
அகண்ட வெளிநிறை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கும் பூரணமாயுள்ளார். ஒவ்வொரு அணுவிலிருந்தும் பரிபூரண அனுபவம் வெளிப்படத் திகழ்கின்றவராவர். அந்த அருட்பெருஞோதியையே நம் சிற்றம்பலத்தே இன்று கண்டு கொள்ளுகின்றோம். இப்போது அவ்வாண்டவர் அனுபம் தயவாக விளங்குவதை இங்கு காணலாகின்றது. நமது ஆன்ம சிற்சபையே யகர வண்ணமானதாம். இந்த யகரான்மாவின் அகத்தும் புறத்தும் தகராகாசக்கடவுள் விளக்கமும் , வுகரத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ள உயிர் உடல் வண்ணமுமாக உள்ளதால் தயவு என்பதுதான் நமக்குக் கடவுள். இதுவே கடவுள் அனுபவத்தை உணர்த்தவந்ததாய்ச் சிற்சபையிலிருந்து தெளிவு பெறலாகின்றதாம்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மை, சுத்த சன்மார்க்கியின் அனுபவத்தில் உள்ளும் புறமும் நிரம்பிய சுத்த தயவுமயமாகவே திகிழ்கின்றதை இன்று காண்கிறோம். கடவுள் தயவின் பெருமை என்னே! இவ்விறை தயவு உண்மையை அறிந்து கொள்ளும்போது இறைபரம்பொருளே இச் சொல்லுக்குரிய அனுபவப் பொருளாகக் தெளியலாகின்றது. இத்தெளிவு பெறாத காலத்து, தயவு என்றா சொல்லுக்கு, அன்பு கருணை, இரக்கம், கிருபை என்றெல்லாம் புனைப்பொருள்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். இது முதல் நாம் நமது அருப்பெருஞ்ஜோதி சிற்சபையிலிருந்து தயவு வண்ணமாகக் கடவுளை உணர்ந்தும், போற்றியும் அடைந்தும் பேரின்பமுறுவோமாக.
தயாநிதி சரவணானந்தா