Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
வள்ளல் பெருமானார் தனக்கு “அற்ப அறிவு” இருந்தது என்று கூறியதன் உண்மை விளக்கம்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

வள்ளல் பெருமானார் தனக்கு “அற்ப அறிவு” இருந்தது என்று கூறியதன் உண்மை விளக்கம்

எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளல் பெருமானார் தனது பேருபதேசத்தில் தனக்கு அப்பொழுது அற்ப அறிவு இருந்தது என்று கூறியதற்கு காரணம் தன்னை மதியாமல் இருந்தது- தற்சுதந்திரமின்மை, மற்றும் அகங்கார ஒழிவே காரணம். எனவே நாம் ஒரு போதும் உண்மையறியாது தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது. அவ்வாறு பொருள் கொள்வது குரு நிந்தையாகிவிடும்.

அன்புடையீர்!

எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளல் பெருமானார் தனது பேருபதேசத்தில் னக்கு அப்பொழுது அற்ப அறிவு இருந்தது என்று கூறினார். எனவே பலர் இதனைத் தவறாக எடுத்துக்கொண்டு அவர் அருளிய முதல் ஐந்து திருமுறைகளையும் ஓத வேண்டாம், படிக்க வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.

வள்ளல் பெருமானார் இவ்வாறு கூறியதற்கு காரணம் என்ன? என்று தினமும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியைத் துதிக்கும் போது சில கருத்துகள் வெளிவந்தன. அவற்றின் தொகுப்பை இப்போது காணலாம்.

· மக்களிடம் அறியாமை காரணமாக, சாதி, மத சண்டை அதிகமாக இருந்த காலத்தில் அதனைப் போக்கி, ஆன்ம நேய ஒருமைப்பாட்டைக் கருணை மூலம் கடைப்பிடித்து தன்னைப்போல் அனைவரும் ஏறாத நிலை மேல் ஏற வேண்டும், பரம்பொருளைக்கண்டு அனுபவிக்க வேண்டும், சாகா வரம் பெற வேண்டும் என்பது அவருடைய ஆவலாம்.

· திருவருட்பா முதல் ஐந்து திருமுறையிலும் சாதி, சமயத்தை எதிர்த்தும், ஆன்ம நேய ஒருமைப்பாடு மூலம் மிக எளிதாக இறைவனைத் தரிசிக்கலாம் என்று கூறினாலும், மக்கள் அதில் உள்ள உட்கருவை மறந்து வெறும் வழிப்பாட்டு பாடலாகவே பாடத்தொடங்கி சம்பிரதாயமாக திருவருட்பாவை கையாண்டது அவருக்கு பிடிக்காமல் போயிற்று.

· எத்தனை முறை கூறினாலும் மக்கள், சாதி, சமயத்தை விட்டு வெளிவருவதாக இல்லை. காரணம் அவர்களது அசுத்த மாயத்திரை. அத்திரைகளை அருள் நிமித்தமாகப் போக்க வேண்டும் என்று திருவுளம் கொண்டார்

· அவர் எழுதிய பாடல்கள் எல்லாம் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் சாயலாக இருந்தும் மக்கள் அதனை நன்கு உணராமல் அவர் எழுதிய பாடல்களில் உள்ள சமய தெய்வங்களின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரிவினைக்கு வழிவகுத்தனர். ஆகவே வள்ளல் பெருமானார் அதனைத் தடுக்கும் முயற்சியாக அவர் எழுதிய ஐந்து திருமுறைகளையும் ஓத வேண்டாம் என்று கூறினார்.

· மேலும் தனக்கு அப்பொழுது அற்ப அறிவு இருந்தது என்று கூறியதற்கு காரணம் தன்னை மதியாமல் இருந்தது- தற்சுதந்திரமின்மை, மற்றும் அகங்கார ஒழிவே காரணம். எனவே நாம் தவறாகப் பொருள் கொள்ளாமல் அவருடையச் செம்மையான மன நிலையை உணர வேண்டும்.

· எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளல் பெருமானார் சிறுவயதில் ஓதாமலே அனைத்தையும் உணர்ந்தார். அகஸ்தியர் பாடல்கள், சித்தர்கள் பாடல்கள், திருவாசகம், திருமந்திர பாடல்களையும், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களுக்கும் பொருள் கூறும் அருளறிவு-ஆன்ம அறிவு- வாலறிவை பெற்றிருந்தார்.

· சிறுவயதில் ஓதாமலே உணர்ந்த வள்ளலாருக்கு இறைவன் ஒன்று என்பது பேருபதேசம் செய்யும் காலத்தில் மட்டுமே தெரிய வந்தது என்று பொருள் கொள்வது நமது அறியாமையே.

