Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
விருப்பு –வெறுப்பு

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மரணமில்லா பெருவாழ்வில் வள்ளல்பெருமான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூட்டத்தில் பேசுபவர்கள், அவர்கள் பேசுவதையும் அதே பெருமானார் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தார்களேயானால் அவர்கள் அகங்காரமாகவும், பிறரை தாழ்மைப் படுத்தியும், சன்மார்க்கத்தை தாங்கள் தான் நடத்துவதாகவும் பேசமாட்டார்கள்.

-வள்ளலார் அளித்தது.

விருப்பு வெறுப்பு

பிறவி வேண்டாம் என்பது சித்தர்கள் முதல் அருளாளர்கள் வரையுள்ள பெரும்பாலோர்களின் கருத்து. அதனால்தான் முக்தியை வேண்டி பெரும்பாலும் அவர்கள் தவத்தை மேற்கொண்டனர்.

வாழையடி வாழையாக திருகூட்ட மரபினில் வந்த வள்ளலார் முக்தியையும் தவிர்த்து மரணமில்லா பெருவாழ்வு வேண்டும் என்று இறைவனை வேண்டினார்.

வள்ளலாருக்கு முன் வந்த சித்தர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டும் போற்றுதலுக்குரியதுதான். அவர்கள் ஆற்றிய தொண்டுப் பற்றி சித்தர்களின் சமுதாய நோக்கு என்று இதே இணைய தளத்தில் காணலாம்.

அதே திருக்கூட்ட மரபினில் வந்த வள்ளலார் மேற்கொண்ட சுத்த சன்மார்க்கம் இன்றைக்கு கடல் கடந்த நாடுகளான அமெரிக்கா, ஃபிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா, மலேசியா மற்றும் இலங்கை முதலிய நாடுகளில் பரவி வருகிறது.

சிறிய வேறுபாடுகள் சில நாடுகளில் இருந்தாலும் அதுவும் திருவருள் எண்ணமில்லாமல் நடந்திருக்க முடியாது என்பது திண்ணம்.

அவனில்லாமல் அணுவும் அசைந்திடாது என்றால் சில மாற்றங்களும் இதற்கு உட்பட்டதுதானே. கால மாற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்போது அருளாளர்களுக்கு நெற்றிக் கண் திறந்து அதன் மூலம் பல வித நன்மைகளை சமுதாயத்திற்கு செய்வது திருவருள் எண்ணம்.

அதனால் தான் அன்பே சிவம் ( அன்பு) என்று திருமூலர் மூலமும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் ( விசுவாசம்) என்று ஏயேசுபிரான் மூலமும், அளவற்ற அருளாளன்( அருள் ) என்று நபிகள் நாயகம் மூலமும் , , கருணையும் சிவமே பொருள் ( கருணை) என்று வள்ளலார் மூலமும், தயவு என்ற சொல் ஸ்ரீராமலிங்க அடிகளால் ஏற்று திண்டுக்கல் சரவணானந்தா சுவாமிகள் மூலமும் திருவருளால் வெளிப்பட்டது.

ஆகையால் எதற்காக இது மாற்றப்பட்டது, எவ்வாறு மாற்றலாம் என்று புறக் கல்வி மூலம் ஆராய்ச்சி செய்தால் அதனால் மிகப்பெரிய நன்மை வராது. எனவே திருவருள் எண்ணமில்லாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்பதை நிச்சயமாக நம்பவேண்டும்.

எனவே சன்மார்க்கத்தில் இருப்பவர்களும் இதனை நன்கு உணர வேண்டும். நாம் தான் சன்மார்க்கத்தை வளர்க்கிறோம் என்று கனவில் கூட நினைக்கக்கூடாது.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் மட்டுமே அனைத்தும் நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்று நினைக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் விருப்பு வெறுப்பு சூழ்நிலைகளுக்கு ஆட்கொண்டேமேயானால் அதனால் அபக்குவமே தொடர்ந்து நீடிக்கும். நமது இலட்சியம் பாதிப்படையும்.

இதனை திருக்குறள்;

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.- என்று வலியுறுத்துகிறது.

எனவே நாம் ஏன் விருப்பு வெறுப்பு கொள்ளமால் எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு ராமலிங்க அடிகள் நடப்பவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை முழுமையாக நம்பவேண்டும்.

மரணமில்லா பெருவாழ்வில் வள்ளல்பெருமான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூட்டத்தில் பேசுபவர்கள், அவர்கள் பேசுவதையும் அதே பெருமானார் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தார்களேயானால் அவர்கள் அகங்காரமாகவும் , பிறரை தாழ்மைப் படுத்தியும், சன்மார்க்கத்தை தாங்கள் தான் நடத்துவதாகவும் பேசமாட்டார்கள்.

எனவே ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் இதனை முழுமையாக உணர்ந்து விருப்பு வெறுப்பு நீங்கி எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை ஒருமையுடன் நினைத்து மாற்றங்களும் திருவருள் எண்ணத்தாலே நிறைவேறுகிறது என்று உணர்ந்து ஸ்ரீஞானகுரு ராமலிங்க அடிகளை குருவாக ஏற்று எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து தொண்டு செய்து விருப்பு வெறுப்பு அற்ற நிலை - மௌன நிலை வரும் போது எல்லாம் வெட்ட வெளிச்சமாகி அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தன்னை வெளிப்படுத்துவார்.

எனவே எந்த ஒரு கூட்டத்தில் யார் பேசினாலும் பிறரை தாழ்த்தியும் தம்முடைய நிலையை உயர்த்தியும் பேசாமல் எல்லாம் திருவருள்- அருட்பெருஞ்சோதியின் தனிப்பெருங்கருணையால் நடைபெறுகிறது. நாம் சாதாரண ஒரு உபகரணம் என்று நினைக்க வேண்டும்.( தற்சுதந்திரமின்மை) அப்பொழுது தான் அவர் அருளுக்கு நாம் முழுவதுமாக பாத்திரமாவோம்.

***************

குறிப்பு:Reference

எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு ராமலிங்க சுவாமிகளின் தனிப்பெருங்கருணை.