146. தத்திசை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) இந்தப் பிரபஞ்சம் பலவாகிய பொருள்களும், உயிர்களு, ஆற்றல்களும் கொண்டு விளங்குகின்றது. ஆற்றல் எல்லாம் பொருள்களின் வழியாய் அல்லது உயிர் உருவங்களின் மூலமாய் வெளியாகித் தோற்றுகின்றனவம். இந்த ஆற்றலைத்தான் சத்தி அல்லது சக்தி என்கின்றோம். எந்தச் சக்தியும் தனித்து, தன்னிச்சையாய் விளங்காது. சத்தியின் தோற்றத்திற்கு அடிநிலைப் பொருள், வடிவம் , இடம் தேவைப் படுகின்றனவாம். இவ் அடிநிலைதானே “ சத்து” என்னும் இயற்கையுண்மை இறைபரம் பொருளாக இருக்கின்றதாகும். இந்தச் சத்தாகிய இறைநிலை நின்றே அவ் இறைவனின் அருட்பெருஞ்சக்தி வெளியாகி, உலகுயிர்ப் பொருட்கள் யாவுமாய்த் திகழ்கின்றனவாம்.
எங்கும் நிறைந்த சத்துப் பொருளினின்று காரியப்பட்டுள்ள இவ் அகண்ட பிரபஞ்சத்து தனித்தனி ஒவ்வொரு உயிர் வடிவினிலும், பொருள் வடிவிலும், பலப்பலவாகிய ஆற்றலை, சக்தியைக் காண்கின்றோம். இந்தத் தோற்ற வடிவங்கள் சக்திக்கு விளங்கிட மாக இருத்தல் கண்கூடு, இச்சக்திகள் விளங்கும் இடத்தைத்தான் சத்தர்கள் என்று கொள்ளப்படும். பொருள் வடிவம், உயிர் உருவம், தெய்வ கற்பனா தோற்றம், தத்துவரூபங்கள், அனுபவ நிலையங்கள் யாவுமே சக்திகளுக்கு இடமாகி விளங்கலின் இவற்றையெல்லாம் கூட சத்தர்கள் என்றே கூறுவர். சத்தியை ஆற்றலாகக் கொள்ளும் போது, சித் விளக்கமற்ற, அஃறிணைக் காரியப்பாடாகக் கொள்ளப்படும், ஆனால் அதே சக்தி அருள் ஞான சித் விளக்கமுடைய மனிதனில், தெய்வமூர்த்தி வடிவங்களில் வெளிப்படும்போது உயர்திணைப் பெண்பால் காரியப்பாடாகவே கொள்ளப்படும் . சன்மார்க்கியின் அனுபவத்தில், எங்கும், யாவும் இறைஜோதி வடிவமாக விளங்கலின் யாவையும் சத்தர்களென்றே அறியலாகும்.
அருட்பெருஞ்ஜோதியில், அருள் சக்தியாக இருக்கின்றது. பெருஞ்ஜோதியே சத்தராகவுள்ளது. ஜோதியில் தோற்றியுள்ள உலகப் பொருட்கள் எல்லாம் சத்தர்களாக், இந்தச் சத்தர்களாம் பொருள்களுக்கு எல்லாம், உள்ளும், புறமும் நிரம்பியுள்ளது இறைவன் அருளேயாகும். இப்படி அகம் புறம் எங்கும் எக்காலும் இடையறாது இருந்து கொண்டுள்ள திருவருட் சக்தியே, உயிர் பொருள் வடிவங்களை எல்லாம் ஐந்தொழிற்செயலால், விளங்கச்செய்து கொண்டிருக்கின்றதாம்.
ஒரு சிற்றணுவை எடுத்துக் கொள்ளுவோம். இவ் வணுவைச் சூழ உள்ளும் புறமும் அருட்பெருஞ்ஜோதி இருந்து கொண்டு, அகத்திலே அருட்பெருஞ் சக்தி அனுபவப்படப் புறத்தேயுள்ள ஜோதியைப் பூத வடிவங்களாயும், பின்னர் உயிரின வடிவங்களாயும் முடிவில் மனித வடிவாகி, இதில் பக்குவ மனத்தில் கண் அருள் ஞான உணர்வாகித் தழைத்துல்லது சூழ் ஒளியே ஆகும், புறத்தே சத்து வடிவம் தோன்றித் தோன்றி உலகிடை அனுபம் ஏற ஏற அந்த வடிவில் பக்குவம் விளைகின்றது. இப் படி ஒவ்வொரு ஆன்ம அணுவுக்கும் அகம் புறம் சூழ்ந்துள்ள அருட்பெருஞ்ஜோதியே ஆனந்தானுபவம் வருவித்தற்கு யாவையும் தழைக்கச் செய்து வந்துள்ளதாம். இந்த ஆன்ம அணுக்கள், கடவுள் வண்ணமாய் நித்தியமாய் இருத்தலின், சத்துக்களே யாவர். இவ் ஆன்மாக்களையே சத்தர்கள் என்று கொள்ளுகின்றோம் ஈண்டு, அபக்குவத்தே மறங்குலவும் அணுக்களாக இருந்த ஆன்மாக்களாகிய சத்தர்களைப் பக்குவப்படுத்தி அறங்குலவும் அணுக்களாக ஆக்கிட உள்ளும் புறமும் நின்று உதவுகின்றார் நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா…