Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
“நான்” என்ற அகங்காரம் எவ்வாறு ஒழியும்?

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நான் என்ற அகங்காரம் எவ்வாறு ஒழியும்?

- சன்மார்க்க வழியில் ஓர் ஆய்வு

நம்முள் இருக்கும் சிவம் எல்லா உயிர்களிடத்தும் இருக்கின்றார் என்ற உண்மையை உணரும் போதே நான் என்ற அகங்காரம் ஒழிந்து விடுகிறதாம். இந்த எண்ணம் மேலோங்கும் போது தயவிற்கு ஒருமை வந்துவிடுகிறதாம். அப்பொழுது நான்” என்ற அகங்காரம் இல்லாமலே போய் விடுகிறதாம்.

-அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை

ஆன்மீக வாழ்வில் நான்” என்ற அகங்கார திரையே இறைவனை காணுவதற்கு எப்பொழுதும் தடையாக இருக்கிறது. இந்த அகங்கார திரையை நீக்குவதற்காகவே வள்ளல் பெருமானார் நம்மைப்பற்றியும், அண்டத்தைப் பற்றியும் விசாரம் செய்யும் படி கூறுகிறார். அவ்வாறு விசாரம் செய்யும் போது இறைவனில் பெருமையையும் நம்முடைய சிறுமையையும் உணர முடியும் இதுவே நான் என்ற அகந்தையை அறுக்கும் முதல் சாதனமாகும் என்று கூறுகிறார்.

பொதுவாக நான் அகந்தையை விட்டுவிட்டேன்” என்றும், என்னிடம் அகந்தை சிறிது அளவும் இல்லை” என்று சொன்னாலும் அதிலும் அகந்தை வெளிப்படவே செய்கிறது.

அப்படியென்றால், நான்” என்ற அகங்காரத்தை ஒழிக்க வழியே இல்லையா என்றால் சாஸ்திரங்களும், புராணங்களும்,சித்தர்கள் பாடல்களும் பல தரப்பட்ட சாதனங்களை கூறுகின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரு கால கட்டத்திற்கு பின் தோல்வியையே சந்தித்திருக்கின்றன.

உதாரணத்திற்கு நான் யார்? என்ற விளக்கத்தைத் தேடி அகத்தாய்வு மேற்கொள்ளும் போது சிவம் என்று தெரிய வருமாம், சிவம் என்ற எண்ணத்தில் தவ வாழ்க்கையை மேற்கொள்ளும் போது சிவத்திற்கும் நமக்கும் வித்தியாசங்கள் இல்லாமல் சிவானுபவத்தை பெற முடியாமலே போய்விடுகிறதாம்.

இது எவ்வாறு ஏற்படுகிறதெனில் பிற உயிர்களிடத்தில் உள்ள சிவத்தை பார்க்காததினால் மட்டுமே நான் என்ற அகங்காரம் ஏற்படுகிறதாம், பிற உயிர்களிடத்து சிவத்தை பார்த்தால் நான் என்ற எண்ணம் வெளி வராதாம். தவ வாழ்வும் சிறக்குமாம். அதனால் தான் தாயுமானவரும் :

எவ் உயிரும் தம் உயிர் போல் எண்ணும் தபோதனர்கள்

செவ்வறிவை நாடிமிகச் சிந்தை வைப்பது எந்நாளோ.

திருமந்திரமும்:

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவதாரும் அறிகிலார்

அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

என்று கூறுகிறது.

இதனையே எளிதாக யாவரும் புரிந்துக்கொள்ளும் பொருட்டு எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானார் எவ்வுயிரையும் தம்முயிராக பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார், மேலும் நம்முள் இருக்கும் சிவம் எல்லா உயிர்களிடத்தும் இருக்கின்றார் என்ற உண்மையை உணரும் போதே நான் என்ற அகங்காரம் ஒழிந்து விடுகிறதாம். இந்த எண்ணம் மேலோங்கும் போது தயவிற்கு ஒருமை வந்துவிடுகிறதாம். அப்பொழுது நான் என்ற அகங்காரம் இல்லாமலே போய் விடுகிறதாம்.

இதனை வள்ளல் பெருமானார் கீழ் வருமாறு கூறுகிறார்:

நின்நிலையை என் அருளால்

நீ உணர்ந்து நின்று அடங்கில்

இந்நிலையே அந்நிலையை

எய்துதி காண்..

மற்றும்

இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்...

மற்றும்

நினைந்து , நினைந்து-பிற உயிர்களை , உணர்ந்து, உணர்ந்து- அந்த உயிர் படும் துன்பங்களை , நெகிழ்ந்து, நெகிழ்ந்து- மனம் உருக அந்த உயிர்கள் படும் துன்பங்களை நீக்கினாலும் மல குணம் நீங்குமாம்.

இவ்வாறு சன்மார்க்கம் என்ற தவ வாழ்க்கை கருணை-தயவு என்ற சாதனம் மூலம் இறைவனை அங்கு இங்கு இல்லாத படி எங்கும் பார்க்கிறதாம், எல்லா உயிர்களிடத்தும் பார்க்கிறதாம். எனவே மல குணம் முற்றிலுமாக நீங்கி சன்மார்க்க பேரொளியை தரிசித்து சிவ ஞானம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறதாம்.

இதனையே திருமந்திர பாடலும்:

தன்னை அறிந்து சிவனுடன் தானாக

மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்

பின் அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி

நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே

திருமந்திரம்

இங்கே சிவனுடன் தானாக என்பது- எல்லா உயிர்களிடத்தும் இறையை காணும் நிலையில் தான் வேறு, பார்க்கப்படும் உயிர் வேறு, என்று இல்லாமல் இருவினைஒப்பாகிமல பரிபாகம் பொருந்தி இருக்கின்றதாம், எனவே எவ்வுயிரையும் தம்முயிர்போல் பார்க்கும் குணத்தால் மல குணம் என்கிற ஆணவம், கன்மம், மற்றும் மாயை நீங்குகிறதாம், இந்நிலையில் இருப்பவர்களுக்கு நான் என்கிற உணர்வு ஏற்படுவதேயில்லையாம், மேலும் இவர்கள் சிவானுபத்தை தன் நிலையில் இருந்து உணர முடிகிறதாம். இவ்வனுபவத்தை தான் பெற்றுக்கொண்டதை கீழ் வருமாறு எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளல் பெருமானார் விளக்குகிறார்.

சிவமாக்கிக்கொண்டான் என்று ஊதூது சங்கே

சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே

நவநோக்களித்தான் என்று ஊதூது சங்கே

நான் அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே

************

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

தகவல் உதவி:

1. எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியின் தனிப்பெருங்கருணை.

************