
165. எண்ணிற் செழுந்தேன் இனியதெள் ளமுதென
166. அண்ணித் தினிக்கும் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) உலகில் இன்சுவைப் பொருள்களின் சிறந்த ஒன்று தேன் என்பர். சுத்தமான மலைத்தேன், கொம்புத்தேன் , குறிஞ்சித்தேன் செழுமையாயிருக்கும். செழுமை என்றால் நீர்போல் இல்லாது, கெட்டியாக, நெகிழ்ச்சி உடையதாக இருப்பதாம். இத்தேன் சுத்த சத்துவ உணவுப்பொருளாகவும், பல பிணிதீர்க்கும் மருந்துப்பொருளாகவும் இருக்கின்றது. என்றாலும் இதில் குறைபாடும் உண்டு. ஏனெனில், இத்தேன் தேனீக்களின் பேருழைப்பால் சேகரிக்கப்படுவதைக் கவர்ந்து கொள்ள, அவ் ஈக்களை விலக்கவோ வேண்டியிருக்கிறது. மேலும் அத்தேனைச் சேகரிப்பதற்கு மக்களும், ஆபத்திற்கும், கஷ்டத்திற்கும் உள்ளாகவேண்டியுள்ளதாம். அப்படியெல்லாம் பெற்று, முறைப்படி அளவோடு உட்கொண்டால்தான் நலம் உண்டாகலாம். இதுபோன்றே அமுதென விளங்கும் அருஞ்சுவைப் பொருட்களும் பிணிதீர்க்கும் அவிழ்தங்களும் உளவாம். இவைகளையே உலகியலார் மதித்துக்கொள்ளுவர்.
ஆனால் உலகறியாத உயர்சிறபுடைய தேனும் அமுதும் உண்டு. உண்மையில் அது தேனுமல்ல. அமுதமுமல்லவாம். அது நம் அருட்பெருஞ்ஜோதியே ஆம். இதுவே நல்ல தேன் போலும். அமுதம்போலும் இருக்கின்றது. எங்கே எப்படி யிருக்கின்றது என்றால், அண்ணித்து உட்பொருந்தியும் , தெவிட்டாது இன்சுவை கொண்டதாயும் இருக்கின்றதாம். இது புறத்திருந்து உட்கொள்ளப்படும் ஒன்றல்ல. இயல்பாகவே உள் அமைந்து உவகை செய்ய உள்ளதாம். ஆகையால், இந்த அருட்பெருஞ்ஜோதிப் பொருளை, உள்ளுற உணர்ந்து எண்ணினாலே பயனளிக்கும் அற்புதம் உண்டாம்.
இங்கு புறத்தேன் பற்றியும், தேவ அமிர்தாதி பற்றியும் பெரிதாய் விளம்பி, விளம்பரப்படுத்த வரவில்லை நம் அடிகளார். உலகறிந்த இவற்றைக் கூறி, ஏகதேச உவமைப்பொருளாகக் காட்டிவிட்டு, இது போன்றவைகளைவிட மிகமிகச் சிறப்புடையது நம் அருட்பெருஞ்ஜோதி என்பதை யுணர்த்தவே வந்தார் நம் பெருமானார். தேனும் அமுதமும் பலர் விரும்பி ஏற்பர். எல்லோரும் விரும்பார். பலர் விரும்பினும் அடைதற்கான இடம் பொருள் ஏவல் இன்மையால், கிடைக்கபெறார் என்பது தெளிவு, ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலான நம் அருட்பெருஞ்ஜோதியோ, அறிந்தோர் எல்லோராலும் மிக விரும்பி எக்காலத்தும் ஏற்கப்படுவது, இதனை அடையப் பொருளாளர் களைவிட, இடம் பொருள் ஏவல் அற்ற ஏழையர்களுக்கும் எளிதாய் இருக்கின்றதாம். பொருள் மிக்குடையோர் புறச் சுக வாழ்வில் அமிழ்ந்து அருட்பணி ஏற்காதிருத்தலின், அருள் கிடைப்பதும் அதுகொண்டு அருட்ஜோதியை அடைவதும், அருமையாகின்றதாம். அன்புடைய ஏழையரோ கடவுள் அருளையே வேண்டி வேண்டி அருளடைந்து உய்வார்.
புலன் ஆவற்பெருக்கால் இன்றைய மக்கள், மேலும் மேலும் சுகபோகப் பொருட்களை அதிகம், விரும்பி, வருந்தி முயன்று பேரளவில் பெற்றும் வீணில் அழிந்து ஒழிந்துகொண்டேயிருக்கின்றனர். இவர்களால், உலகில் அவத்தைகளும் துன்பங்களும் சிதைவும் தான் எங்கெங்கும் பெருகிக்கொண்டிருக்கக் காண்கின்றோம். இவர்கள் புலபோகத்தில் இச்சையற்றவர்களாய், அருளில் நாட்டமுடையவர்களாய், உண்மையான அழியா இன்பில் விருப்பமுடையவர்களாய் , இருந்து தயா நன்முயற்சியை வேண்டிய அளவு மேற்கொண்டால் போதும்., அப்போது புறத்தேவை குறையும், அகத்தில் அன்பு பெருகும் அன்புச் செயலால் இன்பமே ஓங்கும். நம் அருட்பெருஞ்ஜோதியே உண்ணின்று நிறையின்ப வெளியீட்டால் சதா இனிக்கச்செய்து கொண்டிருப்பார்.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா