அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
சன்மார்க்கியின் பணி-III
எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமானின் தனிப்பெருங்கருணையினால் சுத்த சன்மார்க்கமானது எல்லையில்லா வளர்ச்சி அடைந்து வருகிறது. கிராமங்கள், நகரங்கள், பிற நாடுகள் என்று எல்லையில்லாமல் வளர்ந்து வருவதை அனைவரும் அறிகிறோம். இணைய தள சேவை எந்த ஊர்களில் சன்மார்க்க கூட்டம் நடைப்பெற்றாலும் அதனை யாவரும் அறியும் வண்ணம் வெளியிடுகிறது.
சமீப காலத்தில் சுத்த சன்மார்க்கம் சார்ந்த கருத்துகள் மக்களால் பெரிதும் ஈர்க்கப்படுகிறது. கொல்லா நெறியே உண்மையான பக்தி என்பதை மக்கள் புரிந்துக்கொண்டு வருகிறார்கள்.
மக்களின் விழிப்புணர்வு நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதால் அவர்கள் உண்மை இறைநிலையை அவர்களுக்குள் அறியும் நாட்கள் வெகு தொலைவில் இல்லையாம், வெகு சமீபத்தில் உள்ளதாம். ஒருமையை உணரும் போதே இறைநிலை வெளிப்படுகிறதாம்.
எனவே ஒருமையை உணர்ந்து கொள்ளும் நாள் இறைநிலையை உணர்ந்துக்கொள்ளும் முதல் படியாம். நானே நீ, நீயே நான் என்ற பக்குவம் முழுமை அடையும் போது புலனறிவு சிவமாகிறதாம். சுத்த சிவமாகிறதாம்.
தெரிந்தேன் அருளால் சிவம் ஒன்றே என்று
புரிந்தேன் சிவம் பலிக்கும் பூசை - விரிந்தமனச்
சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள்
நாட்டைஎலாம் கைக்கொண்டேன் நான்.
திருவருட்பா
உருவும் பொருள்ஒன்றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
திருவருட்பா
உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
உற்றகரு வாகிமுதலாய்
உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
உணர்வுள்உணர் வாகி உணர்வுள்
பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
சிவமாய் விளங்குபொருளே
சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
தேற்றிஅருள் செய்தகுருவே
மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
வாழ்வேஎன் வாழ்வின்வரமே
மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.
உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
அது எனில் தோன்றா வருட்பெருஞ் ஜோதி.
அகவல்
ஆகவே மண்ணுலகத்திற்கே ஞானகுருவாகிய வள்ளல் பெருமான் பாதம் பணிந்து அவரருளால் இவ்வனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் இவ்வனுபவத்தை யாரால் உணர முடியாது என்பதையும் முன் வரிகளில் வள்ளல் பெருமானார் கூறுகிறார்.
சாதியு மதமுஞ் சமயமுங்காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ்ஜோதி
அகவல்
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே
சற்குருமணிமாலை.
எனவே சமயப்பற்றை நீக்கிவிட்டால் மட்டும் போதாது, சாதிப்பற்று, மதப்பற்றும் நீங்க வேண்டும், எனவே சன்மார்க்கிகள் சாதிப்பற்று, மதப்பற்று நீங்க பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளதாம்.
மேலும் திருவருட்பாவின் முக்கிய நோக்கம் சாதி, மதம், சமயங்கள் நீக்கி எல்லாம் உயிர்களிடத்தும் இறைவன் இருக்கிறார் என்ற உண்மையை உணர்த்துவதாம். மேலும் இந்த ஒருமைக்கு நாம் வரும் போது கருணை வடிவாகிய –தயா வடிவாகிய அருட்ஜோதி உள்ளும் புறமும் தோன்றி மரணமில்லா பெருவாழ்வை நமக்கு அளிக்கிறதாம்.
எனவே அகவல் படிக்கிறோம், திருவருட்பா படிக்கிறோம், தியானம் செய்கிறோம் என்பதோடு மட்டுமில்லாமல் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மூலம் சாதிப்பற்றை நீக்க பெரும் முயற்சி மேற்கொள்வோமாக. இதன் மூலம் மதப்பற்றும், சமயப்பற்றும் தானே நீங்கும்.
தகவல் உதவி:
1. எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
***********