
187. சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
188. ஆதனத் தோங்கிய அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) ஒருபரை ஆதனத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி, சேதனப் பெருநிலை திகழ்தருகின்றதாய் அன்வயப்படுத்திக் கொள்ளலாம். நமது அருட்பெருஞ்ஜோதி வீற்றிருந்து திகழ்கின்ற இடம், ஒரு பரை ஆதனம் எனப்படுகின்றது. பரையாவது சக்தி என்பர், பரன் பரை இரண்டும் கடவுள் விளக்க உண்மைத்தத்துவமாய் ஆண் பெண் இயல்கொண்டு விளங்குவனவாம்; இவை இந்த பிண்டத்தில் விந்து நாத விளைவாகவும் புற அண்டத்தில் (உலகில்) ஒளி ஒலியாகவும் திகழ்கின்றனவாம்.
பரம் மேலானது; அபரம் தாழ்வானது; பரநிலை ஆணியல் அகப்பொருளாய் அபரநிலை பெண்ணியல் புறவுடல் வடிவாய் இருக்கின்
றது. அகத்தேயுள்ளது சேதனப் பெருநிலை எனப்படுகின்றது. சேதனம்; அறிவு இந்த அறிவுக்குப் பீடமாக இருப்பது இந்தப் பொறியுடம்புதான்; இவ்வுடலில் சிரநடு ஓங்கார பீட மீதுதான், மெய்யறிவு கடவுட் சுடராய் ஒளிவிட்டிலங்குகின்றது. இவ்வறிவிருக்கையே இங்கு பரை ஆதனமாகப் பகரப்பட்டுள்ளது. மனித உடலில் இந்தப் பீடத்தில் அல்லாது, இவ்வொளி விளங்காது. இவ்வுடல் ஒரு கண்ணாடி ( bulb) ‘ பல்பு ‘ என்றால் இந்த ஜோதி ஆதனம், மின்னொளி இழைதிகழ் இடமாம். ஒருவனில் அருட்பெருஞ்ஜோதி பிரகாசிக்கின்ற நிலை மின்னொளி பொருத்தப்பட்டு மிளிரும் நிலையாகக் கொள்ளலாம். இம் மின்விளக்குப் போன்றுதான் நம் அருள் விளக்கு அருள் ஞான பீடத்தின் ஒளிர்கின்றதாம். “ பல்பு “ இல்லாது விளக்கு விளங்காது. இதுபோல்தான் இம்மானிட உடல் இல்லாது அருள் விளக்கு திகழாது.
அருட்பெருஞ்ஜொதி மிகப் பெரிது என்றாலும் அவ்வளவு பெரிய ஜோதியின் சொரூப, ரூப, சுபாவம் எல்லாம் முழுமையாகவே இந்த மனிதச் சிரநடு சிற்றணுவிற்றானே இன்று வெளிப்பட்டு விளங்கக் காண்கின்றோம். பெரியதிற் பெரியதாகிய அந்தப் பரம்பொருள், சிறியதிற் சிறியதாகிய இந்த ஆன்ம சிற்றணுவில் பூரண அனுபவம் தர வெளியாகின்றதௌ என்றால், இந்த ஞானான்மாவின் சிறப்புதான் என்னே! இதனைக் கூறவே, அதனைச் சேதனப் பெருநிலை என்றார். இந்த ஞான அணுவின் பெரும் பெருமையை யுணர்த்த வந்தது இந்தப் பெருநிலை என்ற சொல்,
பழநெறியிற் சென்று புறத்திருந்து உள்ளொளியை ஒருவாறு உணர்ந்துணர்ந்து பாவித்து நின்றும், சிறிதளவு திருவருளின் ஆற்றல் பெற்றே அற்புதச்சித்தாடிச் சென்றனர். ஆனந்த சித்தர்கள் பலர், இப்பொழுதோ சுத்த சன்மார்க்கத்தால் நம் வள்ளல் அகநிலையில் கூடாது கூடி இயல்பாகவே யிருந்துகொண்டு, அருட்பூரணத்தால் அழியாப் பெரும் ஞானசித்தராகத்திகழ்கின்றார். நம் அருட்பெருஞ்ஜோதிபதிக்கு இது முதல் பரை இருக்கை ஆகிய இம் மனித வடிவம் சுத்த சுகானந்தமயமாகி நித்தமும் பிரியாது நிலவற்காகி விட்டதாம்.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதிசரவணானந்தா