சர்வ வல்லமை, சர்வ வல்லபம் பொருந்திய வள்ளல் பெருமானாருக்கு தெரியாதது எதுவும் இல்லை, நடந்துக் கொண்டிருக்கும் செயலையும் நடக்கப்போவதையும் அவர் அறிவார்..அவர் அறியாதது எதுவும் இல்லை.
- அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை
அருட் சபையில் வள்ளலார்
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இறைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை பல்வேறு சமயங்கள், மதங்கள் மற்றும் மார்க்கங்கள் அவரவர்கள் வழியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். உயிரினங்களில் மனிதப் பிறவி மிகவும் உயர்ந்தது என்றும் , இப்பிறவி மூலமே பிறவிப் பெருங்கடலை நீந்த முடியும் என்றும் சான்றோர்கள் கூறுகின்றனர்.
சித்தர்கள், யோகிகள், மகான்கள் மற்றும் ஞானிகள் அவரவர்கள் வழியில் இறையைக் காணும் மார்க்கத்தைக் குறிப்பிட்டிருந்தாலும், உலக மாயை என்கிற காலச் சக்கரத்தின் பிடியினால் பல மார்க்கங்களுடையக் கருத்துகள் மருவி சாதி, மத, சமய பேதங்களினால் சிக்குண்டு முழுமையான பர ஞானத்தைப் போதிக்கத் தவறிவிட்டன.
இத்தகைய காலக்கட்டத்தில் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரினால் வருவிக்கவுற்றவர் தான் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள். காலங்காலமாக இருந்து வரும் சாதி, சமய, மதக் கோட்பாடுகளைப் பொய் என்று நிரூபித்து அகவழிபாடு மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் மூலமே இறையைக் கண்டு உணரலாம் என்று வாழ்ந்து காண்பித்து அந்த ஜீவ காருண்ய நெறியே தனக்கு மரணமில்லாப் பெருவாழ்வு- (இறவாப் பெரும் வரம்) தந்தது என்று அருள்நெறியை மக்களுக்குப் போதித்தவர்- சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்.
புற வழிபாடுகள் அனைத்தும் இறையை வேறுபடுத்திக் காண்பிக்கின்றன. அக வழிபாட்டின் மூலமே இறைவனைக் காண முடியும் என்று திடமாக உரைத்தவர்கள் வாழையடி வாழையாக தோன்றிய நம் நாட்டுசித்தர்கள்.
திருமந்திரம் இதனை:
-திருமந்திரம்: 1515.
-திருமந்திரம்: 1518.
திருமூலர் வாழ்ந்த காலகட்டத்திலும் பல்வேறு சமயக் கோட்பாடுகள் நிலைபெற்றிருந்தன என்பதை இந்த பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. அவற்றுள் முதன்மையான மார்க்கங்களாக பைரவம், காளாமுகம், பாசுபதம், சௌரம், கௌமாரம் மற்றும் காணா பத்யம் கருதப்பட்டிருந்தன.
இந்த ஆறு சமயங்களுமே புற வழிபாட்டை வற்புறுத்தும் சமயங்கள் என்றும் இந்த சமயங்களினால் நமது அகத்தில் இருக்கும் இறைவனைக் கண்டுணர இயலாது என்பதை இப்பாடலின் முதல் இரு வரிகளில் கூறுகிறார்திருமூலர்.
வள்ளல் பெருமானார் இதனை :
ஆறு கோடியாஞ் சமயங்கள் அகத்திலு மதன் மேல் வீறு சேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்த தேறும் மற்றைய அந்தத்துஞ்சிவம் ஒன்றேயன்றி வேறுகண்டிலேன் கண்டிரேற் பெரியர்காள் விளம்பீர் - திருவருட்பாஎன்றும் சாதி, மத, சமயக் கருத்தினால் இறையை உணர இயலாது என்பதையும் எடுத்துரைக்கிறார்.
மேலும் அகத்தில் இருக்கும் இறைவனை திருமூலர் கீழ்கண்ட வாறு கூறுகிறார்.
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.'
-திருமந்திரம்: 1517.
வள்ளல் பெருமானார் இதனை:
ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகிஅகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே!
என்று குறிப்பிடுகிறார்.
இவ்வாறு தெரிவித்த வள்ளல் பெருமானார் உள்ளத்தில் இருக்கும் இறையை :
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவரா உதவுகின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவா
எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன் .....என்றும் தெரிவிக்கிறார்.
இவ்வாறு தெரிவித்த வள்ளல் பெருமானார் இப்பொழுது தன்னுடைய ஞான தேகத்தினால் ஐப்பெரும் தொழில்களையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் செய்து வருவதால் உயிர் பேதங்கள் இல்லாமல் சகஜ மார்க்கமான சுத்த சன்மார்க்கத்தில் இருக்கும் அன்பர்களின் உள்ளத்தில் – சபையில் அமர்ந்திருக்கிறார், வழி நடத்திக்கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
மேலும் சன்மார்க்கத்தில் ஈடுபடும் அன்பர்களுக்கு அவர் எவ்வாறு தன் ஞானதேக வெளிப்பாட்டைக் காண்பிக்கிறார் என்பதை அடுத்தக் கட்டுரைப்பகுதியில் காண்போம்.. எனவே சன்மார்க்கத்தில் ஈடுபடும் அன்பர்கள் சன்மார்க்கம் தவறான வழியில் செல்கிறது என்றோ, சன்மார்க்கத்தை புரிந்துக்கொள்ளாமல் அனைவரும் அன்னதானத்தை வலியுறுத்துகிறார்கள் என்று குறை கூறுவதோ வேண்டாம் .............
சர்வ வல்லமை, சர்வ வல்லபம் பொருந்திய வள்ளல் பெருமானாருக்கு தெரியாதது எதுவும் இல்லை.... நடந்துக்கொண்டிருக்கும் செயலையும் நடக்கப்போவதையும் அவர் அறிவார்..
அவர் அறியாதது எதுவும் இல்லை..
தொடரும்....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தகவல் உதவி:
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை
*******************