அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
சாஸ்திர வித்தை கற்பதால் மட்டுமே இறையை உணரலாம் என்கிற எண்ணத்தை ஒரு சாரார் ஊக்குவித்து அதற்கு தங்களுடைய குலம் மட்டுமே தகுதியானது என்றும், தாங்கள் மட்டுமே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறிக்கொண்டு சாதாரண மக்கள் இறைவன் என்றால் என்ன? என்பதை தெரியவொட்டாமல் செய்த காலத்தில் எந்த ஒரு சாஸ்திர வித்தையும் தேவையில்லை. என்னை ஏறாத நிலை மேல் ஏற்றி வைத்தது தயவு-கருணை என்று பேருபதேசம் செய்தார் ஸ்ரீ வள்ளல் பெருமானார்.
இறை நிலை- III
உண்மை இறை நிலையை உணர்ந்த வள்ளலார், தான் எவ்வாறு அந்நிலையை உணர்ந்தார் என்பதையும், தன்னைப் போல் அனைவரும் - சாதாரண மக்களும் இறை நிலையை உணர வேண்டும் என்பதற்காக இறைவனிடமே விண்ணப்பம் செய்கிறார்.
இறை நிலை என்னவென்றே தெரியாமல் மக்கள் சாஸ்திரம், ஆசாரம், மதம், இனம், என்கிற நம்பிக்கையினாலும் புராணம் முதலிய நம்பிக்கையாலும் ஒருவருக்கொருவர் இனத்தால், மதத்தால் வேறுப்பட்டு பகை உணர்ச்சியுடன் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை கடைப்பிடிக்க தவறியதை கண்ட வள்ளல் பெருமானார் அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருவருளோடு உண்மையை விளக்கஞ் செய்கின்ற ஒரு ஞான சபையை ஏற்படுத்தி அதன் மூலம் திருவருள் அருட்பெருஞ்சோதி ஆண்டவராக அனைவருக்கும் உண்மை இறை நிலை உணர்த்துவார் என்று சபையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.
சாஸ்திர வித்தை கற்பதால் மட்டுமே இறையை உணரலாம் என்கிற எண்ணத்தை ஒரு சாரார் ஊக்குவித்து அதற்கு தங்களுடைய குலம் மட்டுமே தகுதியானது என்றும், தாங்கள் மட்டுமே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறிக்கொண்டு சாதாரண மக்கள் இறைவன் என்றால் என்ன? என்பதை தெரியவொட்டாமல் செய்த காலத்தில் எந்த ஒரு சாஸ்திர வித்தையும் தேவையில்லை. என்னை ஏறாத நிலை மேல் ஏற்றி வைத்தது தயவு-கருணை என்று பேருபதேசம் செய்தார்.
மேலும் உரைநடை குறிப்பில் “பத்து ஆள் சுமை ஒரு வண்டி பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூழ் வண்டி பாரம். சூழ் வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதி தீவிர ஜீவ முயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும் அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை அருள் முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால் ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம்”. இது சத்தியம். என்று வள்ளல் பெருமானார் குறிப்பிடுகிறார்கள்.
புறக்கல்வியால் இறை உண்மையை உணரமுடியாது என்பதை பல்வேறு இடங்களில் திருவருட்பா பாடல்கள் மூலமும் ஸ்ரீ வள்ளல் பெருமானார் தெரிவிக்கிறார்.
அவற்றில் சில:
கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவ தரிதென உணர்ந்தோர்
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே
திருவருட்பா: 4619
மேலும் திருவடிப் பெருமை அனைத்து பாடல்களும் இறை நிலை யை உணர வேண்டுமானால் இறை நிலை அறிந்து எல்லாம் வல்ல பரம்பொருளிடம் சரணடைந்தால் மட்டுமே உண்மை இறையை உணர முடியும் என்பதை தெளிவு படுத்தும் வகையில் உள்ளது.
அவற்றில் ஓரிரு பாடல்களை இப்பொழுது பார்ப்போம்.
தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி
திருவருட்பா: 5628
ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்
இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்
வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்
மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்
காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்
தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்
தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி
திருவருட்பா: 5634
காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி
திருவருட்பா: 5638
இப்படி வரையறுத்து சொல்ல முடியாத இறை நிலையை வள்ளலார் எவ்வாறு உணர்ந்தார் என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.
தகவல் உதவி
1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை.
நல்ல செய்திகளுக்கு நன்றி.கடவுளை உணர்ந்த பெரியோர்கள் சொன்ன வார்த்தைகள்."பணத்தையும்,பகட்டையும் விரும்புவர்களை கடவுள் விரும்புவதில்லை.
யார் ஒருவர் எல்லா ஜீவர்களையும் அன்பு,கருணை,தயவு செய்கிறார்களோ அவரை
தான் கடவுள் விரும்புகிறார்".அவர்களுக்கு தான் கடவுள் அளவு கடந்த அருளினை,மரணமிலா பெரு வாழ்வை வழங்குவார் என்பதை வள்ளலார் அருட்பெருஞ்சோதி,தனிபெருங்கருணை அருளால் தன் கருணை,தயவு வாழ்வால்
நமக்கு உணர்த்தினார்.அந்த பெரிய அருள் வாழ்வை நாமும் பெறலாம் என அதனை
கருணை,தயவினால் மட்டும் தான் பெற வேண்டும் என்றார்.வேறு சித்தி வழியால்
பெற்றாலும் அதனால் சிறு பயன் மட்டும் தான் பெற முடியும்.சாத்திர நூலை படிக்கச் விட்டாலும் கருணையை வைத்து கடவுள் அருளை பெறலாம்.