Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
வள்ளல் பெருமானார் ஆறாம் திருமுறையில் மட்டுமே பரம்பொருளை உணர்ந்தாரா? ஆய்வுக் கட்டுரை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளல் பெருமானார் ஆறாம் திருமுறையில் மட்டுமே பரம்பொருளை உணர்ந்தாரா?

அன்புடையீர்!

சுத்த சன்மார்க்க நிலை சமயம் கடந்தும், சமய நோக்கு இல்லாமலும் வரும், எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல்பெருமானார் துரிசு நீக்குதல், பக்குவம் வருவித்தல் மூலம் ஒவ்வொருவருக்கும் சுத்த சன்மார்க்க நிலையின் உன்னதத்தை விளக்கிக்கொண்டிருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை,

********

தற்போது வள்ளலார் ஆறாம் திருமுறையில் மட்டுமே அருட்பெருஞ்சோதியைக் கண்டுள்ளார் என்பதை பலர் தெரிவிக்கின்றனர். முதல் ஐந்து திருமுறைகளில் கூட சாதி சமயத்தைச் சாடிய பாடல்களும் உள்ளது, நிறையப் பாடல்கள் அருட்பெருஞ்சோதியை உணர்ந்ததாகவும் உள்ளது.

எனவே சத்திய விண்ணப்பத்தை மட்டும் வைத்துக்கொண்டும், என்னை ஏறாத நிலைமிசை ஏற்றி வைத்தது தயவு என்று கூறியதன் மூலமும், அவருடைய கடைசிக் காலத்தில் மட்டுமே அவர் உண்மையை உணர்ந்தார் என்று கூறுவதும் சரியானது இல்லை, அவர் சிறு வயதில் அனைத்தையும் ஓதாமலே உணர்ந்தார், கடவுள் ஒன்று என்பதையும் உணர்ந்திருந்தார்.

ஆன்ம நேய ஒருமைப்பாட்டை மறந்து ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டும் நோக்கில் இருந்தப்போது, முதல் ஐந்து திருமுறைகளும் அதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது என்பது சுவாமிகளின் எண்ணமாக இருந்திருக்கலாம். ஏனெனில் முதல் ஐந்து திருமுறைகள் பல்வேறு காலக் கட்டங்களில் சிலரின் வேண்டுகோள் படியும் சில பாடல்களைப் பாட நேர்ந்தது. உதாரணத்திற்கு சிங்கபுரி பதிகம் அவருடைய தமயனாரின் வேண்டுகோளுக்கு இணங்கப் பாடினார், கந்தக் கோட்டத்து பாடல்களும் அவ்வாறே, எனவே எவ்விதத்திலும் அவருடைய பாடல்கள் மத நம்பிக்கைக்கு ஊன்றுக்கோளாக அமைந்து விடக்கூடாது என்பது அவரின் நோக்கமாக இருந்திருக்கும்.

அதற்காகத்தான் சுவாமிகள் சமயங்கள், மதங்கள்,மார்க்கங்கள் முதலியவற்றில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்கிறார். அவருடைய தலையாயப் பணி ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உணர்த்துவது தான். பரம்பொருளே அவ்வாறு உணர்த்தியதாகவும் கூறுகிறார். அதற்காக அவர் பல்வேறு முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் என்பதும் அவரது பாடல்கள் மூலமே நமக்கு தெரிய வருகிறது.

உதாரணத்திற்கு

ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் பர ஒளியை- அருட்பெருஞ்சோதி ஆண்டவரை நான்காம் திருமுறையில் பாடியுள்ளார்.

என்னிருகண் காள் உமது பெருந்தவம் எப்

புவனத்தில் யார்தான் செய்வர்

முன்னிருவர் காணாமல் அலைந்தனரால்

இனுங்காண முயலா நின்றார்

நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே

ஓரிடத்தோர் நாள் ஆதித்தர்

பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப்

பார்த்துயர்ந்தீர்ப் பண்பினீரே

இறையனுபவத்தை இறைவனே தனக்குத் தந்ததாகப் பெருமானார் கூறுகிறார்.

அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்

ஆடுகநீ வேண்டிய வாறாடுக இவ்வுலகில்

செஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்

திருநடங்கண் டன் புருவாய்ச் சித்தசுத்தனாகி

எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே

இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்

துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத்தரசே

துரியநடுவே இருந்த சுயஞ்ஜோதி மணியே

-ஐந்தாம் திருமுறை 3047

இது போல் சிறு பருவத்தில் ஆட்கொள்ளப் பெற்றது, ஓதாதுணர்ந்தது, திருவடி தீக்கை, இறைவனால் மகனே என அழைக்கப் பெற்றது, போன்ற பல்வேறு பாடல்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் முதல் திருமுறையில் 16 இடங்களிலும், இரண்டாம் திருமுறையில் 28 இடங்களிலும், மூன்றாம் திருமுறையில் 21 இடங்களிலும், நான்காம் திருமுறையில் 8 இடங்களிலும், ஐந்தாம் திருமுறையில் 14 இடங்களிலும் இறைவன் ஜோதியாக இருப்பதாக பாடியுள்ளார்

மேலும் எல்லாம் வல்ல பரம்பொருள் அவருக்கு இட்டப் பணியை இவ்வாறு கூறுவதால்

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்தி யெல்லாம்

ஏறுற்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ

யென்பிள்ளை யாதலாலே

இவ்வேலை புரிகவென் றிட்டனம் மனத்தில் வே

றெண்ணற்க வென்ற குருவே

இப்பணியை செவ்வனே செய்யும் பொருட்டு கருணை-தயயையை தவமாக வலியுறுத்தினார்.

அவர் பாடிய மூன்றாம் திருமுறை, சித்தி வினாயகர் பதிகத்திலும் கூட சாதி சமய மறுப்பு, ஆன்மநேய ஒருமைப்பாடு அடங்கியுள்ளது.

உதாரணத்திற்கு

மூன்றாம் திருமுறை 22.சித்தி விநாயகர் பதிகம்

நாதமும் கடந்து நிறைந்து நின்மயமே

நான் என அறிந்துநான் தானாம்

பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப்

பேதையேன் பிடிப்பதெந் நாளோ

ஏதமும் சமய வாதமும் விடுத்தோர்

இதயமும் ஏழையேன் சிரமும்

வேதமும் தாங்கும் பாதனே சித்தி

விநாயக விக்கினேச் சுரனே!

உரை:

நாதம் முதலிய முப்பதாறு தத்துவங்களை உடைய சிவதத்துவத்திற்கும் அப்பாலாய் உள்ள பர சிவம்-நின்மயம், அதனை அடைய அவத்தைகள் நீங்க வேண்டும் அதாவது பதி, பசு, பாசம் , நீங்கும் தன்மையில் மௌனராச்சியம் ஏற்படுமாம். ஆன்மா சிவ மயமாதல்- நான் என்ற அவஸ்தை நீங்கும்.

ஏதமும்- காமம், குரோதம் விடுத்தோர்களாலும்,மற்றும் சமய வாதம்- (ஓது சமயங்களின் பொருள் ஒன்றே என உணராமல் இருப்பவர்கள்) விடுத்தோர்களாலும் மட்டுமே பரம்பொருளை உணர முடியும் என்பதை விநாயகப்பெருமான் மூலம் உணர்த்துகிறார். இங்கே விநாயகப்பெருமானையும் பரம்பொருள்- அருட்பெருஞ்சோதி ஆண்டவராகவே பார்க்கிறார்.

மேலும் ஒரு பாடல் 2526.

மருளுறு மனமும் கொடியவெங் குணமும்

மதித்தறி யாததுன் மதியும்

இருள் உறு நிலையும் நீங்கிநின் அடியை

எந்தநாள் அடைகுவன் எளியேன்

அருள் உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே

அமர்ந்தசிற் பர ஒளி நிறைவே

வெருள் உறு சமயத் தறியொணாச் சித்தி

விநாயக விக்கினேச்சுரனே!

உரை:

அருள் நிறைந்த ஒளிப்பொருளாய் அந்த ஒளிக்குள் உறைகின்ற ஞான ஒளி- பர ஒளியாக இருக்கின்ற தேவே- நிறைவே, - சமய நெறியாள் அறியமுடியாத சித்தி விநாயகனே !

உன்னை மருள் உறு மனம் அதாவது கொடுமையான குணம் மற்றும் அறியாமையால் இருண்ட மனநிலையையும் நீங்கி நினது திருவடியை எளியனாகிய யான் அடைவது எப்போது?

இதுபோல் பல்வேறு பாடல்கள் முதல் ஐந்து திருமுறையிலும் இருக்கிறது. பக்குவத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நிலையையும் கடந்து -ஒவ்வொரு முறையை கடந்து ஆறாம் நிலை - ஆறாம் திருமுறையில் முழுமையாக கண்டு அனுபவிக்கலாம் என்று எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானார் தெரிவிக்கிறார். இதற்கு ஆதாரம் அவரிடமே சரணடைந்து அவர் கூறிய பாடல்களுக்கு கண்ணீர் மல்க அவரிடமே விளக்கம் கோரினால் ஓரிரு நாட்களில் அவர் மூலமாக பதில் பெறலாம்.

இதில் சமயக் கருத்துகள் ஒரு துளியும் கிடையாது. எனவே அவருடைய அனைத்துப் பாடல்களும் பரம்பொருளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது தான். விநாயகரும்,முருகனும், அம்பாளும் மற்ற வழிபடு கடவுள் அனைத்தையும் அவர் அருட்பெருஞ்சோதியின் சாயலாகவேப் பார்த்துள்ளார்.


வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
மன்னிய உண்மை ஒன்றென்றே
எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
திறையும்வே றெண்ணிய துண்டோ
அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
தெளிவித்துக் காப்பதுன் கடனே.

20.இறை பொறுப் பியம்பல் ஆறாம் திருமுறை -3636

எனவே நம்மவர்கள் தயவு செய்து வள்ளல் பெருமானார் ஆறாம் திருமுறையில் மட்டுமே உண்மை கடவுளை உணர்ந்தார் என்பதை விண்ணப்பத்தையும், பேருபதேசத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு கூறாதீர்.

தகவல் உதவி:

1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானார்.

2. தயவு ஸ்ரீ சரவணானந்தா சுவாமிகள்.



*********************


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி