
121. பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
122. அதுவெனிற் றோன்றா அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) கடவுள் உண்மையைக் காட்டிக் கொடுக்க முடியாது. அது பருப்பொருளாய் இருந்தால்மட்டும் கண்ணாலே கண்டுகொள்ளச்செய்தல் கூடும். கண்ணால் காணக்கூடாததாய், மனக்கண்ணாலும் உணரக்கூடாததாய், அதீதத்தில் விளங்கும் கடவுள் உண்மை அருட்பெருஞ்ஜோதியா யிருக்கின்றது. அப்படியுள்ள கடவுளைச் சாதாரண அறிவுடைய மனிதன், தன் உணர்வால் காணவிழைந்து முயல்கின்றபோது காட்சியாவதெல்லாம் என்ன? அந்தக் கடவுட்காட்சி ஒருவனுடைய மனோபக்குவ கற்பனா இயல்புக்குத் தகவே, தேவ, மனித , தோற்ற, ஆற்றல்மயமாய் வெளிப்பட்டு மறைந்து போகின்றதாம். அப்படிக் காணும் காட்சிதான் உண்மைக் கட்வுட் காட்சியோ? இல்லாஇ கருதுவார் கருதும் வண்ணமெல்லாம் ஆகியும், அல்லவாயும், மாற்ற தோற்ற மறைவற்ற சுத்த பரிபூரணக் கடவுட்காட்சியைக் காணவல்லவன் எவன்?
எந்த மனிதன் நிறை அருள் ஞானத்தால் , தேக இந்திரிய கரண நிலைக்கு அப்பால் சென்று, ஒன்றான அருட்பெருஞ்ஜோதியை யுணர்ந்து, அதுவே தானாய் இருக்கின்றதன்றி, அதைக் தவிர அதற்கு அயலாய்த் தான் என்பதோ, பிற என்பதோ ஏதும் இல்லை என உணர்ந்துநின்று விளங்குகின்றவனே கடவுட்காட்சி அனுபவத்தில் திகழ்கின்றான் என்று அறியலாகும். இதனால், கடவுள் என்றும், தான் என்றும், உள்ளது ஒன்றே என்பது உண்மையாம். இவ்விறையருள் உணர்வுநிலையைப் “ பொது உணர்வு “ என்று புகல்கின்றார். இந்நிலையே ஆண்டவர் விளங்குகின்ற பொதுவாம் ஆலயம்.
மேற்படி அருள் ஞான உணர்வாம் பொதுவிடத்தே வெளிப்பட்டு, விளங்குவதல்லால் பிறயாண்டும், நாமாய், அத்துவிதமாய் விளங்கும் இறையுண்மை அறிய முடியாது. “ சத்திய ஞானப்பொதுவில் துவமார் துரியம் சொரூபமதாமே “ என்பது திருமந்திரச் சான்று. அருள் மெய்யறிவுதான் சத்திய ஞானம் என்பது. அது சாக்கிரம், சொப்பனம் , சுழுத்தி நிலைக்கு அப்பால் சென்ற சுத்த மன அருள் உணர்வாம் துரிய நிலை என்பர். அங்குதான் இறையும் தானும் இரண்டற உள்ள பொதுநிலை அனுபவம் ஏற்படுவதாம் . இப்படியிருக்கும் கடவுளைத் தனித்து எடுத்துக்கூற எப்படி முடியும்? முடியாது. பிரிவற்றிலிங்கும் ஒன்றை, பிரிவுற்றிலங்கும் ஒன்றாகப் பாவிப்பதும், கற்பனை செய்து கூற முயல்வதும் பொருந்தாது.
அருட்பெருஞ்ஜோதிப் பொதுவே ஆண்டவர் உண்மையும் நமது உண்மையுமாக இருக்கின்றது. இவ்வியற்கை யுண்மை இறைநிலை ஒன்றே பொதுவில் இருந்துகொண்டிருக்க, இதனைச் சூழ அவ்வுண்மையை விளக்கம் செய்ய வந்த, புறநிலைத் தோற்றங்கள் பலப் பலவாய்த் திகழ்கின்றனவாம். இப் புறத்தோற்றக் காட்சியால்தான் உண்மைக்காட்சி மறைபட்டுக் கிடக்க, இதுவென்றும் அதுவென்றும் கண்டு கொண்டுள்ளோம். இத்தோற்றங்கள் நிலையாது ஒழிந்துபோகின்றனவாம். இந்த இடத்தில்
“ இதுவென்ற தெல்லாம் பொய் என்றான் எனக்கே
பொதுவன்றித் தங்குமிடம் போச்சு – அதுநான் காண்
என்றான் அதன்பேர் இரவைப் பகலாக்கும்
ஒன்றோ பரமசுக மோ”
ஒழிவிலொடுக்கம்……..
இதனால் பொதுநிலை ஒன்றே மெய்யாக இருக்கின்றது. அது, இது , எனச் சுட்டிக்காட்டக் கூடாததாயிருக்கின்றது. அது பொதுவில் விளங்கும் ஒன்றாய். இரவைப் பகலாக்கும் ( அருட்பெருஞ்) ஜோதியாய், பரம சுகமென்னும் பேரின்ப இயல்பினதாய் உள்ளதாம். ஆகவேதான், அருட்பெருஞ்ஜோதியைப் பற்றி அப்படி இப்படி என்று விளக்கிக் கூறிவிட்டதால் மட்டும் மெய்யாக உணர்ந்து கொள்ளக் கூடுகின்றதில்லை. அந்ஹ்ட அருள் அனுபவ நிலையமாகிய பொதுவிலிருந்து காணும் சமயம், அருட்பெருஞ்ஜோதியும், நாமுமாயப் பிரிவற இருக்கும் ஒன்றே, எங்குமுள்ள எவருமாய், எப்பொருளுமாய் இருக்கும் உண்மை அறியப்படும். அப்படி ஒன்றான தாமே யாவுமாய் இருப்பதால் பிரித்தறிய அயற்காட்சி ஏதுமில்லாது போகின்றதாம். இந்தப் பொது உணர்வு வந்தால்தான் இறையருட் பேரின்ப வாழ்வு பெற முடியும்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்.,
vallalarspace.com/vumt
Write a comment