Vallalar Universal Mission Trust   ramnad......
80. நானந்த மில்லா ஆனந்தம்

159. நானந்தமில்லா நலம்பெற வெனக்கே

160. ஆனந்த நல்கிய அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்)

ஆனந்தம் என்றால் பொதுவாக இன்பம் என்று பொருளாக்குகின்றனர். இச்சொல்லினை ஆய்ந்து, ஆழ்ந்து பார்க்கும்போது விளங்குவது இது; யாதெனில் ஆன்+அந்தம் எனப் பிரித்து நோக்கும்போதும் ஆன் என்னும் ஆன்மப்பசுவுக்குரிய முடிவுநிலையே ஆனந்தமாக உள்ளதை யுணர்த்தும் . ஆன்மாவின் அந்தமாகிய முடிவுநிலைதான் என்ன? அம் முடிவுநிலையைப் புரிந்துகொள்ள, முதலாகிய தொடக்கநிலையையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முன்னர் ஆன்ம உண்மை குறித்தபோது, அவ்வான்மா என்பது, நமது உண்மையையும், கடவுள் நிறையுண்மையும் இரண்டற்ற ஒரு வடிவாய்த் திகழும் சிற்றணு வண்ணமாய்த்தான் கண்டோம். ஆகையால், கடவுள் இயல்பும், இல்லை. அதுவே ஆன்மாவுக்குமாம். எனினும் ஆன்ம உண்மை பக்குவ மனிதனில்தான் வெளியாகின்றது. பக்குவிதான் தன் இயல் வடிவம் நித்திய ஆன்மாவே, அல்லாதி அநித்திய உடல் வடிவம் தன் இயல் உருவல்ல என்று அறிகின்றான். இந்த நித்திய ஆன்மாவுக்கு உயிருடம்பு சேர்ந்து பரிபாக முண்டானால்தான் அதன் உண்மை வெளியாகின்றது. அது வெளியாகாதவரை உடற்சூழல் ஆவதும் அழிவதுமாயிருக்கும். இப்படி ஆன்மாவுக்குப் பிறவித் தொடரக் காரணம், உண்மையைத் திருவருளால் வெளிபடுத்துதற்கேயாம். இதுவே, ஓர் ஆன்மாவில் , கடவுள் அருளிருந்து செயல்படுத்துவதை, அவ்வான்மாவின் மூலமாகிய ஆணவத்தின் செயற்பாடாகக் காண்கின்றான் அபக்குவி, இவன் அருட்பக்குவமுறும் தருணம், அவ் ஆணவம் ஒழிந்து பதி ஐக்கியம் அடைகின்றான். இதுதான் ஆன்மாவின் முடிவு என்று கொள்ளப்பட்டது. எனவே, மலபாச பந்தநிலையை ஓர் ஆன்மாவின் முதல் தொடக்கநிலை என்றும் அப்பந்தமற்று பதிக்கலப்புற்று நிலையே முடிவு நிலை என்றும் கொண்டனர். அதுவே, ஆன் அந்த நிலை என்றனர்.

மேற்படி ஆனந்த நிலைதான் ஓர் ஆன்மாவுக்கு முடிவானால் அங்கு நித்திய இன்ப வாழ்வுக்கு இடமெங்கே? ஆனந்தம் என்பதற்கு இன்பமென்ற பொருளே பொருந்தாமல் போய்விடும். ஆகையால், அப்படி ஆன்மாவுக்கு வாழ்வற்றுப்போய்விடக் கூடாது. எனவேதான். நமது அருட்பெருஞ்ஜோதி நானந்த மில்லா நலம் என்னும் ஆனந்த வாழ்வு” நல்கியுள்ளதாக நவில் கின்றார் நம் வள்ளலார். நான் அந்தமில்லா நிலையாவது; நான் என்னும் உடற்பற்று நீங்கா, அகங்காரபோத ஆணவநிலை அல்ல; அருள் உண்மை கொண்டு ஆன்ம இயற்கை நிலை நின்று குறித்ததாகும். உண்மையில் ஆன்மாவே இறைஇயல்பாய் அருள் தன்மையாய் நான் என இருக்கின்றதாம். இதனால்தான், நான் நம் தன்மை யொருமை, தன்மை பன்மை என இலக்கணஞ் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடவுள்மயமாய் உள்ள நம் உண்மையை யுணர்த்தவே “ஐ என்னும் எழுத்தைத் தலைவன், கடவுள் என்ற பொருள்தர வழங்கினர் நம் ஆன்றோர். அது “நான்” என உள்ளதுமாம். இக்கருத்தையே அகநிலை யறியாது கொண்டுள்ளனர் ஆங்கிலேயர். அவர்களின் (1) யும் நான் என்ற பொருள் கொண்டதே. இந்த “ஐ” நிலையை நவநிலை கொண்ட பதிநிலையாக அகமுணர்ந்த பெரியோர் அகர வரிசையில் ஒன்பதாவதாக வைத்தனர். ஆங்கிலத்தும்கூடி (I) ஒன்பதாவது எழுத்தாகவே அமைக்கப்பட்டுள்ளது.

எங்கும் நிரம்பிய கடவுளைப் பரமான்மதி என்பர். அவர் இயல்பு சச்சிதானந்தமேயாம். அவரே தனியொரு ஆன்மாவிலும் இயல்பாய்ச் சச்சிதானந்தமாகவே இருக்கின்றார். ஆனால், அந்தச் சச்சிதானந்த அனுபவம் வெளிப்பட்டு விளங்கக் குறிப்பிட்ட ஓர் ஆன்மாவுக்கு இந்தப் பக்குவ மனித ஜீவதேக வாழ்வு நிலைபெற வேண்டியிருக்கின்றதாம். இந்தத் தேக ஆன்மாவையே ஜீவான்மா என்கின்றனர். தேகப்பற்றொடு வாழ்ந்து வரும் ஜீவான்மாவுக் குள்ளீடாய்ப் பரமான்ம சச்சிதானந்தம், விதையும், விருட்சமும், கனியும்போல், மிகமிக நுண்ணிலையில் மறைந்துகிடக்கின்றதாம். அப்படி மறைந்து கிடப்பதை வெளியாக்கவே புற விளைவெல்லாம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாம். மனிதன் சுத்த சத் விசாரத்தால் சச்சிதானந்தக் கனியுண்மையைக் கண்டு அடைய முயல்கின்றான். புற எம்முயற்சியாலும் எட்டாப்பழமாய் இருந்த ஒன்று நிறையருட்சேர்க்கையால் தன் உட்பொருந்தியுள்ள அருட்பெரும் ஆனந்தக்கனியாகக் கண்டு கொள்ளுகின்றான். கண்டுகொண்டுதோடு உட்பொருந்தி, அருள்வாழ்வு நடத்துவதாலே ஆனந்தானுபவம் ஏற்பட்டு ஒழிவற விளங்கலாகின்றதாம். இந்த ஆனந்தவாழ்வுதான் நானந்தமில்லா நலம் ஓங்கு வாழ்வாகும்.

அகவல் உரை விளக்கம்

தயாநிதி சரவணானந்தா

vallalarspace.com/vumt