
111. எம்மையும் எனைவிட் டிறையும் பிரியா
112. தம்மையப் பனுமாம் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மையில் ஒருவரேயாவார். அகத்தில் ஒன்றான அருட்பெருஞ்ஜோதியாக இருக்கின்றவர், புறத்தே எவ்வுயிரும், எப்பொருளும் ஆகி எவ்விடத்தும் எக்காலத்தும் விளங்கி மறைந்து கொண்டேயும் உள்ளார். இப்படிக் கடவுள் விளங்கும் பலவாகிய தோற்றங்களில் மிகச் சிறந்து திகழ்கின்றது இந்த மனிதப் பிறப்பு வாழ்வு நிலையாம். இந்தப் பிறவியில்தான் இக்கடவுள் தோற்ற உண்மையே அறிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது.
முதலில், மனிதன் தன்னை உடல் வடிவினனாகக் கொண்டு மனோ பகுத்தறிவால் உள்ளுயிர் நிலையை நித்திய ஆன்ம சொரூபமாக யூகிந்த்து நின்று, உண்மையைப் பலவாகக் கற்பனைசெய்து வெளியிட்டான். அந்த ஆன்மவடிவம், ஆணியல் அறிவுமய மானதாகவும், அதனைச் சூழ்ந்து வளர்ந்துள்ளது பெண்ணியல் அநித்திய உடம்பாகவும் உணர்ந்திருந்தான். இதில் இச் சூழுரு மாயை எனவும், இது அகத்திலங்கும் நித்தியக் கடவுளான்ம சொரூபத்திற்கு மாறுபட்டதெனவும் கொண்டான். உள்ளொளிர் கடவுள் வடிவம் ஆணியல் கொண்ட காரணத்தால், அக் கடவுளை ஆண்பாற்பொருளில் குறிக்கும் மரபு உண்டாகிற்றாம். கடவுள் உண்மையை அகமும் புறமும் கொண்டுள்ள மனிதன் , தன் அகத்தில் மட்டும் அல்லாது, எங்ஙணும் அக் கடவுள் அப்படியே இருக்கக்கண்டு போற்றுகின்றான். திருவருளால் இந்தக் கடவுளரின் இருநிலைத் தோற்றம் அனாதியாகவே இருந்துவருவதாக அறிந்து கொண்டுள்ளான் மனிதன்.
இன்று நிறையருளால் இறைநிலை நின்று நோக்கும் மனிதன் அந்த ஒன்றான இறையே தானாகித் தனது அகப்புற வண்ணமாகி விளங்குவதையும் காண்கின்றான். இதனால் தான் அந்த நித்திய பரம்பொருளைத் தவிர அதற்கு வேறாக ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து நிற்கின்றான். இக்குறிப்பு, “ எம்மையும் எனைவிட்டு இறையும் பிரியா” என்ற அடியால் விளக்கப்பர்றுள்ளதாம். எம்மையும் என்றால் எக்காலத்தும் , எவ்விடத்தும், எழுமையும் என்றாம். இம்மை, மறுமை , இகம், பரம், இவ்வுலக வாழ்வு மறு வுலக வாழ்வு இவற்றிற்கு முன் சென்ற அம்மை அகநிலை வாழ்வுகளில் எல்லாம் கூட நாம் அவ்விறையின் இருநிலை கொண்டே இருந்து வருகின்றோம் என்பதும், நம்மை அது இறைமையும் , சிறிதும், கொஞ்சமும் பிரிகின்றதே யில்லை என்பதும் தெளிவாம். அப்படி என்றும் இறையோடிருந்தும் கூட இந்நாள்வரை நமது இந்த உண்மையைத் தெரிந்துகொள்ளாதவர்களாய் அப்படித் தெரிந்து கொள்ளத்தக்க ஒரு சூழ்நிலை வாழ்வு பெறாதவர்களாய் இருந்துள்ளோம் என்பது உண்மையாம். இன்றே இவ்வுண்மையை அறிந்து தெளிந்து, இறை இன்பானுபவம் பெற சுத்த சன்மார்க்க நெறி நின்று போற்றுகின்றோம்.
சத்தியஞான அம்பலத்திலே அருட்பெருஞ்ஜோதிச் சுடராய்த் திகழ்ந்துதான் வருகின்றோம். எனினும், நிறை அருள் அனுபவத்தாலே உள்ளொளியின் அனக நிறைவு உண்டாகிச் சூழுருவமும் சுத்த சுகானந்த வடிவமாகி விளங்க வேண்டியிருக்கின்றதாம். இதற்காகவே துவிதமாய் நின்று துதித்துக் கொண்டும், அத்துவிதமாய் இருந்து அக அனுபவத்தைப் பெருக்கிக்கொண்டும், இருக்கின்றோம். இங்கு அம்மையும் அப்பனும் ஆம் அருட்பெருஞ்ஜோதி என்று துதிக்கின்றோம். . அப்படி அம்மையும் அப்பனுமான உண்மை எவ்வாறெனில் , நாம் நித்திய ஆன்ம அருட்ஜோதி அணுவடிவாய் என்றும் இருந்தும், இவ்வுண்மை அறிவனுபவத்திற்கு வெளியாக வேண்டிய இம் மனித தேகம் பெற வேண்டியிருந்தது. இத்தேகமோ ஒரு தாயின் கருவில் தோன்ற, ஒரு தந்தையின் கூட்டுறவு தேவைப்பட்டது. இக் காரணங்களால் நம் இறைவரே தம் ஆணையால், இந்தச் சூழூரு உண்டாக அந்த அன்னையாய்ப் பிதாவாய்த் தோற்றிக் கூடி நம்மைத் தோற்றுவித்துள்ளதாம்.
ஒன்றாய் உள்ள அருட்பெருஞ்ஜோதியே அனுபவ வெளியீட்டின் பொருட்டு இப்படித் தாயாய், தந்தையாய், அவர்களின் வழித்தோன்றலான தனயனாய் வந்து தன்னை இறைவனாக அறிந்துகொள்ளச் செய்துள்ளதாம். ஆகையால் இவன் தனது பிரிவிலா அவ் இறை உண்மையுணர்ந்து “ எம்மையும் பிரியா அம்மை அப்பன்” என்று போற்றி வாழ்வு பெறுகின்றான்.
தயாநிதி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.
vallalarspace.com/vumt
Write a comment