அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
வள்ளலார் கூறிய அருள்நெறி- 1871
ஞானதேகத்தில் வள்ளல் பெருமானார் எழுதிய பாடல்களை மனித தேகத்தில் இருந்துக்கொண்டு குறை காண்பதும், தரம் பிரிப்பதும் குரு நிந்தையாகி தவகுறைவிற்கு மேலும் வழிவகுக்கும்.
எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானுடைய சத்திய நெறியை அனைவருக்கும் தெரிவிக்கும் வண்ணம் எம்மையும் ஒரு கருவியாக பயன் படுத்துங்கள் என்று அவரிடம் வேண்டுகோள் வைத்து தொழுது அவர் கூறிய அருள் நெறியை வருடம் 1871க்கு முன்னும் அதற்கு பிறகும் ஆய்வு செய்ய அவரிடமே கோரிக்கை வைக்கப்பட்டு இவ்வித விளக்கம் தரப்படுகிறது.
1. பொதுவாக வள்ளலாருடைய தனிநெறி வெளிப்பட்ட காலம் ஏப்ரல் 1871 என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுகின்றனர். எனவே அவருடைய தனிநெறி வர காரணம் யாது?
தனிநெறி என்பதை விட அருள் –கருணை-தயவு நெறி என்று சொல்லலாம்,
பேருற்ற வுலகிலுறு சமயமத நெறியெலாம்
பேய்பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென வுணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற்றங்கு மிங்கும்
போருற்றிறந்து வீண் போயினா ரின்னும் வீண்
போகாத படி விரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்தி யெல்லாம்
ஏறுற்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ
யென்பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிகவென் றிட்டனம் மனத்தில் வே
றெண்ணற்க வென்ற குருவே
இவ்வாறு இறைவன் தனக்கு இட்டப் பணியை பாடல்கள் மூலம் கூறி மக்களை சமய, மத, உணர்வு நீங்க பெரும் முயற்சி செய்தார், ஆனால் அக்காலத்தில் மக்களுடைய விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவு போதுமானதாக இல்லையாதலால் அவர்களால் முழு உண்மையை அறிய முடியவில்லை.
ஆகவே பின்னர் உரைநடையாக கருணை-தயவை வருடம் 1871 முதல் வலியுறுத்தினார், எனவே அவர் சன்மார்க்க பெரும் பதியை ஏப்ரல் 1871ம் வருடத்திற்கு பிறகு உணர வில்லை, அவர் சிறு வயதில் ஓதாமல் உணரும் போதே உணர்ந்தார், ஆனால் உரைநடை மற்றும் நேரடியான மக்கள் தொடர்பு 1871க்கு பிறகு வெளிப்பட்டது.
உதாரணத்திற்கு அவர் அருட்பெருஞ்சோதியை 2ம் திருமுறையில் பாடுகிறார்.
அடியார் நெஞ்சத்து அருட்பெருஞ்சோதி ஓர்
படிவமாகும் படம் பக்க நாதரே
நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
மிடியனேன் அருள் மேவ விரும்பிரோ
அருள்விடை வேட்கை இரண்டாம் திருமுறை 902
எனவே அருட்பெருஞ்சோதியை- சன்மார்க்க பதியை வருடம் 1871க்கு பிறகு உணர்ந்தார் என்று கூற இயலாது.
2. வள்ளலார் பேருபதேசத்தில் “இரண்டரை வருஷமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டியிருப்பார்கள். நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். மேலும் ...“சொல்ல வந்தேனே என்று உண்மை சொல்லப்புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை...” என்று கூறியுள்ளாரே?
விளக்கம்:
ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமான் தனது பாடல்கள் மூலம் புரட்சிகரமான கருத்துகளை கூறினாலும் அதனுடைய உட்கருத்தை மத நம்பிக்கை காரணமாக மக்கள் புரிந்துகொள்ளவில்லை, காரணம் இறையறிவு-வாலறிவு இல்லாமை மற்றும் வறுமை. ஆதலால் அருள் நிமித்தமாக தன்னைப்போல் அனைவரும் இறை உண்மையை உணர வேண்டும் என்று பேராவல் கொண்டார். எனவே நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள் , அருள் நிமித்தமாக ஒருவன் அனைத்தையும் கற்க இயலும், எனவே பிற உயிரிடத்தில் அன்பு,கருணை,தயவு காண்பியுங்கள், உங்கள் மாயை திரை விலகும், உண்மை புரியும் என்று செய்யுள் அல்லாது உரைநடை விளக்கத்தை இரண்டரை ஆண்டு காலம் செய்தார்.
3. ஸ்ரீ ஞானகுரு வள்ளலார் இயற்றிய முதல் ஐந்து திருமுறைகளை ஓத வேண்டாம் என்று கூறுவது சரியா?
இதற்கான பதில் எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவர்- ஞானகுருவை தொழுது வேண்டி இதே இணைய தளத்தில் முன்பே கூறப்பட்டுள்ளது, அவர் இயற்றிய அனைத்து பாடல்களும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் சாயலே! உதாரணத்திற்கு :
“எத்தேவரையும் நின் சாயயாய்ப் பார்த்ததே அன்றித் தலைவ, வேறு எண்ணியது உண்டோ?”
வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
மன்னிய உண்மை ஒன்றென்றே
எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
திறையும்வே றெண்ணிய துண்டோ
அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
தெளிவித்துக் காப்பதுன் கடனே
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நீ எம்பிள்ளை ஆதலால், அவ்வாறு எண்ணவில்லை” என விடையளித்திருக்கிறார்.
அருட்பெருஞ்சோதி ஆண்டவரே இதற்கு பதில் அளித்து விட்டார் என்பதால் நம்மவர்கள் இதற்கு விடையளிப்பது அறியாமையேயாகும்.
4. வள்ளற் பெருமான் சுத்த சன்மார்க்கத்தில் கண்ட கடவுள் வெளிப்பட்டது ஏப்ரல் 1871 பிறகு என்பது சரியா?
சத்திய பெரு விண்ணப்பத்தில் கூறுகையில்:
இயற்கையுண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில், இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய், இயற்கையின்ப நிறைவாகியோங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக் கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுள் என்கிறார்.
இக்கருத்தையே மூன்றாம் திருமுறையில் :
நாதமும் கடந்து நிறைந்து நின்மயமே
நான் என அறிந்துநான் தானாம்
பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப்
பேதையேன் பிடிப்பதெந் நாளோ
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர்
இதயமும் ஏழையேன் சிரமும்
வேதமும் தாங்கும் பாதனே
உரை
நாதம் முதலிய முப்பதாறு தத்துவங்களை உடைய சிவதத்துவத்திற்கும் அப்பாலாய் உள்ள பர சிவம்-நின்மயம், அதனை அடைய அவத்தைகள் நீங்க வேண்டும் அதாவது பதி, பசு, பாசம் , நீங்கும் தன்மையில் மௌனராச்சியம் ஏற்படுமாம். ஆன்மா சிவ மயமாதல்- நான் என்ற அவஸ்தை நீங்கும்.
ஏதமும்- காமம், குரோதம் விடுத்தோர்களாலும்,மற்றும் சமய வாதம்- (ஓது சமயங்களின் பொருள் ஒன்றே என உணராமல் இருப்பவர்கள்) விடுத்தோர்களாலும் மட்டுமே பரம்பொருளை உணர முடியும் என்பதை விநாயகப்பெருமான் மூலம் உணர்த்துகிறார். இங்கே விநாயகப்பெருமானையும் பரம்பொருள்- அருட்பெருஞ்சோதி ஆண்டவராகவே பார்க்கிறார்.
மேலும் ஒரு பாடல் 2526.
மருளுறு மனமும் கொடியவெங் குணமும்
மதித்தறி யாததுன் மதியும்
இருள் உறு நிலையும் நீங்கிநின் அடியை
எந்தநாள் அடைகுவன் எளியேன்
அருள் உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே
அமர்ந்தசிற் பர ஒளி நிறைவே
உரை
அருள் நிறைந்த ஒளிப்பொருளாய் அந்த ஒளிக்குள் உறைகின்ற ஞான ஒளி- பர ஒளியாக இருக்கின்ற தேவே- நிறைவே, - சமய நெறியாள் அறியமுடியாத சித்தி விநாயகனே !
உன்னை மருள் உறு மனம் அதாவது கொடுமையான குணம் மற்றும் அறியாமையால் இருண்ட மனநிலையையும் நீங்கி நினது திருவடியை எளியனாகிய யான் அடைவது எப்போது?
மேலும் இங்கே கவனிக்கவும்:
(பேருபதேசத்தில் சொன்ன வரிகளும் இப்பாடலில் உள்ள பொருளும் ஒன்றே.)
இயற்கையுண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளி யில் , இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட் பெருஞ் ஜோதி சொரூபராய், என்பது
அருள் உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே
அமர்ந்தசிற் பர ஒளி நிறைவே ” என்பதிலும்
நாதமும் கடந்து நிறைந்து நின்மயமே
நான் என அறிந்துநான் தானாம்
பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப்
பேதையேன் பிடிப்பதெந் நாளோ
மௌனராச்சியம் என்பது சிவானுபவ வெளி, ஆகவே அவர் ஏப்ரல் 1871க்கு பிறகு தான் இவ்வுண்மையை புரிந்துக்கொண்டார் என்பது நம்முடைய அறியாமையே .
நிற்க,
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி
நான் உரைக்கும் அன்று நாட்டீர் நான் – ஏன் உரைப்பேன்
நான்ஆர் எனக்கென ஓர் ஞான உணர்வேது சிவம்
ஊன் நாடி நில்லா உழி.
திருவருட்பா-5504
என்று கூறுவதால் அனைத்து பாடல்களுமே இறையால் தந்தருளுப்பெற்ற தெய்வப் பாடல்கள், எனவே இதனை நாம் தரம் பிரிக்க முயன்றால் ஆணவம் நம்மையறியாமலே நம்மை சுற்றிக்கொள்ளும். மேலும் இப்பாடல்கள் அனைத்தும் அவருடைய ஞான வாழ்வில் பரம்பொருளால் அருளப்பெற்றது என்பதை இப்பாடல் தெளிவாக அறிவுறுத்துகிறது.
ஆகவே வருடம் ஏப்ரல் 1871க்கு பிறகு இறை உண்மையை புரிந்துக்கொண்டார் என்பதை பேருபதேசத்தை மட்டும் வைத்துக் கொண்டு சொல்வது சரியன்று.
5. வள்ளல் பெருமானார் வருடம் 1871க்கு பிறகு வெளியிட்ட செய்திகளில் அவர் எழுதிய திருவருட்பாவை படிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கான விளக்கம் என்ன?
திருவருட்பா முதல் ஐந்து திருமுறையிலும் சாதி, சமயத்தை எதிர்த்தும், ஆன்ம நேய ஒருமைப்பாடு மூலம் மிக எளிதாக இறைவனை தரிசிக்கலாம் என்று கூறினாலும், மக்கள் அதில் உள்ள உட்கருவை மறந்து வெறும் வழிப்பாட்டு பாடலாகவே பாடத்தொடங்கி சம்பிரதாயமாக திருவருட்பாவை கையாண்டது அவருக்கு பிடிக்காமல் போயிற்று.
எத்தனை முறை கூறினாலும் மக்கள், சாதி, சமயத்தை விட்டு வெளிவருவதாக இல்லை. காரணம் அவர்களது அசுத்த மாயத்திரை எல்லாவற்றையும் தடுத்தது. மேலும் அவர் எழுதிய பாடல்கள் எல்லாம் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் சாயலே! இருந்தும் மக்கள் அவர் எழுதிய பாடல்களில் உள்ள சமய தெய்வங்களின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரிவினைக்கு வழிவகுத்தனர். ஆகவே வள்ளல் பெருமானார் அதனை தடுக்கும் முயற்சியாக அவர் எழுதிய ஐந்து திருமுறைகளையும் ஓத வேண்டாம் என்று கூறினார்.
மேலும் தனக்கு அப்பொழுது அற்ப அறிவு இருந்தது என்று கூறியதற்கு காரணம். தன்னை மதியாமல் இருந்தது- தற்சுதந்திரமின்மை, மற்றும் அகங்கார ஒழிவே காரணம் எனவே நாம் தவறாக பொருள் கொள்ளாமல் அவருடைய செம்மையான மன நிலையை உணர வேண்டும்.
