161. எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
162. அண்ணியுள் ளோங்கும் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) அந்தமிலா ஆனந்த வாழ்வோடு என்றும் விளங்கும் அருளானை பெற்ற நம் வள்ளற் பிரானுக்குக் குறையொன்றும் இருததற்கில்லை. அவர் தன்னை முற்றும் அடைக்கலமாய் அருட்பெருஞ்ஜோதிக்கே தந்துவிட்டார். அந்த அருட்பெருஞ்ஜோதியும் அவரை ஏற்று, உட்கூடி நின்று, வேண்டுவனவெல்லாம் வழங்கிக் கொண்டிருக்கின்றதாம்.
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்குரு வடிவாய் நம் வள்ளற்பெருமான் முன் எழுந்தருளி விளங்கினார். ஒரு சமயம் அப்போது பணிவன்போடு உட்கசிந்துருகி நின்ற நம் அடிகளாரைத் திருநோக்கு புரிந்து ஆசி கூறி “ எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று அருள்வாக்கும் அளிக்கின்றார். நினைத்ததை நினைத்தபடி செய்து, குறையும் குற்றமுமின்றி முடித்திடல் வேண்டுமானால் அஓஅடுச் செய்கின்றவர்க்கு எவ்வளவு அகப்புற வலிமை இருக்கவேண்டும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்” என்பது வள்ளுவம் . இதிற் குறிக்கப்பட்ட திண்மை, உடற்திண்மையும் உள்ளத்திண்மையுமாகக் கொள்ளலாம். ஆனால், மனித முயற்சியால் பெறப்படும் இத் திண்மை எல்லாம் உண்மையாகாது. அருளாளன் வழங்கும் ஆற்றலே திண்மை மிக்கது. வள்ளல் கொண்டு திண்மை , அப்படி அருளாளன் வழி வந்ததாகும். “ எண்ணிய எண்ணியாங் கியற்றுக” என்று வாக்களித்த அருட்குரு’ அப்படி வாக்களித்துவிட்டு வந்த வழியே சென்று விடவில்லை! முன்நின்று வாக்களித்த அக்குருநாதர் நம் வள்ளலுட் புகுந்து, உள்ளத்தில் தங்கி அருட்பெருஞ்ஜோதியாய் ஒளிர்கின்றவர் ஆகிவிட்டது. அவ்வருளாளன் அருட்பெருஞ் செயலேயாகும். இப்படி அகம் இருந்துகொண்டும். உள்ளுணர்வில் உணர்த்திக் கொண்டும். செயல்புரியச் செய்துகொண்டும் உள்ளது அந்த அருட்பெருஞ்ஜோதி இறைகுருவாம். அண்ணி என்றது அண்ணித்து , மிக நெருங்கி வந்து கூடி யுட்குலவும் குறிப்பை யுணர்த்துவதாம்.
அருட்குருவானவர் அண்மி வந்து உட்புகுந்து ஒழிந்துபோய் விட வில்லையாம். உட்பொருந்தி அருட்பெருஞ்ஜோதியாய் நின்று, வளரொளியாய் விளங்கிக் கொண்டு உதவுகின்றாராம். இதனால், அந்தக் குரு ஜோதியே, எண்ணத்தகுவன எண்ணச் செய்தும், அடையந் செய்தும், நிறைவேற்றச் செய்தும் கொண்டிருப்பது உண்மையாகும்.
ஏகதேச அருள்பெற்ற மக்களிற் சிலர், ஓரளவு உள்ளத் திண்மை பெற்றிருக்கின்றனர். அத் திண்ணிய மன உணர்வை உள்ளுணர்வு என்றும், மனச்சாட்சி என்றும் மெளனவாக்கு என்றும் அந்தரான்ம உரை என்றும் கொண்டு அதன் குறிப்பு வழி தாம் நடப்பதாகக் கூறிக்கொள்கின்றனர். இவர்கள், எண்ணிய எண்ணியாங்கு எந்த அளவுக்கு எய்துகின்றனர் என்பதும், இவர்களின் திண்மை, எவ்வளவு காலம் நிலைப்பது என்பதும் நாம் அறிவோம் மருணிலை மாந்தரின் திண்மை எல்லாம் காலக்கிரமத்தில் மங்கி மறையும் என்பதும் அறிந்ததே. ஆகையால், அகம் வளர் அருள் ஒளியின் துணைகொண்டு அருளே நினைந்து, அருளே புரிந்து, அருளின்பில் தழைக்க வேண்டியது நம் கடமையாம்.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா….