Vallalar Universal Mission Trust   ramnad......
45. கற்பாந்த அற்புதம்


89. கற்பம் பலபல கழியினு மழிவுறா

90. அற்புதந் தருஞ்சபை அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) பேருலகில் பெருஞ்செயல்கள் பல பல இயல்பாகவே நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை ஆழ்ந்து சிந்தித்துப்பார்க்கப் பார்க்க ஆண்டவரின் பேராற்றலும் பெருமையும் உணர்ந்துணர்ந்து பேராச்சரியம் அடைவோம். ஆனால், இவற்றையெல்லாம் அதிசயமாக , அற்புதமாக மக்கள் எண்ணுகின்றேதேயில்லை. இவையாவும் இயற்கை நிகழ்ச்சிகளே எனக் கருதி, வியப்படையாது இருக்கின்றனர். இவ்வியற்கை நியதித் தோற்றங்களுக்கு மாறாகச் சாதாரண மனித தரத்திற்குச் செய்ய முடியாத ஏதேனும் ஒரு செயலைப் புரிந்து விட்டால், அதனை அற்புதம் என்றும், அதிசயமென்றும், சித்துச் செயல் என்றும் வியந்து வியந்து போற்றிக்கொள்கின்றார்கள் உலகியலாம்.

மேற்படி அற்புத சித்திகள் பலப்பல கைவந்தவர்கள் அருஞ்சித்தர்களாகப் பேசப்படுகின்றனர். முன் ஞான சித்தர்கள் சித்தி வல்லபதிறம் கதைகதையாக வழங்கப்படுகின்றன. அவற்றை எல்லாம் இன்று நம்புவர் சிலர், நம்பார் பலர், இன்றைய அறிவியற் சாதனைகளால் இயற்றப்படுகின்ற விந்தைச்செயல்களை வியந்து கொள்ளுகின்றனர் பெரும்பாலோர். இந்த அற்புதங்கள் பலவற்றாலும் முடிவில் அடையப்பெறும் பெரு நலம் என்ன என்பதைச் சற்று ஊன்றி உன்னிப்பார்த்தல் வேண்டும். தடைபடாது இன்பவாழ்வில் நெடிது விளங்கிக் கொண்டிருப்பதே பெற வரும் பேரற்புதச் சித்தியாக அறியப்படும்.

மனிதன் பெற்றுள்ள உடல், புற்புதம், ( நீர்க்குமிழி) போல் விரைவில் அழிந்து போய்விடக்கூடியதாயிருக்கின்றது. இவ்வுடலை அருட்பெருஞ் சக்தியால் சுத்த சுகானந்த வடிவம் ஆக்கிக் கொண்டு, என்றென்றும் அழிவில்லாது வாழ்ந்து கொண்டிருப்பதே பெறலரும் பேரற்புதம் என இன்று திருவருளால் உணர்த்தப்படுகின்றோம். இதனையே நம் வள்ளல் இங்கு கற்பம் பலபல கழியினும் அழிவுறா அற்புதம் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி என்றுள்ளார்.

மனிதனின் உண்மையும் கடவுளின் உண்மையும் வேறல்ல ஒன்றேயாம். இது அனாதிகாலமாக இருந்து வருவதேயாம். அப்படி மனிதன் அகவடிவினனாய் என்றும் இருந்துவந்தபோதிலும்கூட, இந்தப் புறவுடலை ஏற்று, அகநிலை நின்று நிறையருளால் அனகவாழ்வு மேற்கொள்ளாதவரை, நித்தியமாய் வாழ்கின்றவன். என்று கூறமுடியாது. அருள் நிறை இன்பவாழ்வு பெறாத ஆன்மாணுக்கள் எவ்வளவோ காலமாகப் பெருஞ்ஜோதிச் சூழலைத் தத்தம் உடலாகக் கருநிலையில் வளர்க்கப்பெற்றும், அருந்தவ நிலையில் தேய்ந்து தேய்ந்து அழிக்கப்பெற்றும் வருகின்றனவாம். இவ்வான்மாவின் தவநிலைத் தோற்றமே , கற்பங்கள் பலகோடி செல்லத் தீய கனலின் நடு ஊசியின்மேற் காலையூன்றி நிற்கும் நிலையைக் குறிப்பதாகக் கொள்ளப்படும். ஆன்மாவின் மிக நுண்ணிய இயல்பைக் குறிக்கவே, ஓர் ஊசி முனையில் ஓர் ஆயிரம் ஆன்மா தங்கலாம் என்பர். இப்படிப்பட்ட ஆன்மாவில் கற்பகோடிகால தவமுயற்சிக்குப் பின் திருவருள் வெளிப்பட்டு வாழ்வளிக்கின்றதாம். இனி, இந்த வாழ்வு கற்பகோடி காலம் சென்றாலும் கழிவுறாது விளங்கவல்லதாம். இதுதான் இன்று நம் அருட்பெருஞ்ஜோதி சபை நமக்கு அளிக்கின்ற பேரற்புதமாகும்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்..

vallalarspace.com/vumt