அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
பர ஒளி - சுயம் ஜோதி - அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் சிறு வயதிலிருந்தே ஆட்கொள்ளப் பட்ட திருவருட்பிரகாச வள்ளலார் அருட்பெருஞ்சோதியை அவ் வயதிலிருந்தே உணரப் பெற்றார்.
ஆனால் இன்றைய சன்மார்க்கிகள் ஆறாம் திருமுறை தான் சிறப்பு என்றும், முதல் ஐந்து திருமுறைகள் அவ்வித சிறப்பு பெறவில்லை என்றும் சன்மார்க்க கூட்டங்களில் பேசுகின்றனர். அவ்வாறு இருக்க முடியாது என்பதே சன்மார்க்க ஆய்வாளர்கள் பலரின் கருத்து.
மதத்தின் மூலம் இறைவனை அனுபவிக்க முடியாது. அன்பு, கருணை, தயவு மூலமே அடைய முடியும். அதற்கு தடையாக இருப்பது மதம், இனம் மற்றும் ஆசார வேறுபாடுகள். எனவே அதனை நீக்கினால் மட்டுமே முழுமையான வேறுபாடுகளை களைய முடியும். இல்லையெனில் பெயரளவில் தான் வேறுபாடுகள் நீங்கி இருக்கும் என்பது சுவாமிகளின் நம்பிக்கை.
ஆசார சங்கற்ப விகற்பங்களில் தங்களுக்கு மட்டுமே இறைவன் காட்சி தருவார் மற்றவர்கள் எல்லாம் ஈன பிறவிகள் என்று மத தீவிரவாதம் முழங்கி சாதாரண மக்களை ஏமாற்றி அதன் மூலம் வருமானம் பெற்றவர்களுக்கு எதிராக சுத்த சன்மார்க்கம் மூலம் பெரும் புரட்சி செய்தவர் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள்.
உரைநடையில் சுவாமிகள் சைவத்தில் நம்பிக்கை வேண்டாம், என்றும் என்னை ஏறாநிலைமிசை ஏற்றி வைத்தது தயவு என்றும் குறிப்பிடுவதால் பலர் இதை உதாரணம் காட்டி முதல் ஐந்து திருமுறைகளை புறக்கணிக்கின்றனர். ஆனால் வள்ளலார் சிறுவயது முதல் அருட்பெருஞ்சோதியை உணர்ந்திருந்தார். கடவுள் ஒருவர் என்பதும் அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்பதும் உணராமல் இல்லை. சாதாரண மக்களுக்கு எப்படி புரிய வைப்பது, ஐயோ அறியாமையால் மக்கள் இறையை உணராமல் இருக்கிறார்களே என்று தினமும் கண்ணீர் சிந்திருக்கிறார்.
இன்று நாகரீக வளர்ச்சியில் இருக்கும் புறக் கல்வியாளர்கள் பலர் போலி துறவிகளிடமும் சிட்பண்ட் நிறுவனங்களிடமும் ஏமாறுகின்றனர். அதுபோல் அன்றும் மக்கள் புற பூஜைகளிலும் வேள்வி, யாகம் முதலிய ஆசார விசயங்களிலும் பெரும் செலவு செய்து ஏமாற்றமடைந்தனர்.
மேலும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை மறந்து ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டி அவரவர் மத ,இனத்தில் தீவிரம் காட்ட தொடங்கினர்.
முதல் ஐந்து திருமுறைகளும் அதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது என்பது சுவாமிகளின் எண்ணம். ஏனெனில் முதல் ஐந்து திருமுறைகள் பல்வேறு கால கட்டங்களில் சிலரின் வேண்டுகோள் படியும் சில பாடல்களை பாட நேர்ந்தது. அது மத நம்பிக்கைக்கு ஊன்றுக்கோளாக அமைந்து விட க்கூடாது என்பது அவரின் நோக்கமாக இருந்திருக்கும்.
அதற்காகத்தான் சுவாமிகள் சமயங்கள், மதங்கள்,மார்க்கங்கள் முதலியவற்றில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்கிறார்.
ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் பர ஒளியை- அருட்பெருஞ்சோதி ஆண்டவரை இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளார்.
என்னிருகண் காள் உமது பெருந்தவம் எப்
புவனத்தில் யார்தான் செய்வர்
முன்னிருவர் காணாமல் அலைந்தனரால்
இனுங்காண முயலா நின்றார்
நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே
ஓரிடத்தோர் நாள் ஆதித்தர்
பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப்
பார்த்துயர்ந்தீர்ப் பண்பினீரே
-இரண்டாம் திருமுறை 1754
இறையனுபவத்தை இறைவனே தனக்கு தந்ததாக பெருமானார் கூறுகிறார்.
அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
ஆடுகநீ வேண்டிய வாறாடுக இவ்வுலகில்
செஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
திருநடங்கண் டன் புருவாய்ச் சித்தசுத்தனாகி
எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத்தரசே
துரியநடுவே இருந்த சுயஞ்ஜோதி மணியே
-நான்காம் திருமுறை 2173
இது போல் சிறு பருவத்தில் ஆட்கொள்ளப் பெற்றது, ஓதாதுணர்ந்தது, திருவடி தீக்கை, இறைவனால் மகனே என அழைக்கப் பெற்றது, போன்ற பல்வேறு பாடல்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறார்.
முதல் திருமுறையில் 16 இடங்களிலும், இரண்டாம் திருமுறையில் 28 இடங்களிலும், மூன்றாம் திருமுறையில் 21 இடங்களிலும், நான்காம் திருமுறையில் 8 இடங்களிலும், ஐந்தாம் திருமுறையில் 14 இடங்களிலும் இறைவன் ஜோதியாக இருப்பதாக பாடியுள்ளார்.
எனவே ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் நோக்கம் சாதி, சமய, மொழி வேறுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையாகவும் , ஆன்ம நேய ஒருமைப்பாட்டை கடைப்பிடித்து ஒரு உத்தமனாக வாழ்ந்து அதன் மூலம் இறைவனை காண வேண்டுமே தவிர பிற இனத்தவரை தாழ்த்தி அல்லது வேற்றுமைக் கொண்டு அதன் மூலம் இறைவனை அடைய முடியாது என்பது தான்.
ஆசார சங்கற்பங்கள் அதிகமாக இருந்த பிரபல நடராஜ கோயில் அர்ச்சகர்கள் மக்களை சுவாமிகளின் கருத்துகளை கேட்காமல் இருக்க பல வகையில் இடையூறு செய்தனர். அவற்றையெல்லாம் திருவருளால் வென்றார். பிறகு அவர் எழுதிய திருவருட்பா மூலமும் ஆசார சங்கற்பங்களை திணிக்க முற்பட்டனர்.
அதனால் தான் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் தன்னுடைய பாடல்கள் கூட சூழ்ச்சிக்காரர்களால் மத ஒருமைப்பாட்டிற்கு பாதகம் விளைவிக்கக் கூடாது என்று முதல் ஐந்து திருமுறைகளை நம்பவேண்டாம் என்றார்.
மேலும் சிலர் திருவருட்பாவை பாடினால் போதும் என்று திருவருட்பாவில் சொல்லிய பொருளை உணராது காலத்தை போக்கினர். கருணை , தயவு, அன்பு என்பதும் இல்லாமல் போனது. அதனால் தான் ஞான சபை வழிபாடும் அவர் காலத்தில் சிறிது காலம் தடைப் பெற்றது. அவர் எழுதிய திருமுகம்- கடிதமே இதற்கு சான்று.
ஆனால் இப்பொழுது இது முழுமையான சன்மார்க்க காலமாக உள்ளது –ஞான சித்தன் காலம் என்பதால் நாம் உண்மை உணர்ந்து பொருள் கொள்ள வேண்டும். சுவாமிகள் எழுதிய திருவருட்பாவை முழுமையாக அவர் மூலம் பொருள் உணர்ந்து- அவர் மூலம் மாயையை தெளிவித்து –சுத்த சன்மார்க்கத்தில் இருந்து எல்லாம் வல்ல இறைவனை எல்லா உயிர்களிடம் கண்டு, உணர்ந்து வர திருவருளால் உண்மை வெட்ட வெளிச்சமாக உணரப்படும்.
இதுவே திருவருளின் – அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் எண்ணம்.
*******************
குறிப்பு
1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை
2. தமிழ் மண்ணின் தந்தை -ஆசிரியர் ஞான பாரதி, www.vallalar.org
3. சுவாமிகளின் திருமுகங்கள்- கடிதங்கள்- தெய்வ நிலைய பதிப்பு
4. மதங்கள்- கட்டுரை- www.vallalarspace.com/kumaresan
5. Philosophy of Saint Ramalingam, Dr.M.Shanmugam, www.vallalar.org
Thank u For Information.
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு.
ஒரு வேண்டுகோள்.வள்ளல் பெருமானின் ஆறு திருமுறைகளையும் குற்றமற படிப்பது நல்லது.கோவிலுக்கு செல்வதிலும்,பிற மத சாத்திரகளை படித்து நேரத்தை வீணாக்கும் சமயத்தில் ஆறு திருமுறைகளையும் படிக்கலாம்.வள்ளலாரின் எந்த திருமுறைகளையும் ஒதுக்க முடியாது. சுத்த சன்மார்க்க பக்குவசாலிகளுக்கு ஆறாம் திருமுறை போதும்.ஆனால்,அவர்கள் உண்மையை கண்டு கொண்டதனால் அது போதும்.ஆனால் எதையும் சுலபமாக ஒதுக்க முடியாது.
வள்ளலார் முதல் திருமுறைல 'மதமான பேய பிடியாதிருக்க வேண்டும்" என்கிறார்.
வள்ளல் பெருமனால் வேறு வேறு காலத்தில் ஆறு திருமுறைகளும் எழுத பட்டது.
பின்னால் வரிசை படுத்த பட்டது.எனவே,வள்ளலாரின் திருவருட்பாவை குற்றமற வள்ளலாரின் துணை கொண்டு படிப்போம்.