Vallalar Universal Mission Trust   ramnad......
90. இதய அம்புயத்து அருட்பெருஞ்ஜோதி


179. எம்புயக் கனியென எண்ணுவா ரிதய

180. அம்புயத் தமர்ந்த அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) பூவிற் சிறந்தது தாமரை என்ப, இதில் தெய்வீக நலம்பல அமைந்துள்ளதை யோர்ந்து யோக ஞானியர் அப்படிப் போற்றிக்கொண்டனர். அத் தெய்வ உண்மை விளக்கத்திற்குத் தக அதற்குத் கற்பனைப்பெயர் பல ஆக்கிக் கொடுத்துள்ளனர். அம்பு என்றால் தண்ணீர், ஜம் என்றால் தோன்றுதல் தாமரை தண்ணீரில் தோற்றலின் அம்புஜம் என்பாராயினர். தண்ணீரைக் குறிக்கும் பிற சொற்களோடு கூட்டியும், ஜலஜம், சரோஜம், வாரிஜம், வனஜம் முதலியனவாய்க் கொள்ளக்கூடும், இவையெல்லாம் தாமரையையே சுட்டும். இதற்குமேல், அம்பு என்பதை , , ம் = ஓம் என்னும் கடவுட்சார்பு கொண்டதாய் அதிலிருந்து தோன்றியுள்ள ஒளிநிலை யுலகுயிர்ப் பொருள்கள் எல்லாம் அம்புஜமாக, அகநிலைப் பகரவடிவ அருள்ஞான சக்தி பீடத்திலிருந்து காணலாகின்றதாம். அந்த அருட்பேரொளி நிலையே, அருட்ஜோதியாய், அருள்விந்தமாய், அல்லது அர விந்தமாய் ஆக்கிக்கொண்டு தாமரையாகப் பொருள்படுத்திகின்றனர்.

எங்கும் நிறைந்துள்ள அருட்பெருஞ்ஜோதியினின்று, ஓர் அணுவே ஆன்மாவாகி அது ஆயிரமிதழ் கமலமாகத் தலைநடுவுள் ஒளிர்கின்றதாம். இத் தாமரையில்தான் அருட்பெருஞ்ஜோதி வீற்றிருந்து , அருள் வழங்கத் தருணம் எதிர்நோக்கி இருக்கின்றதாம். இந்த இறை ஜோதியினின்றே உயிர்ச்சக்தி எழுந்து இதயத்தில் தங்கி ஜீவனையும் தேகத்தையும் விளங்கச் செய்து வாழ்விக்கின்றதாம். இந்த இதயமும், மற்ற இறையொளிச்சக்தி தங்கும் ஆதாரபீடங்கள் எல்லாமுமே தாமரைகளாகவே கூறுவர் யோகியர். நெஞ்சினிடத்துத்தான் உயிரியக்க , இரத்த ஓட்டச் செயல் காணப்பட்டு உடல் வலிமை அல்லது ஆற்றல் விளங்குகின்றதாம். ஒருவனது இந்த உடல் ஆற்றலே தோள் வலிமை புஜபலம் என்பர். இப் புஜ பலம் என்பது புஜக்கனி அல்லது புயக்கனியாம். இது குறித்தே இங்கு,

எம்புயக் கனியென எண்ணுவார் இதய

அம்புயத் தமர்ந்த அருட்பெருஞ்ஜோதி”

எனப்பட்டுள்ளதாம். யார், எவர் இந்த நம் அருட்பெருஞ்ஜோதியைத் தம் இதயத் தாமரையில் அல்லது நெஞ்சக் கமலத்தில் எழுந்தருளி விளங்குவதாகக் கண்டு துதிக்கின்றார்களோ, அவர்களின் புயக்கனியாக மெய்யாற்றலாக இருக்கின்றதாம்.

உடற்பற்று நீங்காதார் இதயத்து எழுகின்ற தெய்வ ஆற்றல் அருட்பெருந்தனை கொண்டதல்ல. ஆதலின் அது அவ்வளவு சிறப்புடையதாகாதாம். சுத்த சன்மார்க்கியோ ஆன்ம அணுவடிவினனாய், அனக அருட்சுடர் பரப்பிக்கொண்டு திகழ்கின்றான். அந்த ஆன்ம ரூபிக்கு இதயம் அவ்வணுவின் நடுவிடமேயாம். ( ஒன்றன் நடுவிடத்தை இதயம் என்று கூறுவது சகஜமே ) இந்த சுத்த சன்மார்க்கியின் அக நடு விருந்து, அனகமுற விரிந்து பிரபஞ்சவெளியெலாம் நிறைந்து பேரருட் பெருஞ்செயல் புரிந்துகொண்டிருப்பது அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றலால் இவன், விதியை வென்று இறப்பையே ஒழித்து விட்டு மரணமில்லாப் பெருவாழ்வில் விளங்கிக் கொண்டிருப்பான் இதுதான் எவர்க்கும் உரிய பெறலரும்பேறு ஆகும்.

அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா

vallalarspace.com/vumt