
131. பவனத்தி னண்டப் பரப்பினெங் கெங்கும்
132. அவனுக் கவனாம் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) உண்மை கண்டு உயிரின்பமடைந்து அழியாது விளங்கும் வாழ்வு பெற ஆணை செய்யப்பட்டுள்ளவன் மனிதன். இதனால் இம்மனிதப் பிறப்பின் உயர் சிறப்பு நன்கு விளங்குவதாம். மற்ற மற்ற காரணங்களால் உண்டாகும் இம்மனிதப் பிறப்பின் சிறப்பெல்லாம் மிக அற்ப மானதாய்க் கண்டு கழிக்கப்படும். மனிதனே காண்பரிய கடவுளைக்கண்டு, அதுவேதான் என்பதை யும் உணர்ந்து, தேகபோகத்தில் பற்று கொள்ளாது, கடவுள் அனுபவத்தோடு அருள் வாழ்வு பெற வேண்டியவனாய் இருக்கின்றான்.
மனிதனுக்கு இறை இன்ப வாழ்வு ஏற்படவேண்டியது ஆண்டவரின் திருவுள்ளம். அப்படி வாழற்கான பக்குவ மனிததேகம், தத்துவ நிறைவுடன் திகழ இந்த மண்ணுலகம் பொருத்தமாய்த் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகில்தான், ஐம்பூத இயலும், உயிரின் வாழ்வுக்கான சூழ்நிலையும், அறிவு விளக்கத்திற்கான அகப்புறக் கருவிகளின் வளர்ச்சியும், அன்பு உணர்வு ஏற்பட்டு தயவுச்செயல் புரிந்து இறை தயவால், நிறை நிலை பெறக்கூடியதாயும், இருக்கின்றதாம். பிற இடங்களில்., பிற சூழ்நிலைகளில் மனிதனுக்கு நிறை இன்ப வாழ்வு ஏற்படாது. கடவுளே உண்மை மனிதயான், ஆன்ம சிற்றணுவில் அணுத்துவமாய் இருந்துகொண்டு அகண்டவெளி நிறைவான பெருவடிவாய், மாமகத்தாய்த் திகழ்கின்றார். இந்த மனிதனின் இறை இயல் உண்மை, ஆன்ம அணுவில் அருவாகியும், புறத்தே ஜோதிநிறை உருவாகியும் இருந்து, இந்த ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடை விளங்கும் உயிர் உணர்விலே அருள்மய அருவுருவாய்த் தோற்றி அனுபவப்படுவதாம். இந்நிலையில் அந்த அருட்பெருஞ்ஜோதி இறைவனே இந்த உயிர் அனுபவங்கொண்ட மனிதாய் விளங்குதல் உண்மையாம். இவ்வுயிர் வாழ்வுக்கென்றே உயிர் வளி ( பிராணவாயு பக்குவமாய்ச் சூழ்ந்திலங்கும் இந்நிலவுலகம் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த அண்டப் பரப்பின் எங்கெங்கும் இவ்வுயிர்க் காற்றாகிய பவனம் நிரப்பப்பெற்றுள்ளதாம். இவ்வளவு பொருத்தமான இந்த உலகில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இம்மனிதனில்தான், அருட்பெருஞ்ஜோதி இறை அக அனுபவத்தில் வெளிப்பட்டு , தான் என்றும், அவன் என்றும் பிரிவாற்ற ஒன்றாய்த் திகழ்கின்றதாம்.
நம் நிலவுலகமே இறையனுபவங்கொண்டு அழியாது அருளின்பங்கொண்டு வாழற்குரியதாய் இருக்கின்றது. இம் மாதிரியான நித்தியானந்த நிறைவுக்கு இவ்வுலகம் அல்லாது சந்திர மண்டலமோ, பிற கோள் மண்டலங்களோ அமைக்கப்படவில்லை என்று அறிந்து கொள்ளலாம். அந்தந்த அண்ட கோளங்களைச் சூழப்பவனத்தின் மண்டலம் உயிர் வாழ்வுக்கு உகந்ததாய் இல்லை என்றும், அதனால் அவ்வண்டங்களின் பரப்பின் மனிதனுக்கு, உயிர்யல் வாழ்வு ஏற்றதாய், இல்லை என்றும் தெளிவாம். இன்றையை விஞ்ஞான அறிவியலார் வான் வெளியில், உடல் பொருள் ஆவியைப் பணயமாக வைத்து ஆய்வு நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஜீவ தயவோடு கூடிய சுத்த சத்விசாரம் செய்து, அருட்பெருஞ்ஜோதியைக் கண்டுகொண்டால், அறிவறியா உண்மை எல்லாம் நன்கு கண்டு தெளியவும், உலகில் பொதுநலப் பெருவாழ்வைத் தழைக்கக்ச் செய்யவும் கூடும்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்
vallalarspace.com/vumt
Write a comment