தீட்சை-IV
மாணிக்க வாசகர் என்னும் திருவாதவூரார்
"இவர் 9ஆம் நூற்றாண்டில் வாகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். வாதவூர் என்னுமூரில் ஆமத்திய பிராமணர் குலத்தில் தந்தையார் சம்புபாதாசிரியரிற்கும் தாயார் சிவஞானவதியாரிற்கும் மகனாகப் பிறந்தவர்.
வாதவூரடிகள் அல்லது வாதவூரர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான்.
உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.
ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் வாதவூராரிடம் கோடிப்பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான்.
வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார். ( இது மெய்கண்டார் எழுதிய சிவஞானம் அல்ல)
சிவம் என்பதும், ஞானம் என்பதும்,போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.
தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார்.
பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை)கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.
'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி வாதவூரார் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.
சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.
ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெய்யிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் வாதவூராரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் வாதவூரார் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். வாதவூரார் சிவனை தியானித்தார்.
உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.
குதிரைப் அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.
சிவபெருமானுக்கு பக்தனின் துயரம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது.
உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். ஒரே ஒரு வந்திக் கிழவி, பிட்டு சுட்டு விற்பவள், மட்டும் தனிக்கட்டை. அவள் வீட்டில் இளைஞர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது என்று யோசிக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து அவள் சார்பாக வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்குச் சம்மதித்த சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார்.
அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.
கோபம் கொண்ட அரசன் அவனைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி அண்ட சராசரங்களின் அனைத்து உயிர்களின்மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.
அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அங்கும் சிவபிரான் அவர்முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.
'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.
'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.
அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.
இவருக்கு சிவஞானத்தை போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான், எனவே இவருக்கு குரு பரம்பொருள் -சிவம்.
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு."
தொடரும்..,
குறிப்பு: இக்கட்டுரை சைவ சமயத்தை ஆதரித்து எழுதப்படவில்லை. பரம்பொருள்( அனைத்து மதத்தினருக்கும் ஒன்றான ஆண்டவர்) குருவாக இருந்தால் சாகாகலை முதல் அனைத்து வித ஆற்றல்களையும் இறைவனிடமே கற்கலாம் என்ற நோக்கில் எழுதப்படுகிறது. வள்ளலார் அவ்வழியை எவ்வாறு கடைப்பிடித்தார் என்பது ஆய்வுக்காக பின்னர் எடுத்துக்கொள்ளப்படுகிறது