Vallalar Universal Mission Trust   ramnad......
52. ஆடகப் பொது


103. நாடகத் திருச்செயல் நவிற்றிடு மொருபேர்

104. ஆடகப் பொது ஒளிர் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) ஆடகம் என்பது பொன்னில் ஒருவகையாம். ஆடகம் , கிளிச்சிறை, சாதரூபம், சாம்புநதம் என நான்கு வகைப் பொன் உள என்பர். யாவும் அக அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. இங்கு ஆடகப் பொது , ஆனந்தத்தாண்டவம் வெளிப்பட்டு விளங்கும் சுத்த ஆடரங்கு என்னும், பொற்சபையாகத் திகழ்கின்றதாம். ஆடகப் பொன்னம்பலம் நமது அகத்தே திகழ்கின்ற ஆடவல்லானின் பொன்மன்றேயாம். ஆடகம் என்பதை, அகம் ஆடல் என உள்ளிருந்து காணலாம். இவ் ஆடகப் பொதுவுக்கு, ஒரு , பேர் என்ற இரு அடை கொடுக்கப் பட்டுள்ளன. இவற்றிற்குப் பொருள், ஒப்பற்ற, பெரிய என்றுள்ளதால்,. இந்த ஆடகப் பொற் பொது தனக்கு ஒப்பில்லாத, பெருமைமிக்க சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது என்பது குறிப்பு.

மேற்படி பொன்னமபலத்திலே தான் நமது அருட்பெருஞ்ஜோதி நடனசபேசர் நடனம் ஆடுவது மட்டுமல்ல, நாடகமே ஆடுகின்றாராம். நாடகம் என்றால் தன்னியல் உண்மை மறைத்து வெளிக்காட்டாது, பலர் உள்ளத்தையுங் கவர்ந்து ஆனந்தப் பயனை அடைவிக்கின்ற ஒருவனது நடிப்புச் செயலே நாடகமென்பர், இக்கலையின் உண்மையே நம் நாடகத் தமிழாகக் கற்பிக்கப்பட்டுள்ளதாம். இங்கு நம் அருட்பெரும்பதியே தனது சச்சிதானந்த உண்மையை மறைத்துக்கொண்டு, தன்னையே கூட மறைத்துக்கொண்டு நமது உள்ளங்கவர் நாடகத்தை நம் ஆடகப் பொன்னரங்கில் நடித்துக்கொண்டுள்ளார். அவருடைய திருவுள்ளம் நமக்கு மெய்யான பேரின்ப வாழ்வை அருளுவதேயாகும். மற்றபடி உலக நடிகர்களைப்போன்ற , கீழ்தர உள்ளக் கிளர்ச்சிகளையும் புலனின்பத்தையும் தந்து தாழ்வுற்று அழியச்செய்யதன்று நமது அருள் நடிகர் உண்மையில் நித்தியானந்த அருட்பெருஞ்ஜோதியராகவுள்ளார். உலக நடிகக் கலைஞர்கள் அற்பவால் நட்சத்திரம் போன்று விரைந்து மறைந்து ஒழிகின்றனர்.

இந்த உலகமே ஒரு நாடகமேடையாகவும், இதில் வாழ் வந்துள்ள ஒவ்வொருமே ஒரு நடிக நட்சத்திரம் எனவும் கூறுவர் சிலர். இக்கூற்று புலன் அளவில் விளங்கி உண்மையற்ற வெற்று நடிப்பாக இருந்து பொய்த்துப் போகுமானால் நன்மையில்லை. அது கடவுட் சித்தமுமல்ல. ஆனால் மனிதன் இங்கு இறையுண்மை கொண்டு, அகநின்று, தன்னைக் காட்டிக்கொள்ளாது, அனகவாழ்வு நடத்துவதே மெய்யான நாடகமாகும். இவனே திருவருளால் அருட்பிரகாச நட்சத்திரமாக அழிவற்று என்றென்றும் விளங்குவான்.

பக்குவமடையாத உடற்பற்று நீங்காதவர்கள், பெத்த ஆன்மாக்கள் என்பர். இவர்கள் மறைந்த நினைவு தினத்தை தேதி அல்லது திதியாகக் கொண்டாடுகின்றர். பக்குவ முத்த ஆன்மாக்களின் மறைவுநாலை நட்சத்திரமாகக் கொண்டாடுகின்றனர். இவர்கள் நட்சத்திரப் பதவி அடைந்தவர்கள் என்பது கருத்டு, சூழவுள்ள கோள் உடம்பை கழற்றி விட்டு உள்ளொடுங்கி, அகவானில் சிலகாலம் ஆன்ம மணியென விளங்கி, சில சித்துக்கள் புரிந்து விட்டு மறைந்துவிடுகின்றனர் இந்த விதேகமுத்தி பெற்ற நட்சத்திரங்கள். ஆனால் சுத்த சன்மார்க்க அருட்பெருஞ்ஜோதி, மனிதனை அருள் ஒளி நட்சத்திரமாக ஆக்கி வாழச் செய்யவே இன்று ஒரு பேர் ஆடகப் பொதுவிலிருந்து நாடகத் திருச்செயல் புரிகின்றார் என்பது உண்மை.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.;

vallalarspace.com/vumt