Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
சாதி, மதம் சமயம் தவிர்த்தலில் சித்தர்களின் பங்கு

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

சாதி, மதம் சமயம் தவிர்த்தலில் சித்தர்களின் பங்கு

சாதி, மதம் சமயங்கள் தவிர்த்தலில் சித்தர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். அவர்களின் கருத்தாழமிக்க பாடல்கள் சமுதாயத்தில் பெரும் சீர்திருத்தங்களுக்கு வழி வகுத்தன என்றால் அது மிகையில்லை.

சாதி மதம், சமயங்கள் தவிர்த்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டை கடைப்பிடித்தால் பரம்பொருளை எளிதில் காணலாம் என்று வள்ளலார் பல்வேறு இடங்களில் கூறியுள்ளார், அதில் ஒன்று ;

ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே!

ஆறு கோடியாஞ் சமயங்கள் அகத்திலு மதன் மேல்

வீறு சேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்த

தேறும் மற்றைய அந்தத்துஞ்சிவம் ஒன்றேயன்றி

வேறுகண்டிலேன் கண்டிரேற் பெரியர்காள் விளம்பீர்

-வள்ளலார்

வள்ளலாருக்கு முன் தோன்றிய சித்தர்களும் சாதி, மதம், சமயங்களை சாடி தங்களது பாடல்கள் மூலம் தெரிவித்துள்ளனர், அவற்றில் சில....

இந்தவித மென்குலத்தா ரென்று மேவி

யென்னுள்ளே பார்க்க இந்தப் படியே யாச்சு

சந்தையந்தா னறியாமல் நீங்கள் நீரில்

தவளையைப் போல் வேதமெல்லாஞ் சாற்றுகின்றீர்

வந்தவழி யறியார்க்கு மந்திர மேது

வகையறியா மாந்தருக்குச் சாஸ்திர மேது

விந்துதித்துப் புவிதனிலே பிறந்த பேர்க்கு

வேறில்லை சாதிகுலஞ் சரிதானாண்டே.

-ஞான வெட்டியான் 577 (1500)

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ

இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ

அங்கும் இங்கும் ஆகின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ

வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே

-சிவவாக்கியர்

சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்

தானென் றொருவுடல் பேதமுண்டோ?

ஓதிய பாலதி லொன்றாகியதிலே

உற்பத்தி நெய்தயிர் மோராச்சு

-கொங்கணர்

பலமதம் பொய்மையே என்று ஓதுகுயிலே-எழு

பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே

-இடைக்காடர்

சாதி பேதமில்லை அகப்பேய்

தானாகி நின்றவர்க்கே

-அகப்பேய் சித்தர்

வள்ளலாருக்கு பின் வந்த பாரதியாரும் சாதி கொடுமையை எதிராக புரட்சிகரமான பாடல்கள் மூலம் தெரிவித்தார், அவற்றில் ஒன்று;

மனிதரில் ஆயிரம் ஜாதி- என்ற

வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை

கனிதரும் மாமரம் ஒன்று- அதில்

காய்களும்-பிஞ்சுகனிகளும் உண்டு

பூவில் உதிர்வதும் உண்டு-பிஞ்சைப்

பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு

நாவிற் கினியதைத் தின்பார்-அதில்

நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார்

ஒன்றுண்டு மானிட சாதி-பயின்று

உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்

-மகாகவி பாரதியார்

எனவே சாதி, மத, சமயம் தவிர்த்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டை கடைப்பிடித்து வள்ளலார் கூறிய ஏக இறைவனை அருட்பெருஞ்சோதி ஆண்டவரை உணர அனைவரும் முயற்சிசெய்வோமாக!

************************