Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
உலகியியல் –அருளியியலில் ஏழு சக்கரங்களில் பங்கு -IV

உலகியியல் அருளியியலில் ஏழு சக்கரங்களில் பங்கு

இறையடியை சேர வள்ளலார் வழி

வள்ளலார் திருவருட்பாவில் பல்வேறு இடங்களில் இறையனுபவத்தை குறிப்பிடுகிறார். அகவல், அட்டகம், மற்றும் அனுபவம் முதலியவைகளில். இங்கு நாம் அட்டகத்தை எடுத்துக்கொள்வோம். அதில் ,

கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவ தரிதென உணர்ந்தோர்
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே!

· உயிர்கள் தம்மை அடையும் வழியினை அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எப்படி விளங்க வைக்கிறார் என்பதை இந்த பாடல் விளக்குகிறது. இதற்கு கீழ்வருமாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

· மெய்,வாய்,மூக்கு,கண்,காது என்னும் ஐம்பொறிகள், மனம், சித்தம்,புத்தி, அகங்காரம் என்ற நான்கு கரணங்கள், இவைகள் இயக்குவதற்கு அடிப்படையாக இருப்பது உயிர் உணர்வு.இவைகளால் எல்லாம் மனிதன் இறைவனைக் கண்டு அனுபவித்துவிட முடியாது.

· வித்தை முதலிய ஆன்ம தத்துவங்களாலும் இறைவனை அறிந்து அனுபவிக்க முடியாது.

· சிவ தத்துவம் என்கிற ஈஸ்வரம் முதலிய ஐந்து தத்துவங்களாலும் இறைவனை அடைந்து அனுபவிக்க முடியாது.மேலே குறிப்பிட்ட தத்துவங்கள் எதனாலும் இறைவனை அறிந்து அனுபவிக்க முடியாது.

· சுத்தஞான யோக சாதனைகளில் ஆன்ம தத்துவம் முதலியவற்றில் பர நிலையும், அபர நிலையும் உண்டு.

· இவற்றைப் பகுத்தறிவதன் மூலமாகவும் இறைவனைக் கண்டு அனுபவிக்க முடியாது.

· சிர நடுவில் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இருப்பதை உணர்ந்து தியானம் செய்து வருவதன் மூலமாகவும் இறைவனை அறிந்து அனுபவிக்க முடியாது.

இறைவனின் பெருமையை உணர்ந்து உயிர்க்குலத்துக்குப் பணி செய்து வருவதன் மூலமாகத்தான் இறைவனின் அருளைப் பெற முடியும். இந்த உண்மையை உணராமல் வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.

எனவே எவ்வுயிரையும் தன்னுயிராக பார்க்கும் பக்குவமே சிறந்த பக்குவம் அவர்களே பக்குவிகள் என உணர்ந்து பிற உயிர்களை துன்புறுத்தாமல்

உலகினில் உயிர்களுக்குறும் இடையூறெலாம்

விலக நீயடைந்து விலக்குக மகிழ்க .,

என்று வள்ளலார் கூறுவதால் நாம் அவரை ஞான குருவாக வணங்கி நம்முடைய மாயைகளை அவர் அருளால் நீக்கி அறிதான இந்த மானுட பிறவியால் பிற உயிர்களுக்கு நன்மை செய்து அதன் மூலம் இறையை உணர்ந்து இறைமயமாகுவோம்.

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஒங்கிய அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

*******************