
123. உளவினில் அறிந்தால் ஒழியமற் றளக்கின்
124. அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) அருட்பெருஞ்ஜோதியை எவ்வகையிலும் அளந்து கூறிவிடமுடியாது. உலகிலுள்ள எப்பொருளைப் பற்றியும் அதனதன் இயல்புக்கொத்த எதோ ஓர் அளவையால் அளந்தும், கருதியும் கூறிவிடக்கூடும்.உலகிலுள்ள பொருளேயல்லாது, வான்வெளியில் பிரகாசித்துக்கொண்டுள்ள பெருஞ்ஜோதியான ( ஆனால், மிகச் சிறியனவாய்த் தோற்றுகின்ற) ன்விண்மீன்களையும்கூட அளந்துவிட முடிகின்றதாம். மற்றும் உள்ள பலவாகிய பொருள்களை வேறு வேறான, எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல், முதலிய அளவைகளாலும், ஒலி, ஒளி, சுவை, ஊறு, மணம் முதலிய புலனுணர் அளவைகளாலும், அன்றியும், அனுமானம் , ஆப்தம் ஐதிகம், பிரத்தியட்சம் முதலிய அளவைகளாலும் அளப்பரியதுநம் அருட்பெருஞ்ஜோதி.
மேலும், அளப்பது என்பது பொதுவாக ஒன்றன் தோற்றத்தை, வரலாற்றை, இயல்பை விளக்கிக் கூறுவது என்றும் கொள்ளப்படும் , வருணனை விளக்கமும் அளப்பேயாம், இவற்றிற்கெல்லாம் உட்படாதது நம் அருட்பெருஞ்ஜோதி, ஒன்றைப் பர்றி உண்மை விளக்க ஞானமே அதன் அளவு என்னலாம், அருட்பெருஞ்ஜோதியின் உண்மை விளக்கத்தை எப்படி அறிந்து
கொள்ளுவது? அதனை அளவால் அளக்க முடியாததால், அதன் அருளால்தான் அளக்கவேண்டியிருக்கின்றதாம். அதனையே ஈண்டு உளவால் அறிதல் என்று கூறப்பட்டுள்ளது. உளவு என்றால் என்ன? உண்மைத் தன்மையே உளவு என்பதற்கும் பொருளாம் உடனிருந்து உணர்தல், பிற காணாவண்ணம் ஒன்றிருந்து அறிதல் உளவாக வழங்கப்படுகின்றது. நம் அருட்பெரும்பதியை உளவினால் அறிவது என்பது, அவரது அருள் அல்லது தயவினால் உள்ளொன்றியிருந்து உணர உணரத்தான் அக்கடவுளை அனுபவத்தில் அறிந்து அடையப் பெறுவதாயுள்ளதாம்.
அருட்பெருஞ்ஜோதிக்கடவுள் எல்லோருக்கும் உரிய ஒன்றான பரம்பொருளாய் இருக்கின்றார். அவரை அடைவதற்கான வழி துறையேயான அருளன்றி வேறு இல்லையாம். அருளைக்கொண்டே அருட்பெருஞ்ஜோதியை அடையவேண்டியிருக்கின்றது. அந்த அருளே நல் ஒரு ஒற்றாக, உளவாகக் கிடைக்கப்பெற்றுள்ளேயாம். மற்றபடி உலகறிந்து நெறி முறைகள் எல்லாம், கடவுள் உண்மையைக் கண்டடைய உதவாத அளவைகளாக இருக்கின்றனவாம். உலகில் இதுகாறும் எத்தனை பெரியோர்கள், தத்தம் அருமறை யாகமங்களாலும், யோக ஞான சாத்திரங்களாலும் சக்தி சித்தி அனுபவங்களாலும் கடவுளர் உண்மையைக் காணமுயன்று , அவர்களின் அளவைகளும் அனுபவங்களும் குறைவுடையனவாய்ப் பயன்படாதனவாய் உணர்ந்து உணர்ந்து, அவைகளும் அவர்களும் தேய்ந்து மறைந்து போனதே கண்கூடு, ஆகவே அவ்வளவைகளாற் காண்பதை விட்டு, நிறையருள் என்னும் உளவினாற் காண முற்படவேண்டியது நம் கடமையாகும். இதுதான் இன்று இந்த அருட்பெருஞ்ஜோதி அகவல் மூலமாகக் கிடைக்கப்பெற்றுள்ள அனுபவசாத்திய சுத்த சன்மார்க்க முறையாகும். உலகெலாம் ஏற்றுப் பயன்பெறுவதாக.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்.
Write a comment