அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இறை நிலை -I
இறைநிலை உணர்ந்து இறைமயமாதல் என்பது வள்ளலார் வாக்கு. இறைநிலையை உணர பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள், மகான்கள், யோகிகள், ஞானிகள், மற்றும் அருளாளர்கள் அவரவர் வழியில் இறையை உணர பல்வேறு மார்க்கங்களை தேர்ந்தெடுத்தனர்.
தியானம், யோகம் மற்றும் மூச்சு பயிற்சி முதலிய சாதனங்கள் மூலம் இறையை உணரலாம் என்று ஒரு வகையினரும், கடுந்தவம் மூலம் இறையை உணரலாம் என்று மற்றொரு பிரிவினரும் முயற்சி மேற்கொண்டனர். அவரவர் முயற்சிக்கு ஏற்ப (சரியை, கிரியை, யோகம், ஞானம்) பரம்பொருள் தன்னுடைய சுயரூபத்தை பல்வேறு ரூபங்களில் வெளிப்படுத்தியது.
எனவே அவரவர் கண்ட நிலைகளுக்கு ஏற்ப உருவ வழிபாடு செய்து அதனை வழிப்பட்ட அருளாளர்கள் மற்றவர்களையும் அந்த உருவத்தை வழிபாடு செய்ய முயற்சி செய்து அதன் மூலம் உருவ வழிபாட்டை நாடெங்கும் பிரபலப் படுத்தினர். தாங்கள் கண்ட ரூபம் நாடெங்கும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர்.
உருவ வழிப்பாட்டை மறுத்தவர்களை அவ்வபோது மன்னர்களின் துணையோடு கழுமரம் தழுவச் செய்தனர். எனவே நாடெங்கும் உருவ வழிபாடு பிரபல மாயிற்று. மன்னராட்சி முடிவுற்ற பின்னர் மதம் என்கிற ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் உருவ வழிபாட்டை நிலை நிறுத்த முற்பட்டனர் ஒரு சில சமூகத்தினர்.
எனவே சாதி சமய வேறுபாடு காரணமாக உண்மை இறை நிலை என்பது ஒரு கடைப்பட்ட குடிமகனுக்கு தெரியாமலே போய் விட்டது எனலாம். இறைவன்- ஆண்டவன் கோயிலில் மட்டும் தான் இருப்பான். அவனை ஒரு நாளைக்கோ ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ கண்டுக்கொண்டால் போதும் என்ற நம்பிக்கை வளர ஆரம்பித்தது.
கால போக்கில் ஒரு சில சமூகத்தினர் சித்தர்கள் கண்ட இறை நிலையை முற்றிலுமாக மறுத்து வடமொழியில் இறைவனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்தால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்று கூற மக்களும் மாயை வசப்பட்டு எல்லா உயிர்களிடத்தும் இறை இருப்பதை மறந்தனர்.( அல்லது மறக்கடிக்கப் பட்டனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்)
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் வேதங்களையும், புராணங்களையும் ஓத வேண்டாம் என்று கூறுகிறார்.
சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல
தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென்றாடாய் பாம்பே
-பாம்பாட்டி சித்தர் பாடல்- 98
சித்தர் சிவவாக்கியர் பல பாடல்களில் வேதங்களைப் பற்றியும், உருவ வழிபாடுப்பற்றியும், சாதி, சமய வேறுபாடு பற்றியும் புரட்சிகரமான பாடல்கள் மூலம் எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார். அதில் ஒன்று:
'நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
-சிவவாக்கியர் பாடல்-494
(மேலும் பல்வேறு சித்தர் பாடல்கள் உள்ளன. விரிவஞ்சி இங்கு கூறப்பட வில்லை).
இவ்வாறு சித்தர்களும் உண்மை இறை நிலையை உணர்த்த அரும்பாடுப்பட்டனர். ஆனால் அப்பொழுதும் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
முடிவில் இப்பணி வள்ளலாருக்கு வழங்கப்பட்டதாக கருதலாம். வள்ளலார் அப்பணியில் எவ்வாறு வெற்றிக் கண்டார் என்பதை பின்வரும் நாட்களில் பார்ப்போம்.
தொடரும்..,
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
************
குறிப்பு
1. எல்லாமாகிய , எல்லாம் வல்ல , ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமானின் தனிப்பெருங்கருணை
2. பெரிய ஞான கோவை சித்தர் பாடல்கள்
Thank u for your informations.Continue ur Good messages.Most Welcome U.With Vallalar Loving, Aruljothisujatha.