அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இறை நிலை- V
உலகியியல் வாழ்க்கைக்கும், ஞான வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. உலகியியல் வாழ்க்கையை கடந்து ஞான வாழ்க்கையை தொடருவது சாமானியர்களுக்கு பொருந்தும். அருளாளர்கள், மகான்கள், மற்றும் சித்தர்களுக்கு இது பொருந்துவது இல்லை. மகான்கள் மற்றும் சித்தர்கள் எந்த ஒரு இச்சையும் இல்லாமல் பரம்பொருளை மட்டுமே சிந்தையில் வைத்து ஞான வாழ்க்கையை தொடர்ந்து முடிவில் முக்தி பெற்றவர்கள். சித்தத்தை- சிந்தையை “சிவம்” மேல் வைத்ததால் அவர்கள் சித்தர்கள் என்றும் அழைக்கப் பெற்றனர். ஸ்ரீ வள்ளல் பெருமானுடைய தவ வாழ்க்கையைப் பார்க்கும் போது ஞானத்தில் ஞானமான எல்லா உயிர்களிடத்தும் இறையைக் கண்டார். சித்தர்களோ தங்களுக்குள் இறையை கண்டு பிறப்பறுத்து முக்தி பெற்றனர். மேலும் அவர்கள் உலகியியல் வாழ்க்கையிலிருந்து தனித்திருக்கவே விரும்பினர். ஸ்ரீ வள்ளல் பெருமானோ கருணையை தவமாகக் கொண்டு உலகியியலில் எல்லா உயிர்களிடத்தும் அன்புக் கொண்டு அதன் மூலம் பரம்பொருளை உணர்ந்தார். உலகியியலில் எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டு அதன் மூலம் இறையை மிக எளிதாக உணரலாம் என்று ஞான புரட்சியை ஏற்படுத்தினார். ஆனால் சித்தர்கள் தங்களுக்குள்ளே இறையை காணும் முயற்சியில் இறங்கி உலகியியலை வெறுக்கத் தொடங்கினர். அத்தகைய சில சித்தர்கள் பாடல்களை இப்பொழுது பார்ப்போம். வெயில்கண்ட மஞ்சள் போன்ற மாதரழகை விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர் ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல் உடல் போனால் ஓடுவாரென்று ஆடாய் பாம்பே. பாம்பாட்டி சித்தர் பாடல் : 50 பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே இச்சைய துன்னையாளாதே – சிவன் இச்சைகொண்ட தவ்வழி யேறி மீளாதே! -கடுவெளி சித்தர் பாடல்- 9 வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற் சென்று சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன் , தமியேனுடலம் நரிக்கோ ? கழுகு பருந்தினுக்கோ? வெய்ய நாய் தனக்கோ? எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே. ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற பேருஞ்சதமல்ல,பெண்டீர் சதமல்ல , பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே யாருஞ் சதமல்ல, நின் தாள் சதங் கச்சி யேகம்பனே. - பட்டினத்தார் பாடல்-திருவேகம்ப மாலை 11 & 13 அன்னை எத்தனை எத்தனை அன்னையோ? அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ? பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ? பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ? முன்னை எத்தனை எத்தனை சன்மமோ? மூடனாயடி யெனு மறிந்திலேன் இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ? என் செய்வேன்? கச்சியேகம்ப நாதனே? திருவேகம்ப விருத்தம். மாயாப் பிறவி மயக்கத்தை யூடறுத்துக் காயா புரிக்கோட்டை கைக்கொள்வதெக்காலம் தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே சிந்தைதனிற் கண்டு திருக்கறுப்பதெக்காலம். பத்ரகிரியார் மெய்ஞ்ஞான பாடல் : 5 & 14 பற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே- அதைப் பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே இடைக்காடர் சித்தர் கண்ணிகள்: 19 மெத்தை தனிலே படுத்திருந்து நாமும் மெல்லியரோடு சிரிக்கும் போது யுத்த காலன் வந்துதான் பிடித்தால் நாமும் செத்தவமடி வாலைப் பெண்ணே! கொங்கண சித்தர் வாலைக்கொம்மி- 85 இவ்வாறு உலகியியல் வாழ்க்கையை வெறுத்து சித்தத்தை சிவம் மேல் வைத்து பற்றறுத்து –நினைவுகள் எதுவும் இல்லாமல் முக்தி பெற்றனர் சித்தர்கள்.