அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
துறவு
அறிவு தூய்மை அடைவதைத்தான் உண்மையான துறவு என்பர். துறவு உயர உயர இறை உறவும் உயர்கிறது. இறை நுகர்வும் வளர்கிறது. மன நெகிழ்ச்சி ஏற்படும் போது மூளை மலர்கிறது. நித்திய வாழ்வு என்பது சித்தி. மூளை மலர்ந்திட அமுதம் உடலெலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட என்கிறது அகவல். எங்கும் வியாபித்திருக்கின்ற பிரபஞ்சத்தை அண்டம் என்றும், உடம்பை பிண்டம் என்றும் சொல்லுவர். கோடிக்கணக்கான உயிர்கள் அண்டத்திலும், பிண்டத்திலும் இருக்கின்றன.
அவற்றைப் பிரியாது துறக்காது கலந்து அநுபவிப்பது தான் முழு அனுபவமாகும். எல்லா உயிர்களிலும் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவற்றை தன் உள் ஒளியால் இயக்குகிறார். அவையெல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள் என்று தன்னலம் கருதாமல் உயிர்நலப்பணி செய்து வாழ்வதே உண்மையான துறவு வாழ்க்கையாகும்.
இதனை வள்ளல் பெருமானார் நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து அன்பே நிறைந்து வாழுங்கள் என்கிறார். நெகிழ்ச்சி இல்லையேல் நிகழ்ச்சியில்லை. துறவு நிலைகளில் ஆறு அந்தங்களின் நிலைகளும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.வேதாந்தம் செருக்கிற்கு முடிவு கட்டுவது. செருக்கு ஒழிந்தாழொழிய தாராளகுணம் உருவாகாது. மௌன நிலையும், மோன குரலின் பெருமையும் புரிய அகங்காரம் அழிய வேண்டும்.
சித்தாந்தம் கஞ்சத்தனம் என்கிற கடின சித்தத்திற்கு முடிவு கட்டுவது. அதன் பிறகு கோபத்தை நீக்குகிற போதாந்தமும், காமத்தை நீக்குகிற யோகாந்தமும், பொறாமையை நீக்குகிற கலாந்தமும் ஏற்படும்.
அட்டகத்தில் இருவினைஒப்பு மூன்று சொற்களால் குறிக்கப்படுகிறது. காரணம் ஆண் தன்மை நீங்கினாலும், பெண் தன்மை நீங்கினாலும் அலித்தன்மை உருவாகிறது. இம்மூன்றும் அடியோடு நீங்கும் போது சுத்த சன்மார்க்க இன்பம் கண்டத்திற்கு மேல் உருவாகும் என்பர். மூளையில் இரண்டு பகுதிகள் உண்டு. அவற்றில் இடது பகுதியில் பெண் சுரப்பி- பினியலும், வலது பகுதியில் ஆண் சுரப்பி- பிட்யுட்டெரியும் உள்ளன. இவை இரண்டும் இணையும் போது உண்டாகும் இன்பமே உயர்ந்தது. இது ஞான யோகத்தால் உருவாகும். இதனை அருள்விளக்க மாலையில் ஒரு மடந்தை வலிந்து அணைந்து என்ற பாடல் மூலம் விளக்குகிறார்.
அனுபவ மாலையில் நான் ஆண் மகனும் அலன், பெண்ணும் இல்லை, அலியும் இல்லை என்கிறார். காரணம் என்னுடைய எண்ணம் திருசிற்றம்பலத்திலேயே நிலைப்பெற்றது தான் என்கிறார்.
எல்லா பொருள்களையும், ஐந்து பூதங்களால் உருவாக்கி அருளிய இறைவன் திருவடிகளையே பூத, பௌதீக, ஆதார நிபுணம் என்கிறார். பூதங்களால் ஆக்கப்பட்டவை பௌதீகம், பர அமுதமாகிய அருட்ஜோதி கிடைத்ததை தூக்கம் கெடுத்தான், ஆக்கம் கொடுத்தான் என்கிறார் பெருமானார். அமுதம் ஊற்றெடுக்கும் போது தூக்கம் கெடுகிறது. இந்த நிலையே மனிதனை சிவமாக்குகிறது என்பதை அருள்நெறி மூலம் உணர்த்தியவரே சற்குரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அன்புடன்
ஜோதி D.சத்யமூர்த்தி
மடிப்பாக்கம்
சென்னை
9710615260