அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ________________________________________________________________________ முற்பிறவிகளில் நீ செய்துள்ள தவத்தின் பயனாய் இப்பிறவியில் உன்னைச் சீடனாகப் பெற்று உனக்கு அருள்பாலித்து வருவது எம்பெருமானே அன்றி வேறு யாருமல்லர். குருவாக அமைந்த நிலையில் அவர் தன்னைச் சிவமாக பறை சாற்றிக்கொள்ள மாட்டார். அவருடைய திருமுன்னர் நீ தான் அந்த உண்மையை உணர்ந்துக் கொள்ள வேண்டும். ________________________________________________________________________ மெய்யுணர்தல்-4 எல்லாம் வல்ல ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் தந்நிலையும், இறைநிலையையும் உணர்ந்தார், காணும் பொருள்கள் யாவும் சிவமே என்பதையும் உணர்ந்தார், எனவே அண்டகோடிகளிலிருந்து உயிருள்ள ஜீவன்கள் முதல் உயிரற்ற பொருட்கள் வரை எங்கும் வியாபித்திருக்கும் இறையைக் கண்டு பேரானந்தம் கொண்டார். தாமே சிவம் என்பதையும் உணர்ந்துக்கொண்டார், தாம் எதற்காக இப்புவியில் வருவிக்கவுற்றார் என்பதையும் உணர்ந்தார். இறைவன் தன்னுள்ளே இருந்து மக்களின் அறியாமையைப் போக்க திருவுள்ளம் கொண்டுள்ளார் என்பதனையும் உணர்ந்தார்: நான் உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன் தன் வார்த்தை நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே… என்று வெளிப்படையாகவே நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தந்த வார்த்தை, மக்களே நம்புங்கள், நான் பொய் உரைக்கவில்லை, சத்தியமாகிய புதுநெறியாம் அருள்நெறியை உரைக்கிறேன், செவிமடுப்பீர் என்று கூறுகின்றார். பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற் றங்கும்இங்கும்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்க நெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்திஎல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே....... மேலும், பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
பவ நெறி இதுவரை பரவிய திதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே!..
சமய பேதம், சாதி பேதத்தால் ஆன்மநேய ஒருமைப்பாடின்றி எங்கும் இருக்கும் இறையை உணராமல் தம்முடைய இறைவனே பெரியவர், தம்முடையச் சமயமே உயர்ந்தது என்று உண்மை அறியாமல் மக்கள் அறியாமையில் ஒருவரையொருவர் குறைக்கூறி அறியாமையால் வாடும் பொழுது இறைவனே வள்ளல் பெருமானாருக்கு புத்தமுது நெறியான அருள்நெறியை வழங்கி மக்களின் அறியாமையைப் போக்கச் செய்கிறார். மேலும் வள்ளல் பெருமானாருக்கு அருட்ஜோதியை அளித்து அருளரசாட்சி செய்யப் பணிக்கிறார். இதனை: தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச் செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே தன்பொருள் அனைத்தினையும் தன் அரசாட்சியில் என்பொருள் ஆக்கிய என் தனித்தந்தையே தன் வடிவனைத்தையும் தன் அரசாட்சியில் என் வடிவாக்கிய என் தனித் தந்தையே தன் சித்தனைத்தையும் தன் சமூகத்தினில் என் சித்தாக்கிய என் தனித்தந்தையே தன் வசமாகிய தத்துவ மனைத்தையும் என் வசமாக்கிய என் உயிர்த் தந்தையே தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் என்ன இயற்றிய என் தனித்தந்தையே தன் உரு என் உரு தன் உரை என் உரை என்ன இயற்றிய என் தனித்தந்தையே மேலும்,எண்ணியபடி யெலாம் இயற்றுக என்றெனை புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே ஆகவே வள்ளல் பெருமானார் இன்று மண்ணுலகத்திற்கே வழிக்காட்டியாகவும், குருவாகவும், இறையாகவும் இருக்கிறார். குருவும் அவரே, இறையும் அவரே. அஞ்ஞானமுற்று மக்கள் எப்பொழுதெல்லாம் இறைவனைக் கண்டுணராது இருக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியாகிய பரம்பொருள் தந்நிலையிலேயே குருவுருவம் தாங்கி மண்ணுலகத்தில் செயற்கரிய செயல்கள் பல புரிந்து தந்நிலையை மக்களுக்கு எளிதில் உணர்த்துவார், அவ்வாறு அவர் சமீபத்தில் உடுத்திய ஒரு மானுட வடிவமே திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள். எனவே இறைநிலையை அறிந்து இறைநிலை அடைய விரும்பினால் குருவாக இருந்து அவர் கூறிய நெறியைக் கடைப்பிடிப்பது தானே சரியான வழியாக இருக்கும். இறைவன் குருவுருவம் தாங்கி பல அற்புதங்கள் புரிவார் என்பதை திருமூலரும் எடுத்து வியம்புகிறார். தானே யெனநின்ற சற்குரு சந்நிதி தானே யேன நின்ற தன்மை வெளிப்படில் தானே தனைப் பெற வேண்டுஞ் சதுர்பெற ஊனே யென நினைந்தோர்ந்து கொள் உன்னிலே அன்பனே! உன்னுடைய முற்பிறவிகளில் நீ செய்துள்ள தவத்தின் பயனாய் இப்பிறவியில் உன்னைச் சீடனாகப் பெற்று உனக்கு அருள்பாலித்து வருவது எம்பெருமானே அன்றி வேறு யாருமல்லர். குருவாக அமைந்த நிலையில் அவன் தன்னைச் சிவமாக பறை சாற்றிக்கொள்ள மாட்டான். அவனுடைய திருவுருவம் முன்னர் நீ அந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவன் இது காறும் உனக்கு அருளியுள்ள உபதேசத்தால் நீ அதை எளிதில் உணர்வாய். அப்படி உணரும் போது உனக்கு மேலும் சில உண்மைகள் வெளிச்சமாகும். உன்னுடைய ஆன்மாவின் தன்மையை அவன் உணர்த்தி உள்ளதால் குருவாய் உள்ளவன் சிவமே என்பதை நீ அறிந்துக்கொள்வாய். சிவனுடைய மெய்ம்மையை உணர்ந்துக் கொள்ளும் நீ, நீயும் சிவனாம் தன்மை உடையவன் என்பதையும் நீ உணர்வாய். கிடைத்தற்கரிய இம்மானுடப் பிறவியில் நீ உன்னை நன்கு உணர்ந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உணர்ந்துக் கொண்டால் நான், நீ, அவன், அது என்ற எல்லாம் மறைந்து எங்கும் நிறைந்த பொருளாய் இருக்கலாம். இதனை மேலும் ஒரு பாடல் மூலமும் பார்க்கலாம்: தாடந் தளிக்குந் தலைவனே சற்குரு தாடந்து தன்னை யறியத் தரவல்லோன் தாடந்து தத்துவாதீதத்துச் சார்சீவன் தாடந்து பாசந் தணிக்கு மவன் சத்தே. ஒருவனுடைய புண்ணியப் பயனாய் அவனுக்குச் சற்குருவாய் வந்து அருள் புரிவோன் உண்மையில் பரம்பொருளே ஆவான். ஆனால் அவன் தன்னைச் சிவம் என்று சொல்லிக்கொள்ள மாட்டான். தன்னுடைய திருவடிகளைச் சீடனின் சிரசின் மேல் சூட்டி அவனை தந்நெறியில் அழைத்துச் சென்று அவனுக்குச் திருவருளின் திருவடி இன்பத்தைப் பெற்றுய்யுமாறு செய்யும் மெய்யான குருவே சற்குரு ஆவான். அதனால் தான் அவன் சீடனுக்கு இகத்தில் நல்ல வாழ்க்கையும் பரத்தில் திருவடிக் கமலங்களில் என்றும் இன்புற்றிருக்கும் பேற்றினையும் அருள்வான். ஆகவே இதன் மூலம் நாம் உணரும் கருத்து யாதெனின் வள்ளல் பெருமானார் வேறு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேறில்லை, இருவரும் ஒருவரே. சுத்த சிவமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார் உருவிலே, குருவாக மறைந்திருந்து உலகம் உய்வுற நன்னெறியான அருள்நெறியை நமக்கு எடுத்துத் தந்திருக்கிறார். சுத்த சிவமே நம்முள்ளும் ஜோதி வடிவாக அம்பலமாகிய புருவமத்தியில் ஆடுகின்றார். எனவே அவரை நாட்டங்கொண்டால் நான், நீ, அவன், அது என்று எல்லாம் மறைந்து எங்கும் நிறைந்தப் பரம்பொருளாய் சுத்த சன்மார்க்க சுகநிலையான மரணமில்லாப் பெருவாழ்வில் வாழலாம். தொடரும்.., அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தகவல் உதவி: எல்லாம் வல்ல ஞான குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய சிதம்பரம் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள்
Write a comment