
99. எச்சபை பொதுவென இயம்பின ரறிஞர்கள்
100. அச்சபை யிடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) சபை, பொது, கோயில்,மன்று, ஆலயம், அம்பலம், தளி முதலிய சொற்கள் ஒரு பொருளையே குறிக்கும். எனினும் ஒவ்வொன்றுக்கும் காரண விரிபொருள் விளக்கம் வேறு வேறாய்த் திகழும். இங்கு, சபை, பொது என்னும் இரண்டை மட்டும் விளக்கிடலாம். சபை என்றால் பலர் ஒன்றுகூடி உண்மையை வெளிப்படுத்திப் பயன்காணும் இடமாகும். நமது கடவுளான்மா இடத்து எல்லோருக்கும் பெருநன்மை ஏற்பட இருத்தலின் அக் கடவுளான்ம இடமே உண்மைச் சபையாக உள்ளதாம். இந்தச் சிற்சபையில் பெறப்படும் தத்துவ சித்திகளின் காரணமாகத்தான் இதனைப் பொற்சபை, ரஜிதசபை, தாமிர சபை, சித்திரசபை . இரத்தின சபை முதலியனவாகவும் முடிவில் சுத்தசன்மார்க்க நித்தியவாழ்வு அருளும் சத்திய ஞான சபையாகவும் உள்ளதாம். சுத்த சன்மார்க்க அருட்பிரகாசருக்குச் சிற்சபையும் பொற்சபையும் உரிமையாய் விளங்கும்
இனி, பொது என்பதன் விளக்கம் காண்போம் ,மேலே குறிக்கப்பட்ட சபையே எல்லோருக்கும் பொதுவுரிமையாகவும் பொதுவுடைமையாகவும் இருக்கின்றதால் இச்சபையையே பொதுவெனக் கொள்ளுதலும் பொருந்தும். இதுவன்றி ஒருவனுடைய அக அனுபவத்தில் கடவுளான்மா இரண்டற்ற ஒன்றேயாய் இருக்கக் காண்கின்றோம். ஆகையால், அக் கடவுளான்மாவே கடவுளுக்கும் உண்மை மனிதனுக்கும் உரிய பொதுவிடமாகக் கொள்ளப்படும். என்றாலும், மனிதன் தன்னதாகிய அந்த மேலான இறைநிலையுண்மையைச் சுத்த சன்மார்க்க முடிவில்தான் கண்டடைந்து வாழ்வு பெறுகின்றான். அவ்வுண்மை விளங்காமுன், உடற்பற்று காரணமாக அப் பொதுசபைக்குப் புறத்திலிருந்து அவத்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றான்.
மெய் அறிஞர்கள் இந்த ஆன்மாலயத்தையே அருட்பெருஞ்ஜோதி ஒளிர் பொதுவாக உரைப்பர். இது, கன்மமலமாகிய உடற்பற்று ஒன்று, மாயா மலமாகிய உயிர் உணர்வுப் பற்று ஒன்று கடந்து மேல் ஆணவமலமாகிய ஆன்மபோதநிலையில் அருள்விளக்கம் உண்டாகும்போது அனுபவப்படுவது இப் பொதுசபையுண்மை. ஆன்மாவில் கடவுள் அருள் உண்மையும், மனிதனின்” தான் ‘ என்ற தற்போத உணர்வும் செம்பாதியாக இருப்பதாய்த் தோற்றுகிறது. இந்த கன்மம், மாயை, ஆணவத்தின் ஒருபகுதி ஆகிய இரண்டரை நிலை கடந்தபோதுதான் அருளிறை அனுபவமும் வெளிப்பட்டு அப்பொதுநிலை வாழ்வு வழங்கும். அப்படி வாழ்கின்றவனுக்கு மாயா கன்ம தேகம் சிற்சபை பொற்சபையாக மாறி விளங்கும். இவ்வுண்மை.
என்சாமி எனதுதுரை என்னுயிர்நா யகமே
இன்றுவந்து நானிருக்கும் இடத்திலமர் கின்றார்
பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
பேருடம்பிற் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி யுடைப்பெரிய தவத்தாலே நான் தான்
சாற்று கின்றேன் அறிந்ததிது சத்தியஞ்சத் தியமே
மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் றனக்கே
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே”
என்பதாம் நம் கடவுளான்மப் பொதுவுண்மையையும் இரண்டரையில் மெய்விளக்கமும் புலனாகும்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்
vallalarspace.com/vumt
Write a comment