( பிறப்பை தவிர்க்க விரும்பினால் நினைவுகள் எதுவும் இருக்கப்படாது என்பது வள்ளலார் வாக்கு) ஆனால் ஸ்ரீ வள்ளல் பெருமானுடைய தவ வாழ்க்கையை பார்க்கும் போது அவர் கொண்ட ஞான வாழ்க்கை நிலை –தவ வாழ்க்கை நிலை, உலகியியலை வெறுக்காமல் எல்லா உயிர்களிடத்தும் இறையை காணும் நிலையாக மற்றவற்றை விட உயர்ந்து காணப்படுகிறது. மேலும் சிலர் உலகியியல் என்றாலே இல்வாழ்க்கை தான், ஆகையால் வள்ளலார் அதனை ஏன் விரும்பவில்லை எனவும் வினா எழுப்பலாம். அதற்கு அவரே கூறுகிறார். “வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.” என்று சத்திய விண்ணப்பத்தில் தெரிவிக்கிறார். அதனால் தான் அவர் இல்வாழ்க்கையை விரும்பவில்லை. இல்வாழ்க்கையை விரும்பவில்லையெனினும் வள்ளல் பெருமானார் புறப்பற்றை விடாமல் இல்லை. பாவி மனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே பதிவெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன் ஆவிஉடல் பொருளைஉன் பாற் கொடுத்தேன் உன் அருட்பே ராசை மயமாகி உனை அடுத்து முயல்கின்றேன் -திருவருட்பா ஆறாம் திருமுறை: வாதனைக் கழிவு: 8 மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மலப்பற்றறுத்தவர் வாழ்த்தும் மணாளர் சிறப்பற்ற மங்கையர் தம்மொடும் நான்தான் சிற்றம்பலம் பாடிச் செல்கின்றபோது புறப்பற்றகற்றத் தொடங்காத பெண்ணே புலை அகப்பற்றை அறுத்தாய் நினக்கே இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா திருவருட்பா: 5678 காட்டில் இருந்து உலகியியலை வெறுத்து தவம் செய்வதைக் காட்டிலும், உயிர் இரக்கம் கொண்டு பிறர் துயர் துடைத்து எல்லா உயிர்களையும் இன்புற செய்வதே சிறந்த தவம் என்று எண்ணினார் ஸ்ரீ வள்ளல் பெருமானார். வள்ளுவர் குறளும் இதனையே: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் உயிர் இரக்கம் மற்றும் கொல்லாமையே சிறந்த தவமாக கொண்ட வள்ளலார், மண்ணுலகத்தில் அவ்வுயிர்கள் துன்பபடக் கூடாது என்றும் பரம்பொருளை வேண்டுகிறார். மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன் எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம் நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்க நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய். பிள்ளைச்சிறு விண்ணப்பம் 23 இதனை இறைவனே வள்ளலாருக்கு உணர்த்தியதாக சொல்கிறார். கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் - பெறுகமற் றெல்லாம் மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன் பிள்ளைப் பெரு விண்ணப்பம்: 94 இவ்வாறு கருணையே சிறந்த தவமாக கொண்டதால் ஸ்ரீ வள்ளல் பெருமானாருக்கு சாதி, மதம், சமய வேற்றுமை தோன்றவில்லை. எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பார்க்கும் எண்ணம் –ஒருமையே மேலோங்கியது. இதனை: சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி என்றறிந்தேன் ஓதிய அனைத்தும் நீ அறிந்ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே -திருவருட்பா ஆறாம் திருமுறை -ஆன்ம தரிசனம் : 363 மேலும் தன்னுடைய சுதந்திரங்களை எல்லாம் பரம் பொருளிடம் ஒப்படைத்ததால் எல்லாவித சித்திகளையும் பெற்றார் ஸ்ரீ வள்ளல் பெருமானார். அதனை அவரே மிக அழகாக சொல்கிறார். காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்துனது கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண் குளிரக் கண்டேன் கோட்டை எலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன் சேட்டை அற்றுக் கருவி எலாம் என்வசம் நின்றிடவே சித்திஎலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலந்தரும் என் உளந்தனிலே