Vallalar Universal Mission Trust   ramnad......
93.பொதுவும் சிறப்பும், புதியதும் பழையதும்


185. பொதுவது சிறப்பது புதியது பழையதென்

186. றதுவது வாய்த்திகழ் அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) எல்லாமானவர் என்றும், ஒன்றுமல்லாதவரு என்றும், என்றுமுள்ளவர் என்றும், என்றும் வெளிப்படாதவர் என்றும், எல்லாம் வல்ல தனித்தலைமை ஒப்பரும் பதியாயுள்ளவர் நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்பது உண்மையாகும். இங்கு அந்தப் பதியை முதலில் பொதுவும் சிறப்பும் ஆனது என்கின்றார் நம் அருளடிகளார். பொதுவாவது எங்கும் நிரம்பிய கடவுள்தானே. பேருலகத்து எப்பொருள் வடிவாயும், எவ்வுயிர் வடிவாயும் தோற்றி விளங்குகின்ற நிலையாம். உள் அழியாதிருக்கும் பதியே புறத்தோற்றம் யாவும் உடையவராய் இருக்கின்றார். இதனால் எதுவும் அவருடைய வடிவாய்க் கொள்ளலாம். எல்லாம் ஆண்டவருக்குப் பொதுவடிவமே என்பது ஆன்றோர் உட்கோள். பொது வன்றித் தங்கும் இடம் போச்சு” என்றும், சிறப்பிலி எம் இறை என்றும் கூறியுள்ளனர் முன்னோர். எந்த ஒரு வடிவமும் கடவுளுக்குப் பொதுவாய் இருக்கிறேதேயல்லாது ஏதோ ஒரு குறிப்பிட்ட வடிவம் தான் அவருக்கு இருப்பதாகக் காணப்பட வில்லை. ஆகவே கடவுளுக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு வடிவம் இதுவெனக் கொள்ளற்கில்லை என்பது அக முணர்ந்தோர் உறுதிமொழி.

இப்பொழுது, அந்தப் பொதுவான ஆண்டவருக்கு ஒரு சிறப்புருவமும் உண்டு என்பதை வெளியாக்கிவிட்டது நமது அருட்பெருஞ்ஜோதி நித்திய பரம்பொருளாய் நிலவும் ஆண்டவருக்கு இந்தப் பேருலகில் அழிந்துபடும் உருவங்களே , யாவுமாய்த் தோன்றித் தோன்றி யொழிந்து கொண்டுள்ளது. இயற்கையாம். இப்படி அழிவுறும் வடிவங்களில், ஏதேனும் ஒன்று, என்றும் அழியாது விளங்கிக்கொண்டிருக்குமானால், அந்த ஒன்றினை ஆண்டவர்தம் சிறப்புவடிவமாகக் கொள்ளலாமன்றோ! ஆம், கொள்ளலாம். அகநின்று ஆளும் அருட்பெரும்பதி , மனிதப் பிறப்பு வடிவுகொண்டு விளங்குகின்றதும் பொதுநிலைத் தோற்றமே. இந்த வடிவம் பிற எந்த வடிவையும் போல் தோற்றி மறைவதாகவே இருந்தால், ஆண்டவருக்குச் சிறப்பு வடிவமென்று கொள்ளமுடியாது. ஆனால், அருட்பக்குவவசத்தால் , ஆண்டவரே இந்த மனித வண்ணமாய் ஆகியுள்ளதை வெளிப்படுத்தி, நிறைமனிதனில் நித்திய இன்பானுவம் திகழ வந்துவிட்டுள்ளார். இதனால், எங்கும் நிரம்பிய கடவுள் , இந்த அருள் மனிதனின் ஆன்ம சிற்றணுவிலிருந்து தன் அருட்பெருஞ்செயலால் எல்லாம் விளங்க விளங்குகின்றார் என்பது சத்தியம். இக்காரணத்தால் இக்கடவுள் மனித வடிவம் ஆண்டவர் கொண்டுள்ள நித்தியானந்த வடிவமே னெபது தெளிவு. இது ஒன்றே ஆண்டவர்க்குச் சிறப்பு வடிவம் ஆம். உண்மையில் கடவுள் ஒருவராகவே இருக்கின்றார். இருந்தும், அவர் ஒருவரே எங்கெங்கும் தானே பூரணமாய் அகநிலை நின்று, புறத்தே அனந்த வண்ணபேத உருவொடு திகழ்கின்றார் என்பதும் உண்மையே, இதனால், நம் அருட்பெருஞ்ஜோதிபதி, ஒரு சிறபுருவம் ஏற்றுத் திகழும்போது , தனக்கு வேறாக இல்லாது தானே பிற எவ்விடத்து எவ்வடிவம் கொண்டுள்ளதாய் இருக்கின்றார். எனவே இந்த அனுபவம் விளங்கும் ஒரு வடிவே அச் சிறப்பு உருவமாகவும், மற்ற அது போன்ற தோற்றங்கள் யாவும் அந்த ஒன்றன் வண்ணமேயல்லாது அது பல்வேறாகாது என்றும் தெளியலாகும். ஆகவே கடவுளுக்குப் பொதுவடிவம் பலப்பல. சிறப்பு வடிவம் ஒன்றே ஒன்று. சுத்தசன்மார்க்கம் தோன்றாத காலத்தில் இந்தச் சுத்த சுகானந்த வடிவம் அனுபவத்தில் ஏற்கப்படாததினால், கடவுளுக்குச் சிறப்பு வடிஅம் ஒன்றும் இல்லை என்று முடிவுகட்டி விட்டிருந்தனர்.

இனி, நம் அருட்பெருஞ்ஜோதியே, புதியதும் பழையதும் ஆக இருக்கின்றதையும் அறிந்து கொள்ளலாம். அனாதியே இருக்கும் இதற்கு, எது பழையது, எது புதுமையானது என்று கூறுவது? எல்லாப் பழையதற்கும் முந்திய பழையதாய் எல்லாப் புதியதற்கும் மேல்வரும் புதியதாய் இருப்பதும் இந்த நம் பதியே ஆம், காலமும் வடிவமும், மாற்றமும் , தோற்றமும் கடந்து ஒருபடித்தாய் திகழும் ஒன்றே புறத்தே காலமும், வடிவமும், மாற்றமும் தோற்றமும் கொண்டு விளங்கக் கண்டு பழைய தென்றும் புதியதென்றும் கொள்ளப்படுகின்றதாம்.

அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு அதுவே இங்ஙனம், பொதுவென்றும், சிறப்பென்றும் புதிதென்றும் பழசென்றும் விளங்கும் இயல்பறிந்து போற்றுகின்றார் நமது திருவருட்ஜோதி வள்ளலார் , என்பது இவ்வடிகளின் கருத்தாம்.

அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா