
107. ஈன்ற நற்றாயினும் இனிய பெருந்தய
108. வான்றசிற் சபையில் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) உலகில் நற்றாய் என்று பெற்ற அன்னையையும் செவிலித்தாய் என்று வளர்ப்பவளையும் குறிப்பர். இங்கு வந்துள்ள நற்றாய் பெற்றவளைச் சுட்ட வந்ததல்ல. ஏனெனில் ஈன்ற என்ற சொல்லே முன்வந்து, பெற்ற என்ற பொருளை வழங்கி நிற்கின்றதால், நற்றாய் என்பதில் நல் என்ற பகுதிக்கு நன்மை என்ற பண்பு குறிப்பதாய் இருக்கின்றது. ஈன்றவள் சிறப்புமிக்க நல்லவளாக இருக்கவேண்டுமென்பது உணர்த்தப் பெறுகின்றோம். இவ்வுலகில், ஈன்றவள் பொல்லாதவளாய் இருக்கவும் காண்கின்றோம். அது போலல்லாது நற்குணசீல மிக்க அன்னையையே குறிக்க இங்கு இந்த நற்றாய் வந்துள்ளதாம். அந்த நல்ல பெற்றவளைவிட எவ்வளவோ அதிகமான தயவு நிரம்பியவர் நம் கடவுள் என்பதைக் கூற இக்குறிப்பு முன் வழங்கப்பட்டுள்ளதாம். அன்னையிலும் தயவுடையாய் என்று ஆண்டவரைத் துதிக்கின்றவர் அடியார்கள்.
கடவுள் தயவு எல்லை கடந்தது. பெருமை மிக்கது. பேரின்பமே பயப்பது. உடலீன்ற அன்னைக்குப் பாசம் அல்லது பற்று காரணமாகத் தன் குழந்தையிடத்து அன்பு ஏற்படும். இத்தாய் அன்பு அல்லது தயவு, கடவுள் தயவுக்கு எவ்வளவோ அற்பமானது. கடவுளோ ஆன்மாவுக்குத் தேவையான உயிரையும், உடலையும் போகப்பொருள்களையும் தடையறாது உதவிப் பக்குவப்படுத்தி மெய்யின்பவாழ்வையே வழங்கி விடுகின்றார். இதனால் அந்தக் கடவுள் செயலின் ஒரு கூறே ஒருவனுக்கு உடலின் அன்னையாய்த் தோன்றி, ஏகதேச அன்பைக் காட்டி ஒருவாறு சிலகாலம் வளர்த்துச் செல்கின்றதுமாம். ஆதலின் ஈன்ற தாயின் அந்தச் சிறிதளவுதயவுகூட நம் பதியின் ஏகதேச வெளியீடே என்று அறிகின்றோம்.
ஆகவே கடவுளர் தயவு ஒன்றே நிறைவுடையது எனவும், அது இனியதும், பெரியதும் உள்ளும் புறமும் நீங்காதிருந்து வாழ்விப்பதும் என்று உணரப்படும். ஆன்ற என்பது, அகன்ற, விசாலமான எனவும், அடங்கியதெனவும் பொருளாம். அதாவது கடவுள் தயவு உண்மை, அகண்டவெளி முழுவதும் நிரம்பியுள்ளது என்பதையும், அம்முழுத் தன்மையும் ஆன்ம சிற்றணுவிடத்தே அடங்கியிருந்து, பக்குவத்தே அனுபவப்படுகின்றது என்பதியும் குறிக்கின்றதாம். நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம் சிற்சபையில் அனுபவப்பட உள்ளது உண்மையே, அவர் அச் சிற்சபையில் சுத்த தயவு வண்ணமாக வெளிப்பட்டிலங்க உள்ளதுதான் இன்று நாம் காணும் புதுமையாம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்….
vallalarspace.com/vumt
Write a comment