Vallalar Universal Mission Trust   ramnad......
41. அனாதி சிற்சபை - அகவல் உரைவிளக்கம்


81. மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்

82. அனாதிசிற் சபையில் அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) அருட்பெருஞ்ஜோதி மிளிர் அற்புதச் சிற்சபை ஆனது அனாதியாகவே இருக்கின்றதாம். எப்படி எனில், நமது இறைவர் நித்தியமானவர் என்றால், தோற்றமும் மறைவும், ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பது உண்மையாம். ஆதி என்ற தொடக்க நிலை இல்லை என்றால் அந்தம் என்ற முடிவு நிலை தான் ஏது? இதனால், ஆதியே இல்லை என்பது குறித்தே அனாதி என்று மொழியப்படுகின்றது. நம்பதி அனாதியானவர் என்பதோடு அவர் நிலவுகின்ற சிற்சபையும் கூட அனாதியே என்பதும் உண்மையாம்.

மேற்படி அனாதி சிற்சபையும் அருட்பெருஞ்ஜோதியையும் உள்ளவாறு கண்டு தெரிந்துகொள்ள வேண்டி திருமுன் நின்று வேண்டுவோம். அங்ஙனம் இருந்து தெளியப்பெறும் விளக்கம் இதுதான். அளவு கடந்த அகண்ட வெளி நிறைந்து அனாதியாக விளங்கிக் கொண்டிருக்கின்றவர் நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது முதலில் உணர்த்தப்பெறுகின்றோம். அடுத்து, அந்த அகண்டவெளி நிறை இறையுண்மை எல்லாம்முழுமையாக அல்லது பூரணமாகவே, எங்கணும் அவ்வெளி நிறை ஒவ்வொரு சிற்றணுவிலும் இருக்கின்றதாம். இவ்விறைஅனுபவம் வெளிப்பட்டிலங்க உள்ள சின்னஞ்சிறு ஒளி வெளி நிலையே கடவுளர் சிற்றம்பலமாக சிற்சபையாக உரைக்கப்படுகின்றதாம். எனவே அனாதியாயுள்ள அகண்ட பரம்பொருளே கண்டமாக விளங்கும் அனாதி சிற்சபையில் கண்டு கொள்ளப்படுவதாம்.

மேற்குறித்த அனாதி சிற்சபையும் அருட்பெருஞ்ஜோதியையும் எப்படிக் கண்டு பயனுறக் கொண்டு இனிது வாழ்வது? நிறையருள் ஞானத்திற்கே யன்றி பிற எதனாலும், எக்காலத்தும் கண்டு கொள்ளப்படமாட்டார் நம் சத்திய ஞான சபேசர். கற்பனை மனக் கண்ணாற் காண்பவை நிறை யனுபவம் வழங்காவாம். முன்னோர் கண்ட சமய மத உண்மைகள் எல்லாம் பகுத்தறிவுக்கும், அதற்கு மேற்பட்ட ஒருமை மனத் தியானாதி உணர்வுக்கும் புலனானவைகளேயாம். இதனைச் சுட்டவே மனாதிகட்கரிய மதாதீத வெளி என்று நம் இறைநிலையுண்மை குறிக்கப்பட்டுள்ளதாம். மனாதி என்றதால், மனம்முதலியனவாம். அதாவது, மனம், வாக்கு, காயம், என்னும் புறக்கரணம் மூன்றும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அகக்கரணம் நான்குமாம். இக் கரணானுபவத்திற்கு அப்பாலானது அருட்பெரும்பதியுண்மை.

தயவோடு கூடிய சுத்த சத் விசாரத்தில் இருந்துகொண்டு திருவருள் உண்மையை அறிந்துதெளிய முற்படும்போதுதான் மனத்தின் இறையியல் உண்மை விளங்குகின்றது. உண்மையில் மனம் என்பது, கடவுள் அருட்சக்தியின் கூறே, மனிதனின் மேலான அறிவுச்சக்தியாக விளங்குகின்றதாம். புலபோக இச்சையால் புறத்தே உழன்று கொண்டிருக்கும் மன உணர்வுக்கும், புறப்பற்று உட்கூடி நிற்கும் மன உணர்வுக்கும் இயல் உண்மையாகிய அருள் விளக்கம் வெளிப்படுகின்றதில்லை. இதனால் அருள் உண்மையை உணராத மனிதன் மனத்தை அகத்தே அசைவற நிறுத்தி , ஏகதேச ஒளி கண்டு களித்து கிடந்து, மன உணர்வும் அனுபவமும் கெட்டொழியச் செய்துகொண்டு அழிந்தே போகின்றான். அது தவறு, மனம் மடிந்து இறந்து ஒழிந்து போகக்கூடாது. மனம் என்ற தத்துவ விளக்கக் கருவி அழ்நிதுபோனால் மனிதன் மனிதனாகவே இருக்கமுடியாது. குறையறிவுடைய உயிரினத் தொன்றாகாத்தான் ஆகிவிட நேரும். ஆகையால், மனம் நீங்கக்கூடாது ஆனால் மனம் சுத்தமுற்று, மெய்யருள் வண்ணமாக மாறி விளங்குதல் வேண்டும். மறையாகம அறிவுக்கு எட்டாத கடவுளர் திருவடி என்னும் திருவருளின் திருவடியே நம்மனம் என்பதற்குச் சான்றாக, அனுமனில் அவதார உண்மை அணிந்துரைக்கப்பட்டிருகின்றது கம்பன் வாயிலாக.

நாட்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும்

கோட்படா பதமே ஐய குரக்குரு கொண்டதென்றான்”

எனப்பட்டுள்ளது . மனத்தைக் குரங்காகப் புனைந்து கூறுவது நம்மனோர் மரபு. சுத்த மனத்தை அனுமக் குரங்காகக் கொள்ளும் போது அது கடவுளர் திருவடியாம் அருளே என்பது தெளிவாம்.

ஆகவே, மனம் அருள் ஒளிமயமாக மாறி சிற்சபையின் கண் அருட்பெருஞ்ஜோதிக் கட்சியில் அத்துவிதமாய் விளங்கிக் கொண்டு இறையனுபவம் கெடாது இன்போடு என்றும் நிலவ, மனிதன் அருட்பிரகாசவடிவோடு வாழ்பவனாவான். இப்படித்தான் அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதியைப் போற்றிப் போற்ற�%