Vallalar Universal Mission Trust   ramnad......
60. உன்னும் உணர்வு கடந்தது


119. உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த

120. அனுபவா தீத அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) ஜீவர்களுக்குப் பொதுவாக விளங்குகின்ற உணர்வு, உயிர் என அறிகின்றோம். இந்த உயிர் உணர்வு, அக உயிர் நிலையையும், புறத்தேகத்தையும் பொருத்தி நின்று விழிப்பில் புலன் உணர்வுக்குக் காரணமாயும், உறக்கத்தில் அல்லது மயக்கத்தில் ஒடுங்கியும் கிடக்கின்றதாம், பொறி புலன் வளர்ச்சியுறாத தாவரங்களில் உயிர்ச்சக்தி இருந்தும், பிற ஜீவர்களிடத்தில் போன்று உணர்ச்சி வெளிப்பட விளங்குகின்றதில்லையாம். இதனால் தாவரஜீவர்கள் ஜீவஹிம்சையால்துன்பத்தை அடையா. மற்ற உயிர்கள் உயிர்வதையால் உபாதை அடைகின்றனவாம். இதனால் உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் கூடாது என்பது சன்மார்க்கக் கொள்கையாம். பிற எல்லா உயிர்களையும் விட மக்களினத்தில் , ஐம்புலன் அறிவுக்கு மேற்பட்ட ஆறாவதாகிய மனோ உணர்வு விளங்குகின்றதால், இன்பதுன்பானுபவம் அதிகம் உறுத்துகின்றதாம். மனிதனே துன்பத்தால் பலகாலம் நினைந்து நினைந்து வருந்தி புலம்பிக்கொண்டிருப்பதும், இன்பத்தால் மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருப்பதும் காண்கின்றோம்.

மனிதன் மன உணர்வுக்கு விஷயங்களைப் பகுத்தறியவும், நினைவில் தொகுத்தறியவும், யூகித்தறியவும், ஓர்மை யினால் ஆய்ந்து உண்மைகளைக் கண்டு அறியவும் முடிகின்றதாம். இவ்வறிவாற்றலைத் தான் சிந்தனையாக மொழிவர். இச் சிந்தனையே இங்கு ( ன் ) னும் உணர்வாகக் குறிக்கப்பட்டுள்ளதாம். சிந்திக்கின்ற மன உணர்வே உன்னும் அல்லது நினைக்கும் எண்ணமாக உரைக்கப்படுவது. இம்மனம் ஒன்ற்றை மேலெழுந்த வாரியாகக் கண்டு உணர்தல் புத்தியாம், அந்த ஒன்றைக் கூர்ந்து நோக்கி, அது இதுதான் வேறு அல்ல என்று தெளிவுறும் உணர்வுதான் சித்தமாகும். அப்படித் தெளிவுறத் தெரிந்துகொண்ட ஒன்றை உண்மையானது என உளத்தில் பதித்துக்கொண்ட ஒன்றை உண்மையானது என உளத்தில் பதித்துக்கொண்டு ( அதற்கு உள்ளீடான இறை இயலை அறிந்துகொள்ளாதிருத்தல்) நிச்சயிருப்பது அகங்காரபோதம் என்னும் உணர்வாம். இப்படி உன்னுகின்ற உணர்வுக்கு எல்லாம் முதலாய் இருப்பது மனமே. இந்த மனத்தில் அகங்காரபோதம் இருக்கும்வரை கடவுள் உண்மை வெளியாகாது. இவ்வுணர்வு நிலையும் கடந்து மேல் சென்றால்தான் இறையனுபவம் விளங்கும்.

ஒருவன, தானும் தன் நினைவும் கடவுளின் அருள்வண்ணமாக இருப்பதைத் தேக கரண உணர்வுக்கு அப்பால் நின்று அறியும் உணர்வே அருள் உணர்வாகும். இவ் வருள் உணர்வு இப்படிப்பட்டது என எடுத்துக்கூறக் கூடாததாய் இருப்பதால், அனுபவாதீதம் என்பர். இதனை அந்த அதீதநிலை நின்று ஒருவன் தானே அனுபவிக்கும்போது, அதுவே அதீதமான இறையனுபவமாக விளங்குகின்றதாம். அப்படி அனுபவத்தில் பெற்ற இறையுண்மையே இங்கு அருட்பெருஞ்ஜோதியாக உரைத்துள்ளார் தம் பெருமானார். உன்னும் உணர்வு அருளில் கரைந்துபோகும் போது, தான் என்பதும் பிற என்பதும் மறைந்து, அந்த அருள் ஒளிஒன்றே யாவுமாய் விளங்குகின்றதென்றே அறியப்படும். இதுவே அந்த இறையனுபவநிலையாம். இவ்விறை இயல் விளங்காதவரை, அகங்கார போத உணர்வும், ஒன்றன் புற வண்ண எண்ணமும் மறைவதே இல்லையாம். உண்மையாக யாவையும் அருட்பெருஞ்ஜோதியாய்க் காண்பதுதான் அந்த அதீத அனுபவநிலை எனப்படுகின்றதாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.

vallalarspace.com/vumt