கலந்து நிறைந்தருளே. திருவருட்பா ஆறாம் திருமுறை: வாதனைக் கழிவு: 10 மேலும் ஒரு பாடலில் சாமத்திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந்தடுத்துமயல் காமக் கடலைக் கடத்தி அருட் கருணை அமுதங் களிததளித்தாய் நாமத்தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன் ஏமத் தருட்பே றடைந்தேன் நான் என்ன தவஞ்செய் திருந்தேனே. திருவருட்பா ஆறாம் திருமுறை: பிரிவாற்றாமை: 9 மெய்யருள் வியப்பிலும் இதனையே ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றியே இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ மதியிலேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னையோ எனக்கும் உனக்கும் திருவருட்பா ஆறாம் திருமுறை: மெய்யருள் வியப்பு 18 இவ்வாறு எல்லாவித பேறுகளையும் அடைந்த வள்ளலார் தான் மட்டும் இப்படி பேரின்பத்தை அடைந்தால் போதுமா, இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் இது போல் பெற வேண்டுமா? என்று இறைவனை தொழுது வேண்டுகிறார். பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி அருட் ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியா தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே திருவருட்பா ஆறாம் திருமுறை: பிரிவாற்றாமை: 10 தான் பெற்ற எல்லா வித சக்திகளையும் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணமும், மண்ணுலகத்திலே உயிர்கள் எவ்வித துன்பமும் அடைய கூடாது என்ற எண்ணமும், (கருணை- தயவு) ஸ்ரீ வள்ளல் பெருமானிடத்து அதிகமாக இருந்தது. உலகினில் உயிர்களுக்குறும் இடையூறெலாம் விலக நீயடைந்து விலக்குக மகிழ்க ., அகவல் இந்த தயவு நிலையே ஸ்ரீ வள்ளல் பெருமானை ஏறாத நிலை மேல் ஏற்றி வைத்தது. அந்த தயவால் ஸ்ரீ வள்ளல் பெருமானார் அருட்ஜோதியை உணர்ந்து அவரே அருட்ஜோதியும் யானார். அதனை அவர் கீழ் வருமாறு பாடுகிறார். அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு மருட் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு மரணந்த விர்ந்தேன் என்று அறையப்பா முரசு ஆகவே சுயநலமில்லா தயவு- கருணையே சிறந்த தவமாகும். இனி அவர் பெற்ற பேறுகளையும்- இறைவன் அவருக்கு கொடுத்த பணிகளையும் பார்ப்போம். இறைநிலை தொடரும்.., ************ அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி தகவல் உதவி 1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு- அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை. குறிப்பு: வள்ளலார் மேற்கொண்ட தவ வாழ்க்கை எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் சிறிய அளவில் இங்கு வெளிப்பட்டிருக்கிறது. அவருடைய ஞான வாழ்க்கையில் சுயநலம் என்பதே இல்லாமல் இருந்தது எனலாம் . உதாரணத்திற்கு இப்பாடலும் அவருடைய எளிமையான வாழ்க்கை முறையையும் பார்த்தாலே அவர் எப்படி வாழ்ந்திருப்பார் என்பதை ஓரளவு யூகிக்க முடியும்: பணத்திலே சிறிதும் ஆசைஒன்றிலைநான் படைத்த அப்பணங்களைப் பலகால் கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய் குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன் இனிச்சொல்வதென்னே திருவருட்பா பிள்ளை சிறு விண்ணப்பம்: 11 ஆனால் இதெல்லாம் இப்பொழுது உள்ள அருளாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது. உதாரணத்திற்கு சமீபத்தில் புதுச்சேரியில் ஒரு ஆன்மீக அருளாளர் நிகழ்ச்சியில் இறைநிலையை தியானம் மூலம் உணர்த்துவதற்காக ஒவ்வொரு நபரிடமும் ரூ.1000 வசூல் செய்தார்களாம். மொத்தம் 3000 பேர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ஒரே நாளில் ரூ .30 இலட்சம் வசூல் செய்திருக்கிறார்கள்.
