Vallalar Universal Mission Trust   ramnad......
40. சித்திநிலைக்கு ஆகரம்


79. சேகர மாம்பல சித்திநிலைக்கெலாம்

80. ஆகர மாம்சபை அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) ஒன்றான பேரருட்பெருஞ் சக்தியிலிருந்துதான் இந்த மகாபிரபஞ்சத்து எவ்வுயிரும் , எப்பொருளும், எச்செயலும், விளைவும் உண்டாகின்றனவாம். இப்பெருஞ்சக்தியின் விரிநிலை யாவும், பொருட்சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி, யோகசக்தி, அருட்சக்தி என்பவற்றில் அடங்கும். விரிவுற்ற நிலையில் வெளிப்பட்டு விளங்கவல்ல இவையாவும் அதிசூக்குமமாய் நுணுகிக்குவிந்து அருகிக்கிடக்கும் நிலைதான் நமது அருட்பெருஞ்ஜ்ஜோதிச் சிற்றம்பலமாம். ஆகையால், இந்தச் சிற்சபையைத்தான் இங்கு ஆகரம் என்கின்றார் நம் அருட்பிரகாச வள்ளற்பிரான். ஆகரம் என்றால், சுரங்கம், உறைவிடம், இரகசிய வைப்பிடம் ( secret treasure of house) எனப் பொருள்படும். முத்து, மணி முதலியன உடைய ஆழ்கடலை இரத்தினாகரம் என்பர். இதுபோல் நம் அருட்சிற்றம்பலம் இருக்கிறதே இது, அஷ்ட ஐஸ்வரியம் என்னும் அஷ்டமா சித்திகளுக்கும், அளவுகடந்த அருட்பெருஞ்ஜோதி சித்திக்கும் உறைவிடமாய் இருக்கின்றது உண்மையாம்.

சேகரம் என்ற சொல், சேகரித்து வைக்கப்பட்ட பொருள், ஆற்றல், சத்து இயல் முதலியனவாகும். பெரும்பொருளை எல்லாம் சம்பாதித்துத் திரட்டி ஓர் இரகசிய அறையில் மறைவாக வைத்துக் காத்து வருகின்றனர் உலகர். கடவுளோ இந்தப் பேருலகப் பேராற்றல்களை எல்லாம்தன் அருள் வல்லபத்தால் சிற்றணுவாகிய அம்பலத்திலே முழுமையாகவே வைத்து, நமக்கே வழங்க உள்ளார். நம்பதி தமக்கென எதுவும் வேண்டாத் தனிப்பெருந் தியாகேசரல்லவா? ஆகையால், நாமும் தயவுடையவர்களாகிச் சுத்த சன்மார்க்கத்தால் அந்த அருட்ஜோதி அம்பலத்தை உறைவிடமாகக் கொண்டுவிட்டால், அங்குள்ள சேகரப் பொருளெல்லாம் நம் கரங்கொடுத்து நலமே வாழச் செய்வார்.

இறையருளின் ஆற்றலை நிறையருள் நிலை நின்று காணாத யோக ஞா சித்தர்கள், அம்பலவாழ்வு கொண்டிலங்காது, இவ்வுலக வாழ்வில் பலரும் வியக்கச் சில காலம் சித்தாடி மகிழ்ந்து, மகா சமாதியுற்று கடவுட்ஜோதியில் மறைந்துவிட்டனர். ஆன்மாவாகிய ஆகரத்தில் சேகரமாய் வைக்கப்பட்டுள்ள நிறையருட் செல்வத்தில் ஓரளவைப்பெற்றுப் புறத்தாடிய சித்தர் குழாம், அருள் இறையோடு பிரிவற இருந்து ஆனந்த வாழ்வில் நிலவாது போயினர். ஏனென்றால் அப்படி வாழவைக்கும் சுத்த சன்மார்க்கம் ஒன்று அன்று வெளிப்படவில்லை என்பதே காரணம். இன்றோ சுத்த நெறியால் நம்மை நாம் அருளிறையோடிருக்க கண்டு, அகங்காரபோதம் அற்று அருள்மயமாய் விளங்க உள்ளோம். இப்போது நமக்கு உலகியலில் சித்து செய்திருப்பது திருவருட் சம்மதமல்ல, எல்லோரும் சுத்த சன்மார்க்கிகளாய் ஆகி நிறையின்பில் வாழ வகைசெய்வதே நம் கடமையும் ஆண்டவர் ஆணையுமாகும். எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதிபதியோடு ஒன்றி நின்று, அருள் அற்புதத்தால் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை வாழ்வை வெளிப்படுத்துவோம். நம்பதியும் அவர்தம் அருட்பேராற்றலும்ஃ நித்தியமே, ஆதலின் அவரோடுறையும் நாமும் நித்த மகிழ்ந்து வாழலாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt