181. செடியறுத் தேதிட தேகமும் போகமும்
182. அடியருக் கேதரும் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) எல்லோருக்கும் தன் அருள் நியதிப்படி விதிமுறைப்படி, வேண்டுவனவெல்லாம் காலத்தே வழங்கி வாழ்வித்து இன்ப நிலைக்கு ஏற்றுவதுதான் ‘ கடவுளர் திருவுள்ளம். இதுதான்பொது விதி, இவ்வுண்மையை மெய்யறிவு கொண்டு பகுத்தறிகின்ற அருளாளனே தெரிந்துகொள்ளுகின்றான். இவனே, இந்த இறை ஜோதித் தன்னுள்ளிருந்து ஆள்வதேபோல், பிற எவருள்ளும், எவ்வுயிருள்ளும், எப்பொருளுள்ளும் இருந்துகொ ண்டு ஆண்டருளுகின்றார் என்பதையும் அறிகின்றான்.
ஒவ்வொரு மனிதனுகும் அகமாகிய சிற்றம்பலத்திருந்து அருளாணையால் ஜீவ தேக போகப் பொருள்களை எல்லாம் வருவித்துக்கொண்டுக்கின்றார் நம் பதி, இவ்வுண்மையை யுணராதாரே, தன் உண்மைத் தேவையையும் , எது கொண்டு எப்படி வாழ்ந்து உய்யவேண்டும்மென்பதையும் சற்றும் அறியாது, விருப்பு வெறுப்பால் பலபல வேண்டியும், மறுத்தும் அவத்தைப்பட்டுக்கொண்டுள்ளனர். சிலரோ நல்வினைப்பயனால், நோய்நொடி யில்லாமலும், வறுமையும் வாட்டமும் நேராமலும் , இடம், பொருள், ஏவல் வசதியோடு வாழ விதிக்கப்பட்டுள்ளனர் என்றாலுங்கூட இவர்களின் அந்த வாழ்வும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிருந்து ஒழிய, முடிவில் எப்படியோ அழிந்து ஒழிந்து போகின்றார்கள்.
ஆகையால் நிறை இன்ப வாழ்வுடன் என்றும் நிலவ வேண்டுவோர், அருட்பெரும்பதியோடு, ஒன்றி இருந்துகொண்டு வாழ்க்கையை நடத்தவேண்டும், கடவுள் உண்மையைத் தன்னுள், சத் விசாரத்தால் காணும்போது, அது அவரது திருவடியாக விளங்குகின்றது, அத்திருவடியை மறவாது, அதன் ஆணைக்கு இணங்க வாழ்கின்றபோது அந்த அடியானுக்கு விசேடநலம் செய்பவைகளையே வழங்குகின்றார் ஆண்டவர். இந்த அடியானுடைய பழவினைப்பயனால் வரும் கேட்டையொழித்து, விதியை விலக்கிவிட்டு, அருள் ஆற்றல் மிக்க, சுத்த தேகத்தையும், சுகபோகத்தையும் வழங்குகின்றார் என்பதுதான் இவ்வடிகளின் சாரம், செடி என்பதற்குக் கேடு தீமை, துன்பம் என்ற பொருள் உண்டு. “கெஷடி” என்ற திரிசொல்லின் வழி தோன்றியதுஇச் செடி என்பர். க்ஷ – க எனத் தமிழில் வழங்கப்படுதல் மரபு.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா,,,,