· இன்றைக்கு தனக்கு முன் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு அன்பு செய்வாரை சிவன் அறிவன், அன்பு செய்யுங்கள், கருணை- தயவு மட்டுமே ஏறாத நிலைமிசை ஏற்றி வைக்கும் என்று எத்தனை அருளாளர்கள் கூறுவார்கள். என்னை கும்பிட்டால் இறைவனைத் தரிசிப்பீர்கள், அனைத்தையும் இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறான், உங்களுக்கு சொர்க்க வாழ்வைத் தருவேன் “என்னை கும்பிடுங்கள்”, என் காலை கழுவுங்கள், என்று தனக்கு முன் முட்டாள்களை வளர்க்கும் அருளாளர்களே அதிகம்.

· மேலும் எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானார் தனக்குச் சிலை வைப்பதையே விரும்பாதவர். பொன்னாலான தேகம் தனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்தவர்.

· அத்தகைய உத்தம மனிதர் தனக்கு அற்ப அறிவு இருந்ததாகக் கூறினார் என்றால் அவருடையத் தற்சுதந்திரமின்மையை எவ்வாறு போற்றுவது? .......... என்னவென்று கூறுவது..?

உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் ,உண்மையறியாது உரைநடையில் உள்ள வார்த்தைகளுக்குப் புறத்தில் பொருள் கொள்ளாதீர்கள்.

அவர் எழுதிய அனைத்துப் பாடல்களும் தமிழ் வேதமேயாகும். அகப்பொருளைத் தேடுங்கள். உண்மை பட்டப்பகல் வெளிச்சமாகத் தெரிய வரும்.

உதாரணத்திற்கு சில:

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்

இயல் உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்

“மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்

விளம்புகின்றேன்” ........என்ற திருவருட்பா பாடல் வரிகள் அற்புதமாகப் பொருள் தருகின்றது.

மேலும்,

வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
மன்னிய உண்மை ஒன்றென்றே
எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
திறையும்வே றெண்ணிய துண்டோ.......

மற்றும்

நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி

நான் உரைக்கும் அன்று நாட்டீர் நான் ஏன் உரைப்பேன்

நான்ஆர் எனக்கென ஓர் ஞான உணர்வேது சிவம்

ஊன் நாடி நில்லா உழி.

திருவருட்பா-5504

ஆகவே திருவருட்பா பாடல்கள் அனைத்தும் இறைவனால் தந்தருளப்பெற்றது. அவர் பாடிய கந்தக்கோட்டத்துப் பாடலும் மதத்தைத் தழுவி எழுதப்படவில்லை, மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றே கூறுகிறார்.

விநாயகர் பாடலிலும்:

அருள் உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே

அமர்ந்தசிற் பர ஒளி நிறைவே

வெருள் உறு சமயத் தறியொணாச் சித்தி

விநாயக விக்கினேச்சுரனே

மற்றும்

மகாதேவ மாலையிலும் கூட பரம்பொருளை மையப்படுத்தியே பாடுகிறார்:

அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்

அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே!

பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
புறமாகி அகமாகிப் புனித மாகி
மன்னாகி மலையாகிக் கடலு மாகி
மதியாகி ரவியாகி மற்று மாகி
முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே

அரிதாகி அரியதினும் அரிய தாகி
அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே

"எனவே வள்ளல் பெருமானார் மத நம்பிக்கையும், சமய நம்பிக்கையும் வேண்டாம் என்று அந்த அந்த கடவுள் பெயரால் கூறுவதை இங்கு நன்கு உணர வேண்டும்".

ஆகவே அவர் பாடிய அனைத்துப் பாடல்களும் அருட்பெருஞ்சோதியைக் கண்டு, உணர்ந்தே பாடுகிறார். எனவே நாம் ஒரு போதும் உண்மையறியாது தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது. அவ்வாறு பொருள் கொள்வது குரு நிந்தையாகி நமக்கு சாபக்கேடாகவும் மாறிவிடும்.

*****************

தகவல் உதவி:

1. எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப் பெருங் கருணை.

