Vallalar Universal Mission Trust   ramnad......
76. பெரிதும் , சிறிதும், அரிதும்


151. பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்

152. அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) அருட்பெருஞ்ஜோதியின் தோற்றமும், தன்மையும், நிலையும், விளக்கமும் அனுபவமும் எப்படி எல்லாம் இருக்கின்றன என்பது குறித்து ஈண்டு சில புகலப்படுகின்றன. இந்த அருட்பெருஞ்ஜோதி பெரியது என்று சொல்லிவிடலாம். பெரியது என்றால் எவ்வளவு பெரியது? அதற்கு ஒப்பு உவமை யாக எதைச் சுட்டிக் காட்ட முடியும்? எதையுமே உவமித்து அளவு படுத்திக் கூறமுடியாதாம். இந்தப் பிரபஞ்சத்தில் ஞாயிறும் அது போன்ற விண்மீன்களும் பெரிய ஜோதி கோளங்களாக உள்ளன. இவற்றில் ஒரு பெரிய ஜோதி கோளத்தை நம் அருட்பெருஞ்ஜோதிக்கு ஒப்பிடலாமா என்றால் அது கொஞ்சமும் பொருந்தாது. அப்படியுள்ள விண்மணிக்கூட்டம், பால வீதி அல்லது பால்வெளி ( milky way)எனப்படும். அந்த ஒளித்திரளையே ஒட்டுமொத்தமாகக் கொண்டு ஒப்பிட்டாலும் அது நம் அருட்பெருஞ்ஜோதிக்கு எந்த விதத்திலும் ஒவ்வாது. அதற்கு மேல் நாம் காணும் பிரபஞ்சமும் பேரொளிமயமானது எனக் கொண்டாலும் கூட அதுவும் அகண்ட பெரும் பிரபஞ்சத்தின் ஓர் அற்பக்கூருதானே! ஆதலின், இந்தப் பிரபஞ்சத்தின் அளவைவிட மிகப்பெரிது நம் அருட்பெருஞ்ஜோதி எனலாம். மகாபிரபஞ்சத்தின் எல்லை அளவைக் கணக்கிட்டுக் கூறமுடியாது! அப்பேரெல்லைக்கும் அதீதமாய் விளங்கி நின்று ஆள்கின்றது நம் இறைபெருஞ்ஜோதியாம்.

இனி, சிறிதினும், சிறிதாய் உள்ளதும் நம் ஜோதியே எனக் கூறப்படுகின்றது. சாதாரணமாகக் கண்ணுக்குப் புலனாகக்கூடிய சிறிய பொருள்களில் நுழை கதிர் ஒளியில் மிதந்து கொண்டிருக்கும் நுண் துகள் சிறிது என்பர். அதனினும் கட்புலனாகாது அணுவெனப்படுகின்றது. அந்த அணுவையும் மிக்க ஆற்றல் கொண்ட ( ஐம்பது லட்சம் பங்கு பெரிதாக்கிக் காட்டக்கூடிய) நுண்ணோக்காடி ( microscope) மூலம் காணப்படும் சிறு பொருளையும் இன்றைய உலகம் கண்டுகொண்டுள்ளது. ஆனால் இந்தச் சிற்றளவுப் பொருளையும், இதனினும் சிறியதையும் கூட விளங்கச் செய்துகொண்டும் ஆண்டு கொண்டும் உள்ளது நம் அருட்பெருஞ்ஜோதிச் சிற்பரம்பொருளேயாம். அவ்வளவு சின்னஞ்நிலையில் இருந்தாலும்கூட அகண்ட பிரபஞ்சம் முழுவதையும்தானே தனித்து நின்று ஆளவல்லதாய் இருக்கின்றதாம்.

அடுத்து நம் இறைஜோதி அரியது எனப்படுகின்றது. அரியது என்றால், அருமையானது, சிறந்தது என்றும் அடைதற்கு முடியாதது என்றும் பொருளாம். உலகம் அறிந்ததும், அறியாமலே கற்பனை பண்ணிக்கொண்டுள்ளதுமான சிறந்த பொருள் எதுவோ அதனினும் சிறப்புமிக்கது நம் அருட்பெருஞ்ஜோதியாம். இதனுடைய அருமை பெருமையை எவரே அறிவர்! அறிதற்கரிய சிறப்புண்மையை எப்படி எதற்கு ஒப்பிட்டுக் கூறக்கூடும்? அப்படி அறியமுடியாத அரிய பொருளை எப்படி அடையமுடியும்? ஆகையால், பிறரால் அறிந்து அடையமுடியாத அரிய பொருளாய் உள்ளது இந்த அருட்பெருஞ்ஜோதி என்றும், அப்படிய அடைய முடியாத அரிய தன்மையுடையது இதுவெனில், இதனால் என்ன பயன் என்று வினவக்கூடும். உண்டு பெரும்பயன் சுத்த சத்விசாரத்தில் நிலவும் ஒருவன், அந்த அரிதில் அரிதாகிய அருட்பெருஞ்ஜோதியே இவனாய் மற்று யாவுமாய் இருப்பதாக அருளால் உணர்ந்து அதுவாகவே விளங்குகின்றான். இவன் தன்னை அயலானாக எண்ணிக்கொண்டிருக்கும் வரை, அந்த அருட்பெருஞ்ஜோதி நிலை அடைதற்கரிய ஒன்றாய் இருப்பதும், அதுவே இவனாய் அருள் நிலை நின்றுணரும்போது, மேலும் அடையக் கருதுவது அறியாமையே என்று அறிகின்றோம்.

அகவல் உரைவிளக்கம்.

தயாநிதி சரவணானந்தா.

vallalarspace.com/vumt