அற்றே தவத்திற் குரு. (261)
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (266)
பழித்தது ஒழித்து விடின். (280)
இந்த கட்டுரையில் வள்ளலார் கருணை,தயவு இவற்றை வாழ்வின் தவமாக கொண்டு வாழ்ந்தார் என்பதை சிறந்த முறையில் வெளிப்படுத்தியது அருமை.
இப்படி பட்ட நல்ல அருளாளர்களை தற்போது காண முடியாது என்பதையும் இக்கால அருளாளர் என்ற பெயரில் இருக்கும் பொருள்,பண பிரியர்களையும் சொன்னது மிக அருமை. நல்ல பாடல் வரிகளை பொருத்தமான இடத்தில் காட்டியது
சிறப்பு.வள்ளலார் அன்புடன்,அருள்ஜோதி சுஜாதா.
போலி குருமார்களை நம்ப வேண்டாம் என்று மேலும் சில கட்டுரைகள் இதே இணைய தளத்தில் வெளிவந்திருக்கிறது.
http://www.vallalarspace.com/Kumaresan/Articles/2717
http://www.vallalarspace.com/Kumaresan/ArticleList/455
http://www.vallalarspace.com/Kumaresan/Articles/3944
http://www.vallalarspace.com/Kumaresan/Articles/4283
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
இங்கு உள்ளவர்களுக்கு பொருளாளர் ( பொருளை வசூலிப்பவர் ) ,மருளாளர் என்ற வார்த்தைகள் பொருந்தும்.
நாம் உயர்ந்த வார்த்தைகளை , இங்கு மலத்துடன் வாழ்வர்களுக்கு கொடுத்து விடக் கூடாது.
இங்கு நாம் பல இடங்களில் , அருள்மிகு .... , அருள்திரு.. , அருளுடைய... போன்ற வார்த்தைகள் மனிதர்களுக்கு / சிறு தெய்வங்களுக்கு நடை முறையில் கொடுக்கபட்டு வருகின்றது..
எது "அருள்" உடையது எனில் ?....
அது தான் அருட்பா = அருள் + பா (பாடல்கள்)
அது தான் அருட்பெருஞ்சோதி மந்திரம் = அருள் + பெரும் + ஜோதி
அது தான் அருட்பெருஞ்சோதி அகவல் = அருள் + பெரும் + ஜோதி
{ContentRefr:156}
{ContentRefr:168}
அகவலில் ..,
அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள்நலம் பரவுக என்ற அறைந்த மெய்ச்சிவமே
அருளுறின் "எல்லாம் ஆகும்" மீது உண்மை அருளுற முயல்க என்று அருளியசிவமே
அருள்நெறி "ஒன்றே தெருள்நெறி" மற்றெலாம் இருள்நெறி என எனக்கு இயம்பியசிவமே
அருள்பெறில் துரும்பும் ஓர் "ஐந்தொழில் புரியும்" தெருள்இது எனவே செப்பியசிவமே
அருளறிவு "ஒன்றே அறிவு" மற்றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே
அருட்சுகம் ஒன்றே "அரும்பெறல் பெரும்சுகம்" மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச்சிவமே
அருட்பேறு அதுவே "அரும்பெறல் பெரும்பேறு" இருட்பேறு அறுக்கும் என்று இயம்பியசிவமே
அருள் தனிவல்லபம் "அதுவே எலாம்செய்" பொருள்தனிச் சித்தெனப் புகன்ற மெய்ச்சிவமே
அருளறியார் "தமையறியார்" எம்மையும் பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே
அருள்நிலை ஒன்றே "அனைத்தும் பெறுநிலை" பொருள்நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே
அருள்வடிவு அதுவே "அழியாத் தனிவடிவு" அருள்பெற முயல்க என்று அருளியசிவமே