3 Comments
Muthukumaaraswamy Balasubramanian
ஐயா இந்தக் கருத்தை எழுதியவரை நான் அவர் காலில் விழுந்து வணங்குகிறேன்.பலமுறை .அருமையான விளக்கம்.என் சிற்றறிவுக்கு எட்டியதை நானும் சொல்ல விழைகிறேன். இந்த வார்த்தைகளை வள்ளலார் எப்போது சொன்னார் ஏன் சொன்னார் என்றும் சிந்திக்கவேண்டும். வள்ளலார் சன்மார்க்க கொடி கட்டி அன்று செய்த பேருபதேசத்தின்போது சொன்னார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது அங்கே கூச்சலும் குழப்பமும் உண்டாயிற்று. அதை
செய்தது யார் என்று பார்த்தார். அங்கே இருந்த சில சைவர்களும் சில புலவர்களும் என்று கண்டார்.அவர்களுக்கு அறிவுரை கூறவே அவர் அவ்வாறு சொல்லி இருக்கின்றார்.நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் என்றும் கோரியுள்ளார்.அது மட்டுமா இன்னும் எவ்வளவோ பாடல்களில் தன்னை மிகவும் தாழ்த்திப் பாடியுள்ளார். அதை எல்லாம் கூட உண்மைதான் அவரே சொல்லிவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமா? அவர் ஞானத்தோடு பிறந்தவர். அவருக்கா அற்ப அறிவு ? அவர் வார்த்தைகள் அனைத்தும் நாயகன் வார்த்தையே.இதை நம்புங்கள் என்று அவர் சொல்லியுள்ளார்.அவரை நாம் நம்முடைய வாயால் பழி சொல்லி பாவத்தை சேர்த்துக்கொள்ள வேண்டாம்.நன்றி.
Tuesday, May 3, 2011 at 08:38 am by Muthukumaaraswamy Balasubramanian
Muthukumaaraswamy Balasubramanian
ஐயா இந்தக் கருத்தை எழுதியவரை நான் அவர் காலில் விழுந்து வணங்குகிறேன்.பலமுறை .அருமையான விளக்கம்.என் சிற்றறிவுக்கு எட்டியதை நானும் சொல்ல விழைகிறேன். இந்த வார்த்தைகளை வள்ளலார் எப்போது சொன்னார் ஏன் சொன்னார் என்றும் சிந்திக்கவேண்டும். வள்ளலார் சன்மார்க்க கொடி கட்டி அன்று செய்த பேருபதேசத்தின்போது சொன்னார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது அங்கே கூச்சலும் குழப்பமும் உண்டாயிற்று. அதை
செய்தது யார் என்று பார்த்தார். அங்கே இருந்த சில சைவர்களும் சில புலவர்களும் என்று கண்டார்.அவர்களுக்கு அறிவுரை கூறவே அவர் அவ்வாறு சொல்லி இருக்கின்றார்.நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் என்றும் கோரியுள்ளார்.அது மட்டுமா இன்னும் எவ்வளவோ பாடல்களில் தன்னை மிகவும் தாழ்த்திப் பாடியுள்ளார். அதை எல்லாம் கூட உண்மைதான் அவரே சொல்லிவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமா? அவர் ஞானத்தோடு பிறந்தவர். அவருக்கா அற்ப அறிவு ? அவர் வார்த்தைகள் அனைத்தும் நாயகன் வார்த்தையே.இதை நம்புங்கள் என்று அவர் சொல்லியுள்ளார்.அவரை நாம் நம்முடைய வாயால் பழி சொல்லி பாவத்தை சேர்த்துக்கொள்ள வேண்டாம்.நன்றி.
Tuesday, May 3, 2011 at 08:51 am by Muthukumaaraswamy Balasubramanian
Muthukumaaraswamy Balasubramanian
குமரேசன் ஐயா அவர்களே உங்களை மீண்டும் வணங்குகிறேன். சன்மார்க்க தீட்சை முடிவுரை என்ற ஆய்வுக் கட்டுரையில் ஜோதி ராமலிங்கம் என்பவர் ஐந்து திருமுறைகளிலும் வள்ளலார் கூறியிருப்பதை வேண்டாம் என்றும் ஆறாம் திருமுறை மட்டும் போதும் என்ற கருத்ததை வெளியிட்டுள்ளார்.இவ்வாறே மதுரையில் இருந்தும் ராமன் என்பவர் ஐந்து திருமுறைகளை ஒதுக்குங்கள் என்று தை பூசத்தின் போதும் மற்ற நாட்களிலும் சிறு சிறு புத்தகங்களாக வெளியிடுகிறார். வள்ளலாரின் மீதே குறை காணும் இவர்களைப் பற்றி நாம் என்ன
சொல்வது?சமயங்களை சாடுகிறோம். ஆனால் எந்த சமயத்தாரவது தங்கள்
தலைவர்களை குறை சொல்லுகிறார்களா ?சுத்த சன்மார்க்கம் பேசும் நாம் சமய வாதிகளிடம் உள்ள பண்பாடும் இல்லாமல் இருப்பது சரியா? இதை நான் யாரையும் குறை சொல்ல எழுதவில்லை. வள்ளலாரை அவர் கருத்தை யாரும் குறை சொல்லக்கூடாது என்பதற்காகவே எழுதுகிறேன் .தவறானால் என்னை மன்னிக்கவும்.
Tuesday, May 3, 2011 at 09:05 am by Muthukumaaraswamy Balasubramanian