6. வள்ளற்பெருமான் கூறுகையில் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலே, அந்த லட்சியம் தூக்கி விடவில்லை” என்னை ஏறாத நிலை மேல் ஏற்றி வைத்தது தயவு என்கிறார்களே?.
உண்மை தான் சமய இலட்சியம் கூடாதாம், எவ்வுயிரையும் தம்முயிர் போல் பாவிக்கும் குணமே சுத்த சன்மார்க்கத்திற்கு அவசியமாம். இதனையே வள்ளல் பெருமானார் :
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிர்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்... என்கிறார்.
இறைவனே தனக்கு உரைத்ததாக கூறியது:
கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் -
பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்
மற்றும்
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான்
தன் உடலும் தன்பொருளும் தன் உயிரும்-என்னிடத்தே
தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்
வந்தான் வந்தான் உள் மகிழ்ந்து.
சிவமாக்கிக்கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே
நவநோக்களித்தான் என்று ஊதூது சங்கே
நான் அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே
அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருட் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு
மரணந்த விர்ந்தேன் என்று அறையப்பா முரசு
எனவே அவருடைய பேதமற்ற எண்ணமே அவரை ஏறாதநிலை மேல் ஏற்றி வைத்தது. பேதமற்ற எண்ணத்தில் ஒருமையான தயவு இருக்குமாம். ஆகவே உட்பொருளை நன்கு உணர வேண்டியுள்ளதாம்.
முடிவுரை:
உலகியியலில் அருள் நிமித்தமாக அருட்பெருஞ்சோதி ஆண்டவரை உணர்ந்தால் மட்டுமே அவர் எழுதிய பாடல்களுக்கு விளக்கம் தர இயலுமாம், இங்கே குறிப்பிட்ட பாடல்கள், விளக்கங்கள் திருவருட்பா என்கிற அண்டத்தில் ஒரு சிறு புள்ளியாம், எனவே அன்பர்கள் உண்மை பொருள் உணர அவர் எழுதிய அனைத்து பாடல்களையும் அவரருளால் படித்தால் மட்டுமே உண்மையை உணர இயலுமாம், இல்லையெனில் விவாதங்கள் மருவி ஆணவ மாயை பற்றிக்கொள்ளுமாம், அருள்நெறியை உணராமல் காலம் விரயமாகுமாம். ஆகவே எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு இயற்றிய பாடல்கள் அனைத்தும் திருவருளாலே இயற்றப்பட்டது என்பதை சத்தியமாக உணர்ந்து அருட்பெருஞ்சோதி ஆண்டரை குருவாக எண்ணும் போது அவர் எழுதிய பாடல்களுக்கு உண்மை விளக்கம் அவரருளால் கிடைக்கப்பெறுமாம்.
ஆகவே அவர் எழுதிய பாடல்களை புற அறிவால் தரம் பிரித்து புற விளக்கம் தேடி குரு நிந்தை செய்யாதீர். இந்த மண்ணுலகத்திற்கே குருவாய் அமர்ந்த சிதம்பரம் ராமலிங்கம் சிறு வயதில் ஓதாமலே உணர்ந்து அருட்பெருஞ்சோதியின் தரிசினத்தையும் பெற்றார், அவர் எழுதிய அனைத்து பாடல்களும் அருட்பெருஞ்சோதியின் சாயலே என்று அவரே சத்தியம் செய்கிறார்.
தெளிவித்துக் காப்பதுன் கடனே!
எனவே ஞானதேகத்தில் அவர் எழுதிய பாடல்களை மனித தேகத்தில் இருந்துக்கொண்டு குறை காண்பது குருநிந்தையாகி தவகுறைவிற்கு மேலும் வழிவகுக்கும்.
இக்கட்டுரை யார் மனதையும் புண்படுத்துவதற்காகவோ , குறைசொல்வதற்காகவோ எழுதப்பட வில்லை. திருவருள் சம்மதமாக எழுதப்பட்டது.
தகவல் உதவி
1. எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி