அருள் வடிவான இறையை அருளறிவால் மட்டுமே உணர முடியும். அதனால் தான் வள்ளல் பெருமானார் கருணை-தயவு என்ற உபாயத்தை உணர்த்துகிறார். ஆகவே நாமும் அருட்சபை கதவை தட்டுவதற்கு தயவு- கருணை மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.,
அருட்சபையில் வள்ளலார்-2
சர்வ வல்லமை, சர்வ வல்லபம் என்பது எங்கும் வியாபித்திருக்கும் ஞான சித்தி. வள்ளல் பெருமானார் ஞான சித்திப் பெற்ற பிறகு அவருடைய ஞான தேக வெளிப்பாடு இம்மண்ணுலகத்தில் மட்டுமல்லாமல் அண்டங்கள் அனைத்திலும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அண்டகோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக் கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியேவள்ளல் பெருமானுடைய அறிவு அண்டகோடிகள் அனைத்திலும் வியாபித்திருப்பதற்கு காரணம் இறையும், வள்ளல் பெருமானாரும் தங்களுடைய உடல், பொருள், ஆவியை மாற்றிக்கொண்டது தான். இதனை திருவருட்பா பாடல்களிலும், அகவல் மூலமும் உணரலாம்.
தன்சித்தனைத்தையும் தன் சமூகத்தினில்
என்சித்தாக்கிய என்றனித் தந்தையே
தன்வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும்
என்வசம் ஆக்கிய என்னுயிர்த் தந்தையே
தன்கையில் பிடித்த தனி அருட்ஜோதியை
என்கையில் கொடுத்த என்றனித் தந்தையே
தன்னையும் தன்னருள் சத்தியின் வடிவையும்
என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே
தனி இயல் என் இயல் தன் செயல் என் செயல்
என்ன இயற்றிய என் தனித் தந்தையே
தன் உரு என் உரு தன் உரை என் உரை
என்ன இயற்றிய என் தனித் தந்தையே
- அகவல்
திருவடியை அடைவதற்கும், உடல், பொருள், ஆவியை மாற்றிக்கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. திருவடியை அடைவது முக்தி நிலைக்கு ஒப்பாகும். உடல், பொருள், ஆவியை மாற்றிக்கொள்வது என்பது - மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று இறையுடன் இரண்டரை நிலையில் இருப்பதாகும். ½ + ½ = 1. இந்நிலை அருட்சபையில் வீற்றிருக்கும் இறையால் மட்டுமே தந்தருளப்படும். இறைவனே தன்னை ஆட்கொண்டு எல்லாம் வல்ல சித்தி அளித்தார் என்பதும் இந்நிலையைக் குறிக்கும்.
சிவமாக்கிக் கொண்டானென்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தானென்று ஊதூது சங்கே நவநோக்களித்தானென்று ஊதூது சங்கே நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கேஎல்லாம் வல்ல சித்தி என்பது மரணமில்லாப் பெருவாழ்வே. இஃது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தரப்படும் ஒரு வரப்பிரசாதமாகும். எனவே அந்நிலைக்கு ஒவ்வொரு ஆன்மாவும் தங்களை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உணர்ந்துணர்ந்து உணரினும் உணராப் பெருநிலை அணைந்திட எனக்கே அருளிய தந்தையேஆகவே அருள் வடிவான இறையை அருளறிவால் உணர வேண்டும். அருளறிவு ஏற்பட உயிர் பேதங்கள் நீங்கி அன்பு- கருணை- தயவு மேலோங்க வேண்டும். இதனை வள்ளல் பெருமானார்;
அன்பையும் விளைவித்து அருட்பேரொளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்
ஓர் உரு ஆக்கியான் உன்னியபடி எலாம்
சீர் உறச் செய்துயிர்த் திறம்பெற அழியா
அருளமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருளறிவு அளித்தனை அருட்பெருஞ்ஜோதி
திருமந்திரமும்:
அவமுஞ் சிவமும் அறியார் அறியார்
அவமுஞ் சிவமும் அறிவார் அறிவார்
அவமுஞ் சிவமும் அருளால் அறிந்தால்
அவமுஞ் சிவமும் அவனருளாமே.
-திருமந்திரம்: 2340
வள்ளல் பெருமானார் மேலும் இதனை :
அருளறியார் தமை அறியார் எம்மையும்
பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே
அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை
பொருள் நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே
என்றும்,
அருள்பெறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருளிது எனவே செப்பிய சிவமே
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை
அருளுற முயல்கவென்று அருளிய சிவமே
ஆகவே அருளைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் தக்க முயற்சியில் ஈடுபட வேண்டும். அன்பு- கருணை-தயவு என்கிற சாதனம் மூலம் இறையை எல்லா உயிர்களிலும் காணும் பக்குவத்தை வளர்த்து, அதனை உலகியியலில் கடைப்பிடிக்க வேண்டும் .
திருக்குறளும் இதனை:
அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார்
அஃதறிகல்லா தவர்.
குறள்- 427
எனவே இறையை எல்லா உயிர்களிலும் காணும் தன்மையைப் பெற்றவர்களுக்கு ஞான அறிவாகிய அருளறிவு விளக்கம் ஏற்படும். அவர்கள் வள்ளல் பெருமானாரின் தனிப்பெருங்கருணையினால் சுத்த சன்மார்க்க சுக நிலையில் வாழ்ந்து இறைநிலையையும் அனைவருக்கும் போதிப்பர். இந்நிலையில் உள்ளவர்களின் உள்ளத்தில் ஞானகுரு வள்ளல் பெருமானும் அமர்ந்திருந்து அவர்களையும் தன்னுடைய கருவியாகப் பயன்படுத்தி சுத்த சன்மார்க்கத்தை உலகம் முழுவதும் அறியச் செய்வார்.
சபை என துளமெனத் தானமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி
-தொடரும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தகவல் உதவி:
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை
*********************