அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பர ஞானம்- IV
புதிதாக சன்மார்க்கத்தைப் பற்றி அறிபவர்களுக்கும், மற்ற சித்தாந்த கருத்துகளை உடையவர்களுக்கும் சுத்த சன்மார்க்கம் எவ்வகையில் சிறந்தது என்ற கேள்வி எழலாம். ஏனெனில் நிறைய மார்க்கங்கள் அவரவர்கள் சென்ற நெறியே சிறந்தது என்று கூறுகிறது. ஆனால் அவர்கள் சென்ற மார்க்கங்கள் எல்லாம் அருட்ஜோதியை உணர்ந்து மரணமில்லா பெருவாழ்வை அடைய வில்லை. முக்தியை மட்டுமே கொடுத்தது.சுத்த சிவ சன்மார்க்கம் பரம்பொருளை அருள் வடிவாகக் கண்டு களிப்புற்று தானும் அருள் வடிவாகி பரம்பொருளோடு தன்னை இணைத்துக் கொள்கிறதாம்.
-அருட்ஜோதி ஆண்டவர்
சன்மார்க்கம் என்பது சத்தான மார்க்கம், அதாவது நிலையாயுள்ள கடவுள் உண்மையை குறிப்பதாம். இதற்கு முன் வந்த சன்மார்க்கம் கடவுள் நிலையில் ஒன்றி மறையுறும் நிலையில் இருந்தது. இப்பொழுது வந்துள்ள சுத்த சன்மார்க்கம் இறை நிலை அறிந்து அம்மயமாதலாக உள்ளது. மனிதனுக்கு மரணமில்லா பெருவாழ்வு தருகிறது.
மனிதனைச் சிவன் திருவடியில் மறைந்து விடாது சுத்த நெறியானது சிவ தத்துவத்தையும் கடந்து பரம்பொருளை அருட்பெருஞ்சோதி வடிவத்தில் கண்டுற்று நாம் என்கிற நிலைமாறி அதுவாகி நிற்கும் உண்மையை வழங்குகிறது. இது ஒரு புதுமையான நெறியாக இருக்கிறது. இதற்கு முன் வந்த அருளாளர்கள் இதனை உணர்ந்தாலும் அவர்களால் பரம் பொருளாகி ஐந்தொழில் ஆற்றலையும் பெற வில்லை என்பதையே இப்பொழுது உணருகிறோம்.
வள்ளல் பெருமானாரும் தான் அடைந்த நிலையை உலகிற்கு உணர்த்தி தன்னைப்போல் அனைவரும் இறைநிலை அறிந்து அம்மயமாக வேண்டும் என்றே வேண்டுகிறார். எல்லாம் செய் வல்ல சித்தி இறையும் பெற்றிடலாம் அன்புடையீர் வம்மினிங்கே ... என்றும் தாமே சிவமாகி இருப்பதையும் கூறுகிறார்:
சிவமாக்கிக்கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே
நவநோக்களித்தான் என்று ஊதூது சங்கே
நான் அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே
எனவே புதிதாக சன்மார்க்கத்தைப் பற்றி அறிபவர்களுக்கும், மற்ற சித்தாந்த கருத்துகளை உடையவர்களுக்கும் சுத்த சன்மார்க்கம் எவ்வகையில் சிறந்தது என்ற கேள்வி எழலாம். ஏனெனில் நிறைய மார்க்கங்கள் அவரவர்கள் சென்ற நெறியே சிறந்தது என்று பெருமை பாராட்டக் கூடும். அவர்கள் சென்ற மார்க்கங்கள் எல்லாம் அருட்ஜோதியை உணர்த்தவில்லை. அம்மார்க்கங்களில் காலவிரயமே ஏற்பட்டது. சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றால் மட்டுமே அருள் வடிவான பரம்பொருளை காண முடிந்தது. பிறிதொன்றால் எவ்வளவு காலம் முயன்றாலும் கண்டறிய முடியவில்லை.
தவறாத வேதாந்தம் சித்தாந்தம் முதலாச்
சாற்றுகின்ற அந்தமெல்லாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில்
இருந்து அருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
என் ஆணை என் மகனே அருட்பெருஞ்சோதியைத்தான்
தவறாது பெற்றினை நீ வாழ்க என்ற பதியே
சபையினடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.
அப்படியெனில் இதற்கு முன் வந்த அருளாளர்கள் கூறிய கருத்துகள் பற்றி ஞானகுரு வள்ளல் பெருமானார் கூறுவது:
நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள்
நவில் அருகர் புத்தர்முதல் மதத் தலைவர் எல்லாம்
வான்முகத்தில் தோன்றி அருள் ஒளிசிறிதே அடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம் போன படியே
தேன்முகந் உண்டவரெனவே விளையாடா நின்ற
சிறுபிள்ளைக் கூட்டமென அருட்பெருஞ்சோதியினால்
தான்மிகக் கண்டு அறிகவெனச் சாற்றிய சற்குருவே
சபையில் நடத்தரசே என் சாற்றும் அணிந்து அருளே.
இத்தகைய கருத்துகளை இதற்கு முன் வேறு எந்த சித்தாந்தமும் , வேதாந்தமும் , அருளாளர்களும் கூற வில்லை மேலும் அவர்கள் கூறியிருந்தால் வள்ளல் பெருமானார் முதல் மகனாக இருந்திருக்க மாட்டார் என்பதையும் தெளிவுப்படுத்துவதாக இப்பாடல் கூறுகிறது.
கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
குலத்தாரே நீ எனது குலத்துமுதன் மகன்
மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
வளரவளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே
நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற் குணனே
புலையறியாப் பெருந்தவர்கள் போற்ற மணிப் பொதுவில்
புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே
வள்ளல் பெருமானார் அடைந்த நிலையை பார்த்து, சித்தர்கள் மற்றும் தேவர்கள் எல்லாம் ஆச்சரியம் அடைந்தனராம். ஏனெனில் இவருக்கு அளித்த அருட்பேரமுதமானது இவரை இவ்வுலகம் மட்டுமல்ல, எவ்வுலகத்தினரும் போற்றுவதற்கிணங்க திருவருள் துணை நின்றதாம். இதுவரை வாழ்ந்த எவ்வளவோ அருளாளர்கள், சித்தர்கள் அடையாத பேறு இவருக்கு கிடைத்தது என்றால் அவர்கள் ஆச்சரியத்திற்கு வியப்பில்லை அல்லவா!
இருந்த இடம் தெரியாதே இருந்த சிறி யேனை
எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
அதிசயிக்கத் திருவமுதம் அளித்த பெரும் பதியே
திருந்துமறை முடிப்பொருளே பொருண்முடிபிலுணர்ந்தோர்
திகழ முடிந்து உட்கொண்ட சிவயோகப் பொருளே
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில் நடம் புரியும்
பெருநடத்தென் அரசே என் பிதற்றும் அணிந்தருளே
இவ்வளவு பேறுகள் அடைந்த வள்ளல் பெருமானார் பரம்பொருளை ஜோதி வடிவாக கண்டு ஜோதியில் ஐக்கியமாகி பக்குவப் பட்ட ஆன்மாவிற்கு தன்னை சூட்சும வடிவில் வெளிப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு ஞான அமிர்தத்தை வழங்கிக்கொண்டிருக்கிறார்.
எனவே நாம் மற்ற சித்தாந்த தத்துவங்களை இங்கு ஒப்பிட்டு இறையை உணர இத்தத்துவங்கள் தடையாக இருக்கும் என்று கவலைப்பட தேவையில்லை. ஐந்தொழில் ஆற்றலையும் பெற்று கருணை ஆட்சியால் மண்ணுலகத்தில் ஞானபுரட்சியை எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளல் பெருமானார் ஏற்படுத்திக்கொண்டு வருவதால், தயவு-கருணை-அன்பு கொண்டு இறையை எல்லா உயிர்களிலும் காணும் ஆன்மாவிற்கு அவரே அனைத்து தடைகளையும் களைந்து ஞான பூரணத்தை வழங்குவார். வழங்கிக் கொண்டிருக்கிறார்.இது உண்மை, இது சத்தியம்.
தொடரும்....,
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
தகவல் உதவி:
1. எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை.
இந்த கட்டுரை பகுதியில் உள்ள கருத்துகள் உங்களின் அசைக்க முடியாத சுத்த சன்மார்க்க நம்பிக்கையை
வெளிபடுத்துகிறது.உங்களின் நம்பிக்கை வெற்றி பெற விரும்புகிறேன் ".உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் உன்னையே நம்பினேன் நலம்சார் நண்பனே... உன்னையே நம்பினேன் கை விடேல் என்னையே" என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது.தயவு.தொடரட்டும் உங்கள் நம்பிக்கை வார்த்தைகளில் மட்டும் இல்லை.உங்கள் சன்மார்க்க வாழ்விலும்.