Vallalar Universal Mission Trust   ramnad......
79.இறவா வரமளித்த அறவாழி


157. இறவா வரமளித் தென்னைமே லேற்றிய

158. அறவாழி யாந்தனி அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) தனி அருட்பெருஞ்ஜோதியாவது, ஒப்பற்ற சிறப்புமிக்க அருட்பேரொளிப் பெருக்காக இருக்கின்றதைச் சுட்டுகின்றது. இந்த தனி அருட்பெருஞ்ஜோதிக்குமுன் நிறுத்தப்பெற்றுள்ள அறவாழி என்ற தொடர்மொழி இறை இயல் உண்மையைக் குறிக்கின்றது. அறவாழியாம், அறவாழியாகும் அல்லது அறவாழியாகிய தனியருட்பெருஞ்ஜோதி எனக்கொள்ளலாம். அறம் என்றால், தன்மை, குணம், தருமம், அருள் ஆம்; ஆதலின் கடவுள் அறம் அருளேயாகக் கொள்ளப்படும். ஆழி என்ற சொல் ஆழ்ந்து விளங்கும் பெருங்கடலை யுணர்த்தும் காரணப்பெயராம். அருட்பெருங்கடல் எனப் புனைந்து கொள்ளப்படுகின்றது நம் அருட்பெருஞ்ஜோதி.

அருட்பெருஞ்ஜோதி ஆனந்த சாகரத்தின் உண்மையை விளக்குவாம். சாதாரணமாகக் கடல் நீரின்பெருக்காய் இருக்கின்றது. இதன் ஆழமும் பரப்பும் அதிகமாய் இருக்கலாம். ஆனால், நமது அருட்பெருஞ்ஜோதியோ அளப்பரிய அகண்ட வெளிமுழுவதும் நிரம்பியுள்ளது. இதன் ஆழமும்பரப்பும் அறிய முடியுமா? முடியாது. இதனால் இந்த அறக்கடல் விசேடத்தன்மை கொண்டதாக அறியப்படும். அவ்விசேடத் தன்மையாம் சிறப்பியல்பை யுணர்த்தத் தனி என்ற சொல்லையே ஏற்ருத் தனி அறவாழி எனக் கொள்ளவேடியிருக்கின்றதாம். அருட்பெருஞ்ஜோதிக்கு அந்தத் தனி அடை இல்லாமலே உண்மை குறிக்கும் பெருமை கொண்டதாய்க் கொள்ளலாம்.

அகத்தே அழியாதிருந்து வரும் கடவுளான்ம வடிவுக்குப் புறத்தேகங்கள் தோன்றி வளர்ந்து மடிந்து மறைந்துபோய்க் கொண்டிருப்பதே பிறப்பு , இறப்பு ஆம், இந்தப் பிறப்பும் இறப்பும் இல்லாது, ஆனால் என்றும் நிலைத்து வாழ்வோடும் விளங்க வேண்டின், அகநிலையிலிருக்கும் கடவுளான்ம திருவருளால் மனித வடிவோடு, அனக நிரையுறு அனுபவமும் கொண்டு நிலவவேண்டியுள்ளதாம். இந்நிலை அனுபவம்தான் தான் பெற்ற இறவா வரமாகக் குறிக்கின்றார் வள்ளலார். தீண்டரிய அக் அம்பல நிலையே இங்கு மேல் நிலையாக விளம்பப்படுகின்றது. இம்மேனிலை நின்று அருளொளி மேனியராய் வாழ்வாரே மரணமிலப் பெருவாழ்வு எய்தியராவார். அங்கு விளங்குவது அல்லலிலா ஆனந்த வாழ்வே. இது குறித்தே முன்பு., எல்லை யில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தியென், அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி” என்று கூறினார். இந்த இறையருட்பெருங்கடல் எங்கும் நிரம்பியுள்ளது. இதற்குக் கங்கு கரையில்லை. இதனையே பேரின்பப் பெருங்கடலாய்க் கொண்டு, சுத்த சன்மார்க்கச் சித்தியோடு வாழ்கின்றவரே இறைவாழ்வு பெற்றவர் என்பது உண்மை.

அல்லல் பிறவியைக் கடலெனக் கொண்டு, பிறவா நிலையை அக்கடலின் கரையாகக் கருதி, அதனை அடைந்துவிட்டால் இறைமயமாகிவிட்டதாக முடிவு செய்திருந்தனர் முன்னோர். அருள் கொண்டு அழியா வாழ்வில் நிலவாத வரை ஒருவன் புறப் பிறவி எடுத்துக்கொண்டிருந்தாலும் சரி பெரும்பயன் இல்லை என்பது தெளிவு.

இறவா வரம்தரு நற்சபையே

என மறை புகழ்வது சிற்சபையே”

என்றதால், மறைபுகழ் சிற்சபை வாழ்வே இறவாவரம் தருவது என்பது உண்மையாம். இந்த சிற்சபையைப் புறத்திலிருந்து சிந்திப்பார்க்கு அதிற் கலந்து மறைந்து கிடக்கும் அழியாநிலை கிடைப்பதேயன்றி வாழ்வில்லையாம். அவ் ழியா ஆன்ம இயல் நிலையை இறவா வர நிலையாகக் கொள்ளுவது முன்னோர் கொள்கையே இறவா திருக்க மருந்துண்டு காண் அது அம்பல வாணன் அடிக் கமலம் மறவா திருப்பதே எனவும், சிவாய நம என்று சிந்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை” எனவும், தில்லை வெளியிற் கலந்து கொண்டார் திரும்பவும் வருவாரோ? எனவும் கூறினர் ஆன்றோர், இவையெல்லாம் புறநெறியின் முடிவேயாம், அக அருட்பெருநெறியால் மட்டும் இறவாமையோடு இறையின்ப நிறைவாழ்வும் கொண்டு நிலவுதல் சாத்தியம், சத்தியம்.

அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா.

vallalarspace.com/vumt