அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சந்தைப் படிப்பும் –சாகாக் கல்வியும்
ஸ்ரீ வள்ளல் பெருமானார் சாகாக் கல்வியைப் பற்றி குறிப்பிடும் பொழுது விது நெறி என்று குறிப்பிடுகிறார். விது -என்பது அமுத சந்திரனைக் குறிக்கும். ஆக்கினை சக்கரத்தில் வரும் உயிர் வித்தை அருந்தியவன் சாகா வித்தையைக் கற்றவன் ஆவான். இவ்வாறு ஆதாரந்தத்தில் பெறுகிற அமுதப் பானத்தை தவிர வேறு எதனாலும் சாகாக் கல்வியைப் பெற இயலாது என்பதை கீழ் வரும் பாடல் மூலம் வலியுறுத்துகிறார் வள்ளல் பெருமானார்.
மேலும் நான்கு வேதங்களும், ஆகமங்களும், சாத்திரங்களும் ஆரவார சந்தைப்படிப்பு என்றும் அதன் மூலம் சாகாக் கல்வியைப் பயில இயலாது என்றும் கூறுகிறார்.
திருமந்திரத்திலும் விதுநெறி வருகிறது.
" வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை
வித்தினில் வித்தை விதற வுணர்வரேல்
மத்தி லிருந்ததோர் மாங்கனி யாமே.”
1909. ஏழாம் தந்திரம் திருமந்திரம்
விது + அற = விதற.
விது = அசைவாம் சலனம்.
மாங்கனி = சிவம்.
(உலகியலில்) நிலத்தில் விதையைத் தூவினால் அதன் மூலம் விளைச்சல் உண்டாகும். வித்து இடுவோருக்குச் சிறப்புடைய அறிவு உண்டு. விந்து மாயையாம் தூமாயையிலிருந்து கருமுதலாம் விந்து உண்டாகும். அவ்விந்துவிலிருந்து கிட்டும் உயிர் வித்தை அசைவின்றி இருந்து உணர்ந்தால் தயிர் கடைய உதவும் மத்துப் போல விளங்கித் தோன்றும். அம்மத்தின் உள்ளே சிவம் (மாங்கனி) தோன்றும்..
இப்பாடல்களைப் புற நோக்கால் திருமந்திரத்தை எவ்வாறு திருவருட்பாவுடன் ஒப்பிடலாம் என்று கூறாதீர்.
அக நோக்கால் பாடல்களில் உள்ள கருத்தைப் பார்க்கும் பொழுது இந்திரிய ஒழுக்கத்தின் அருமைப் புரிய வரும். எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமானார் பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கத்தைப் பற்றி மிக அருமையாகக் கூறியிருப்பதும் தெரிய வரும். மேலும் பிற உயிர்களின் மேல் அன்பு அதிகரிக்கும் போது பிற உயிர்களும் தாமும் ஒன்றாகிறது, இது மேலும் வலிமை அடையும் போது காமம் மறைகிறது.
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிர்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன்..
திருமந்திரமும் :
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
எனவே தூய்மையான அன்பு பிரகாசிக்கின்றப் போது தேகம் சுத்த , பிரணவ , ஞான தேகமாக மாறி சிவமாகிறது.
சிவமாக்கிக்கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே
நவநோக்களித்தான் என்று ஊதூது சங்கே
நான் அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே
ஆகவே அன்பு-கருணை-தயவு உள்ளம் கொண்டவர்கள் இயற்கையாகவே துரியம், துரியாதீதம், சிவ துரியம், குரு துரியம், பரதுரியம் என்பதை மிக எளிதாக அடைகிறார்கள். செயற்கையாக (அன்புரு இல்லாமல்) யோகவுணர்வை ஏற்படுத்தி (artificial) அதன் மூலம் யோகம் பயில்பவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல்பெருமானைச் சரணடைந்து அவரருளால் அனைத்து நிலைகளையும் கடக்க முயற்சிச் செய்து, ஆக்கினையில் அருள் அமுதம் உண்டு, சாகாக் கல்வி பயில முயற்சி மேற்கொள்வோமாக!
தகவல் உதவி:
1. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை
2. தயா ஒளி பிரகாச சரவணானந்தா சுவாமிகள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி.