Vallalar Universal Mission Trust   ramnad......
42. ஆதி சிற்சபை - அகவல் உரைவிளக்கம்.

83. ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்

84. ஆதி சிற் சபையில் அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) அருட்பெருஞ்ஜோதிக் கடவுளும் அவரது சிற்சபையும் அனாதி என்று முன் அடிகளில் குறிக்கப்பெற்றன. அதுவே உண்மை என்றும் கண்டோம். ஆனால் அதே சிற்சபை ஆதி என்று குறிக்கப்படுகின்றது. இங்கு, இது மாறுபாடுபோல் தோன்றலாம். உண்மையில் மாறுபாடல்ல எனப்தும், வேறுபாட்டு அனுபவத் தோற்றமே என்பதும் சுத்தசத் விசாரத்தில் கண்டு தெளியப்படுகின்றதாம். ஆகவே அந்த உண்மை விளக்கத்தை ஓர்ந்துகொள்ளுவோம்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வர். அனாதியாகவே என்றென்றும் எங்கும் நிரம்பியுள்ளவர் என்பது உண்மைதான். என்றாலும், அப்படியுள்ளது அவ்வனாதி பரம்பொருள் என்ற உண்மை விளக்கம். பக்குவ மனிதனின் பகுத்தறிவுக்கு அப்பாலான மெய்யறிவில்தான் வெளியாகி விளங்குகின்றதாம். அதாவது, அவ்வனாதி வஸ்துவின் உண்மை கொண்ட ஒரு சிற்றணுவே இம்மனிதப் பிறப்பில் ஆதி முதலிடம் பெற்றுச் சிற்றம்பலம் எனத் திகழ்கின்றதாம். இச் சிற்சபையைத் திருவருள் வலத்தால் சார்ந்து நிற்கும் மனிதனே, அருட்பெருஞ்ஜோதியைக் காண வல்லவனாகின்றான்.

சுத்த சன்மார்க்க சாதகன் சத்விசாரத்தால், தான் இப்போது ஏற்றுள்ள தேகநிலை கடந்து, உள் நின்று, ஒளிர்கடவுளான்ம அணுவடிவினனாகத் திருவருளால் உணர்த்தப்பெற்றிருக்கின்றான். இச்சிற்றணுவுருவே இம்மனிதனின் இயல் வடிவமாகப் பண்டே தொட்டு இருந்து வருவதாயும் , பல்வேறு உயிர்னவடிவச் சூழலிலும் , தன்னைத்தான் அறிந்துகொள்ளமுடியாது கிடந்து வந்து, இப்பொழுது இந்த மனித தாகச் சூழலில்தான் இச்சமயம் இத் தனது இயல் உண்மையைக் கண்டுகொண்டுள்ளான். ஆதலின்,இவனது ஆதியான முதல்வடிவம் அந்தக் கடவுள் சிற்றணுவே என்பது தெளிவு, மேலும் அக்கடவுளணுவேதான் மனித கருப்பிண்ட சிஷ்டியில் முதன் முதலில் தோற்றி ஒளிரச் சுழுருவேற்றுச் சுடர்விட்டிலங்கிக் கொண்டிருக்கின்ற சிரநடுச் சிற்றம்பலமாம். இதனால் இது ஆதி சிற்சபை எனப்படுகின்றது.

திருவருளால் தன்னை ஆதி சிற்சபையில் கண்டுகொண்ட மனிதன், அச்சிற்சபேசனை அடைந்து நித்திய வாழ்வு பெறுவதற்கு எவ்வளவு காலம் முயன்று ஓதியும், ஏகதேசம் உணர்ந்தும் பயனுறாது கிடந்துவந்தான்.. இதுவே இங்கு குறிக்கபட்ட அறிவரிய அருட்பெருஞ்ஜோதி வளர் சிற்சபையின் உண்மை யாகும். மேல் சிற்சபையுற்று நிற்கும் சன்மார்க்கி அருள் நிறை வாழ்வு பெறும்போது, தன் ஆதிநிலையைக் கடவுளரின் அனாதி நிலையாக ஆக்கப்பெற்று அழிவற்ற அருளின்ப வடிவில் திகழ்கின்றவனாகின்றான். ஆதியான ஒன்றுக்கு அந்தம் உண்டு. ஆகவே, அனாதிக்கு அந்தமுமில்லையாம். இம் முடிவற்றிலங்கும் பேரின்ப வாழ்வைக் குறிக்கோளாய் ஏற்கச்செய்வது இவ் அகவல்.

vallalarspace.com/vumt