspace.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருப்பெருஞ்ஜோதி