155. இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்
156. றன்புட னெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) முயன்று செய்து முடிக்கும் அற்புதச்செயல் சித்து எனப்படுவது. இந்தச் சித்துச் செயலே சித்தியாகவும் கூறப்படும். இச்செயலின் சித்தியால் வியப்பும் அகங்காரமும் உண்டாகிவிடக்கூடாது! அடக்கமும அன்பும் பெருக வேண்டும். மெய்யன்பு இல்லாத அகங்கார சித்தர்கள் அதிமுயற்சியால் சித்திகள் பல பெற்றும், அருளின்ப வாழ்வு பெறாது போய்விடுகின்றனர். அருள் அடைவது ஒன்றே உண்மை வெற்றி சித்தித்ததாகும்.
கடின சித்தர்கள் ஒருமை மனத்தோடு தவமுயற்சி மேற்கொண்டு வேண்டும்போது, வேண்டுவதை வேண்டியாங்கு வழங்கும் ஈசன் அவர்களின் வேண்டுதலைத் தந்து விடுகின்றார். ஆனால் அன்போடோ, உவகையோடோ தருகின்றாரில்லை அந்த ஆண்டவர், ஆகையால், அப்படிப் பெறப்படும் சித்தியால் பெரு நன்மையும் பேரின்பமும் விளைவதற்குப் பதிலாக, அகங்கார போதையில் ஆழ்ந்து நசித்தே போய்விடுகின்றனர். அந்தச் சித்தை இச்சித்து அடைந்த சித்தர்கள்.
அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றல் அளவிடற்கரியது, என்றும் செயலோடு விளங்கிக்கொண்டேயிருப்பது, அந்தப் பதியை வேண்டியடைகின்ற சித்தித்திறன் ஒருவனது அன்பின் அளவுக்குத் தகப் பெருகுகின்றது. அன்பற்ற கடினமனமுடையார்க்குச் சிறிதளவு சித்தித்திறந்தான் கிடைக்கின்றது. அது கால எல்லையில் கடுகி ஒழிய அந்தச் சித்தனும் அப்போது மடிந்து ஒழிகின்றானாம். அகங்காரமற்ற அருளாளனோ, தன்னை முற்றும் பதிபால் அடைக்கலமாகத் தந்துவிடுவதால், அவரும் அவனைத் தழுவி ஏற்றுக்கொண்டு தன்னையே முழுமையாக அவனுக்கு வழங்கிவிடுகின்றார். தன்னையே முற்றும் வழங்கும் தியாகேசன் அல்லவா நம் பதி ! அப்படிப் பதியில் அரவணைப்பில் ஒன்றி நிலவும் அருளாளன் நற்சித்திகளை நாளும் புரிவதில் என்னா தடை! குறைவற்ற நிலையுற்று இன்பசித்தி புரிந்துகொண்டு வாழ்கின்றவனுக்குத் தடையேது! முடிவேது!.
நமது அருள் அடிகளார் அருட்பெருஞ்ஜோதியைப் போற்றிச் சார்ந்து கொள்வதால் முடிவிலாத இன்பசித்தியோடு வாழ அன்போடு ஆணை பெற்றுவிட்டார். அருளம்பலத்தில் ஆனந்தத் திருநடனம் கண்டு கலந்து களித்திருக்கும் அடிகளார், அன்பின்பம் விளைவிக்கும் திருச்செயலாம் சித்தே புரிந்துகொண்டிருக்கின்றார். மெய்யன்பிலார், புலனின்பவேட்கையில் புக்கு அழுந்தி அழிந்து கொண்டிருப்போரைப் பண்படுத்தற்கென்றே அம்பலத்திலிருந்து வெளிப்படாதிருக்கின்றார் நம் அருள் அண்ணலார். மக்கள் புல போக இச்சையை யொழித்து , அம்பல சகோதரர்களாய் வாழத் தொடங்கவேண்டும். அபோது அருட்சித்தோடு அருட்பிரகாசரும் எழுந்தருளி உதவுவார்.
உலகத்தினரை அன்பு அருள், இன்பநிலைக்கு ஏற்றுவதற்கான சுத்த சன்மார்க்க சித்திகளைப் புரியவேஆணையிடப் பெற்றுள்ளார் நம் பெருமான், ஆகையால் மெய்யறிவின்ப நாட்டம் இல்லாத மக்கள் சமுதாய நடுவில் தோன்றிப் பலவாகிய அற்புத சித்திகள் புரிந்து, வியக்கவும், மயக்கவும் உளம் கொள்ளாதிருக்கின்றார் என்பது உண்மை.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா
Write a comment