
147. சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
148. அத்தகை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்0 முன் இரண்டு அடிகளில் சத்தர்கள் தழைக்க நம்பதி அகம்புறம் நின்று உதவும் உண்மை குறிக்கப்பட்டது. இங்கு சத்திகள் எல்லாம் அப்படித் தழைத்திட வேண்டி அவ் அருட்ஜோதியே உதவிக் கொண்டிருக்கின்றதாக மேலும் விளக்கம் செய்யப்படுகின்றது. முதலில் புறத்திலங்கும் வடிவமே தோற்றுவது இயல்பாய் இருத்தலின் அது குறிக்க வென்றே சத்தர்நிலை யுரைக்கப்பட்டது. அடுத்து உருவுள்ளிருக்கும் ஆற்றலை யுணர்தல் முறையாய் உள்ளதாம். இதனால், அவ்வக ஆற்றலை யுணர்த்த இந்தச் சக்தி வெளியீடு தரப்பெற்றுள்ளதாம்.
சக்திகளிலே அனாதியாகவுள்ளது பேரருளே. அந்தப் பெருஞ்சக்தியே இவ்வுலகிடை எல்லாவற்றிற்கும் ஆதியாய் இருந்துகொண்டு, தன்னையே முழுமையாக வெளிப்படுத்த இப் பிரபஞ்சக் காரியப்பாட்டை மேற்கொண்டுள்ளதாம். இந்த அருட்பெருஞ்சக்தி, பொதுவாக எங்கணும் நிரம்பியிருந்தாலும் கூட, மனிதனில், நிறை பக்குவ நிலையிலன்றோ வெளிப்பட்டு அனுபவத்தே விளங்கவுள்ளதாம் இந்த முடிவான அருள் அனுபவநிலை அறிந்து அடையப் பெறுமுன், எத்தனைவித சக்திகளாக அந்த அருட்தோற்றமளித்து, செயல் பட்டு, பலவாகிய புற அனுபவங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
உலகில் வெளிப்பட்டுள்ள இயற்கைச் சக்திகள் பலவாம். இன்னும் வெளியாகாத சக்திகள் எத்தனையோ இன்றைய அறிவியல் கண்டுள்ள புறச்சக்திகளும் அணுவகச் சக்திகளும் , அவற்றின் அமைப்புகளும், செயல் விளைவுகளும் வியப்பளிக்கின்றன. ஆனால், இந்தச் சக்திகளுக்கெல்லாம் தாயகமாயுள்ள ஒன்றை உணராதிருக்கின்றது இந்த விஞ்ஞான உலகம். அணுவைப் பிளந்து அருஞ்சக்தியைக் கண்டு மருள் வாழ்வில் மடிந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிக்கு, அருள் உண்மைபுலனாகவில்லை. ஆன்ம அணுவைத் தயாநெகிழ்ச்சியால் மலரச்செய்தால், அருள் ஒளி வெளிப்படும் அது கொண்டு வாழ்ந்தால் மெய்யின்பம் பெற்று விளங்கலாம்.
இறையருட் பெருஞ்ஜோதி யொன்றே எல்லாச் சக்திகளுமாய், புறத்தில் மாறுபட்டுத் தோன்றுகின்றது. உண்மையில் அந்த ஒரு சக்தியே நமது அனுபவத்தின் பொருட்டு, இப்படி அனந்தசக்தியாய் உள்ளது மெய்ஞ்ஞானியர் கண்டதே, இவர்கள் இந்தச் சக்திகளை எல்லாம் ஐந்து பிரிவில் அடக்கிக் கூறிவிட்டனர். அவை பொருட்சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி, யோகசக்தி, அருட்சக்தி ஆம், இவற்றில் பொருட்சக்த்தியின் கூறு, அணு முதல், அண்ட பிண்ட சராசரங்அக்ள் எல்லாம் அடங்கும். கிரியா சக்தி என்பது அணுவக மின் காந்த இயக்கம் முதல் விண்மீன்களின் சுழற்சி வேகம் வரையும், எல்லா ஜீவ உயிர்ப்பு இயக்கங்களுமாம். நமது அருட்சக்தியின் பிறிதொரு கூறுதான் ஞானசக்தியாக மனிதனில் மலர்ந்துள்ளது. இது கீழ்நிலை உயிரினங்களில் புலனறிவு அல்லது உணர்ச்சியாக இருந்துவருகின்றதாம். மனிதனில் மன அறிவாகத் தோற்றி உள்முக விசாரணையில் கடளான்ம ஞானமாக விளைவு கொள்கின்றது. இந்த ஞான சக்தியின் விளைவே அனைத்துக் கலை வெளியீடுகளுமாம். இக்கலை ஞானத்தின் முடிவில் உட்கூடிப் பெறுகின்றது யோகசக்தியின் பயனாக இருக்கின்றதாம். இந்த யோக ஆற்றலே ஆன்ம சக்தியாகவும் கூறுவர். இவ் ஆன்ம சக்தியாற் பெறும் யோகசித்திகளுக்கு மேல் விளங்குவது அருட்சக்தியால் அடைவுறும் மெய்யின்ப நிலையாக உள்ளதாம். இந்த அருள் ஏகதேசத்தால் மனிதன் எத்தனையோ காரியசித்திகல் பெற்றிருக்கின்றான். நிறையருளால் இறை இன்ப வாழ்வு பெறுவதே மனிதனின் குறிக்கோளும் கடவுளர் ஆணையுமாம்.
ஆகவே நிறை அருட்பெருஞ்சக்தி ஒன்றேதான் யாவற்றிற்கும் அடிநிலையிலிருந்து கொண்டு, தன் முழுமையான உண்மையை வெளிப்படுத்திப் பயன்காணச் செய்யவேண்டி இப்படிப் பலப்பல சக்திக் கூறுகளாய்ச் தழைத்துப் படர்ந்து விளங்கிக் கொண்டிருக்கின்றதாம். அத்தகை என்றால், அவ்வண்ணம் என்று பொருளாம். அதாவது அந்த அருட்பெருஞ்சக்தியே ஓர் ஒரு நிலையில் பொருள்களாகவும், இயக்கங்களாகவும் அறிவு உணர்வுகளாவும், யோகசித்திகளாகவு, அருள் அனுபவமாகவும் தோற்றி தோற்றி விளங்குகின்றதாம். இதனால், நாம் எதையும் அகம் நின்று ஒளிர் அருட்பெருஞ்ஜோதியின் புறத்தோற்றச் சிறு கூறுகளாகக் கண்டு கண்டு போற்றுதல் வேண்டுமென்பதுதான் இவ்வீரடிகளின் கருத்தாம்.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா