Vallalar Universal Mission Trust   ramnad......
53. கற்பனை கடந்த சிற்சபை


105. கற்பனை முழுவதுங் கடந்தொளி தருமோர்

106. அற்புதச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) நமது எல்லாம்வல்ல இறைபரம்பொருள் நித்தியமாய் ஒளிவிட்டு பிரகாசித்துக்கொண்டு விளங்குகின்ற இடம், நமது அற்புதச் சிற்சபையாக இருக்கின்றது. இந்த சிற்சபையின் வளரொளியைத்தான் இன்று அருட்பெருஞ்ஜோதியாகக் காண்கின்றோம். இச் சிற்சபை , புறக் கற்சபைகளை ( கற்கோயில்களைப்) போன்று காண்பது அரிதாகும். இக் கடவுட் சிற்சபை யும் நித்தியம், இந்த இறையின் பேரருட் செயலால், விளங்கும் மகாபிரபஞ்சக் காரியப்பாடும் நித்தியமே , இவை சத்தியமே. இதனால்தான் இவை அற்புதச் சிற்சபை எனப்படுகின்றது. காண்பரிய இறைஜோதி, அகண்டவெளியில் இடையறாது என்க்கும், அணு அணு தோறும் நிரம்பி இருப்பதால் , சிற்சபை என்னும் எந்த ஓர் ஆன்மசிற்றணுவும் அந்த இறையின் நிறையுண்மை கொண்டுள்ளது என்பது நிச்சயம், மேற்படி ஆன்ம சிற்றணுவே மனிதனின் தலை நடுவுள்ளொளியாய்க் கருவுருத் தொடக்கமுதல் விளங்கிக் கொண்டுள்ளதாம். இந்த இறையொளியையே மறைமுனிவர்கள் தம்தம் கற்பனைக்கு உகந்தவாறு புனைந்து புனைந்து வழங்கியுள்ளனர். புறநின்று ஆன்மக்கடவுளைப் போற்றிப் பணிந்து ஓரளவு அருள் ஆற்றலும் பெற்று, அற்புதம் பல பல இயற்றியுள்ளனர் அந்த ஆன்மஞானசித்தர்கள் இந்த இறையொளி அவர்களின் கற்பனைக்கெல்லாம் அடங்கிவிடவுமில்லை. அதன் முழு இயல்பையும் காட்டிக்கொடுத்துவிடவுமில்லை., எந்தக் கற்பனைக்கும் அடங்காததாய், மேலும் மேலும் விரிவுற்று விளங்குவதாய்த் திகழ்கின்றது அந்த அற்புதச் சிற்சபையுள் வளர் இறையொளி. அவ்வொளியையே இன்று நம் அடிகளார் அருட்பெருஞ்ஜோதி என்பதும் ஒரு கற்பனைதானே என்றால், கற்பனைதான், எனினும், இது சாதாரண மனோகற்பனை அல்ல, சமய மதக் கர்த்தர்களின் புறக் கற்பனைகள் போன்றுமல்ல . மனவாக்கு கடந்த் மேனிலையில் , தான் என்ற தற்போத ஒழிவில் அருள் வண்ணமாய் இருந்து அதுவாகி நின்று அதன் உண்மை உள்ளவாறு விளங்க, மெய்யனுபவத்திற்கு , என்றும் உடன் திகழும் இயல்பு உணர்த்தும் சொல்லாய் இருக்கின்றது இந்த அருட்பெருஞ்ஜோதி. இதனால் இக்கற்பனையின் மாண்பு மிக மிகச் சிறந்ததாகும். எந்தக் கற்பனைக்கும் அடங்காத கடவுள் உண்மை. இந்தக் கற்பனைச் சொல்லாகிய அருட்பெருஞ்ஜோதியில் எப்படி அடங்கும்? அடங்காதுதான் . ஆம் இந்தச் சொல்லில் அடங்கிவிடவில்லை. ஆனால் இச்சொல் குறித்த பொருள்விளக்க வண்ணமாக விளங்கும் இறை அனுபவிகு இந்த அருட்பெருஞ்ஜோதிமய வாழ்வு ஏற்பட்டு அக் கற்பனை கடந்த இறைமய இயல்போடு திகழ்வது உண்மையாகும்.

ஆகவே, அருட்பெருஞ்ஜோதி என்பது, கடவுளைச் சுட்டும் ஒரு கற்பனைச்சொல்லாகக் கொள்ளக் கூடாது. இது கடவுளின் இயற்கை விளக்க உண்மையையே அறிவிப்பதாய், அறிந்து அனுபவத்திற்கொண்டு வாழ்வதால் இறைமய இயற்கை இன்பநிறைவாழ்வு பெறப்படுவதாம். ஒளிதரும் என்பது ஒளிரும் என்று மட்டும் அல்லாது ஒளியைத்தருகின்ற என்ப பொருளாக்கிக் கொள்வதைவிட , அவ்வொளி என்ற சொல்லுக்குள்ள புகழ் சிறப்பு இறைவாழ்வையே வழங்குவதாய்க் கொள்ளுதலே மிகப் பொருத்தமானதாகும். இதனால் உலகவர் எல்லாம் இந்த அருட்பெருஞ்ஜோதியைப் போற்றிப் புகழ் பெறுவார்களாக.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt