Vallalar Universal Mission Trust   ramnad......
63. இறவா வரம் அளித்தது


125. என்னையும் பணிகொண்டிறவா வரமளித்

126. தன்னையிலுவந்த அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) நல்ல ஒரு தாய் தான் பெற்ற சேய் இடத்து அன்பு கொண்டிருப்பது இயற்கை. அந்த அன்பினால் , தான் கரு உயிர்க்கு முன் பட்ட துன்பமெல்லாம் சிறிது நேரத்தில் மறந்து, இன்பம் அடைகின்றாள். அம் மகவினிடத்தில் காணும் புறப்பொலிவும் தோற்றமும், செயலும் கண்டு கண்டு களிக்கின்றாள் அந்தத் தாய். பின்னர் தன் புதல்வன் பெரியவனாகிப் பலராலும் புகழப்பட்டு விளங்கும்போது, பெருமகிழ்வடைகின்றவள் அவ் அன்னையே ஆவாள். இதுவெல்லாம் உலகில் யாவரும் அறிந்ததே. இதுபோல் கடவுள் தானே யாவர்க்கும் அருள் அன்னையாகக் கொள்ளப்படலின் அவரது அன்பும் இன்பமும் எவ்வளவு மேலானாதாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கின்றனவெ உளப்பண்பாடெய்திய மக்கள். அன்னை அன்பினும் கோடி கோடிப்பங்கு அதிகமானது கடவுள் அன்பு. ஆதலின், அதன் விளைவாம் இன்பம் மிகமிகப் பெரியதாம், மதித்தற்கரியதாம்.

உண்மையில் கடவுள் நித்தியானந்த நிறைபரம்பொருளாய் உள்ளவர் என்பது மெய்ஞ்ஞானியர் அனுபவம். அப்படியுள்ள ஆனந்த பூரணர், இந்த மக்கள் மூலம் மேலான இன்பத்தை அடையக்கூடும் எனக்கருதுவது கற்பனையே, ஆனால் அவர் தானே ஓர் அன்னையில் தன் இயல்பான ஏகதேச விளக்கத்தை வெளிப்படுத்தி, அன்பும் இன்பமும் கொள்ளச் செய்கின்றார். ஆகையால், அவ் அன்னையின் இன்பமும் அக மிருக்கும் ஆண்டவர் இன்பமாக இருந்து மறைவதாம். அக இறை இன்பமோ,புறநிலை கடந்து அருள்மயமாகி நின்று அனுபவிக்க இருக்கின்றதாம். தன்பெருமை தானறியா அன்னை என விளங்கிய கடவுள், அவ் அன்னையில் உவந்தவராய் இருக்கின்றார். புறத்தில் காரியப்பட்ட அன்னை அன்பும் இன்பமும் காலத்தே மறைந்து போம். ஆனால் அவளில் நித்தியமாய் இருந்த இருக்கும் ஆண்டவரின் அன்பும் இன்பமும் என்றும் அழிவதில்லை.

இப்பொழுது நமது அகம் வளர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தாமே நமக்கு அம்மையாய் அப்பனாய்க் கூடி இந்த நம் அக வடிவத்தைக் கண்டுகொள்ளவும் , செய்துவிட்டிருக்கின்றார். தயாவொழுக்கத்தோடு கூடிய சத் விசாரத்தாலே அருட்பெருஞ்ஜோதி கடவுளைக் கண்டு கலந்து நிற்கின்றோம். இதுவே, ஆண்டவர் நம்மை ஆட்கொண்டிருக்கும் இயல்பாகும். நாமென்றும் அவரென்றும் பிரித்தறிதற்கில்லா ஒரு வடிவாம் அருள் ஒளி உருவாய் உண்ணின்று ஒளிர்கின்றோம். இந்த அத்துவிதமான தம்நிலை இயற்கையான ஒன்றே இதற்கு இறப்புமில்லை பிறப்புமில்லை, ஆனால் இந்த இறைஇயல் அனுபவம் கெடாது நிலைத்து விளங்க வேண்டின், இப்பொழுதுள்ள பிறப்புருவம் அழியாது இருக்க வேண்டும். அவ் அழியாமை பெறவே அந்த அகநிலை நின்று தயவுடன் அனக வாழ்வு மேற்கொள்ளவேண்டும். இதற்கே நம்மை ஆட்கொண்ட ஆண்டவர், அனக அருட்பணிக்கே பணிக்கின்றார். இப்பணியே நமக்கு அழியா வரம் ஆகிவிடுகின்றதாம். இதனையே நம் வள்ளல் என்னையும் பணிகொண்டிறவா வரமளித்தன்னையில் உவந்த அருட்பெருஞ்ஜோதி’ என்றுள்ளார்.

இயற்கை இன்ப நிறைவாகிய ஆண்டவர் தமதுஅந்த இன்பத்தை , நிறை மனிதனில் தான் அனுபவத்தில் கொண்டிலங்கச் செய்து அவனாய் விளங்குகின்றார். இந்ஹ்ட நிறை மனிதனே அருட்பெருஞ்ஜோதியாய் அழியாவரம் பெற்று வாழ்வது உண்மையாகும். இதுகாறும் அந்த அருட்பெருஞ்ஜோதி, நம் உடன் ஒன்றியிருந்து வந்தது உண்மைதான் எனினும், இப்பொழுது நமக்கு அழியா வாழ்வு ஏற்பட்டு விளங்கும் காரணத்தால்தான், அந்த அருட்பெருஞ்ஜோதி இறைக்கு நிறை இன்ப வாழ்வு வெளிப்பட்டதாக அறிகின்றோம். தன்னை இறவாநிலையில் வாழவைத்துள்ள அருட்பெருஞ்ஜோதியே, ஒரு ஒப்பற்ற அருள் அன்னை போல் நிறை இன்பில் நிலவுகின்றதாய் உணர்த்துகின்றார் நமது அடிகளார்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt