Vallalar Universal Mission Trust   ramnad......
36. சாக்கிராதீத வெளிநிறை சிற்சபை


71. சாக்கிராதீதத் தனிவெளி யாய் நிறை

72. வாக்கிய சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) முன்பு சாக்கிரம் என்னும் விழிப்புநிலை குறித்தும், துரியம், துரியாதீதம், குறித்தும் ஒருவாறு விளக்கப்பட்டன. இங்கு முதல் நிலையையும் ஈற்றுநிலையையும் இணைத்துக் கொண்டு விளங்குகின்ற ஓர் அனுபவ நிலையை யுணர்த்துகின்றார் அருள் அடிகளார். சாக்கிரநிலையை எல்லோரும் அறிந்துள்ளனர். ஆனால் துரியாதீத நிலையை எல்லோரும் அறிந்துள்ளனர். ஆனால் துரியாதீத நிலையை எல்லோரும் அறிவது எளிதல்ல. யோகஞான சாதகர்கள் ஒருவாறு அத் துரியா தீதத்தை அறிவர். மற்ற உலகியல் உபாயஞானிகள் புத்தகப் படிபாலும், மனோ ஆராய்ச்சியாலும் , உண்மையை அறிந்து கொள்ளாமலே இத் துரியம், துரியாதீதம் குறித்து எவ்வளவோ பேசுவார்கள். ஆகையால், இவ்விருவகை அறிவுக்கும் அனுபவப் படாதது இத் துரியாதீதத் தனிவெளிநிலை என்று உணரப் படுவதாம்.

மேற்படி சாக்கிராதீத அனுபவம் சித்திக்கப்பெறுவது எப்படி என்றால், நம் வள்ளல்கண்ட சுத்த சன்மார்க்கம் ஒன்றினால்தான் இவ்வனுபவம் ஏற்று வாழமுடியும் என்று அறிகின்றோம். இச் சுத்தநெறியோ, சத்விசாரத்தால் உண்மையைக் கண்டுகொண்டு, பரோபகார வாழ்வால் அனுபவத்துடன் விளங்கவும் கூடியதாய் இருக்கின்றதாம். இச் சன்மார்க்க சாதகன் தயாவொழுக்கத்தோடு இருந்துகொண்டு, கடவுளான்ம உண்மைகாண சத்விசாரம் செய்கின்றான். அப்போது திருவருளால், எங்கும் பூரணமாய் நிரம்பியுள்ள அருட்பெருஞ்ஜோதிபதியே, தன்னில் முதல் அணுவாய் வெளிப்பட்டு , தனது அகம்புறம் யாவுமாய்த் திகழ்கின்றதாய் அறிகின்றான். ஆனால், அந்த அருட்பெரும் பதியே இவனாய், இவனது உயிரும் உடம்புமாய் இருக்கக்கண்டு , அம் முதலணு நிலையே கடவுளாகவும் தானாகவும் இரண்டற்ற ஒன்றாய் இருந்து விரிந்து வாழ்கின்றதாகவும் அறிகின்றான் இந்நிலையே சிரநடு சிற்றம்பல நிறைவெளியாக இருக்கின்றதாம். சாக்கிரத்தில்தான் இந்தச் சிற்றம்பலத்தைக் கண்டுகொண்டுள்ளான் இச் சன்மார்க்கி, இவன் புறத்திருந்துகொண்டுதான், விசாரத்தால் இச்சிற்சபையைக் கண்டான். கண்டு, அதுவே தன்னுண்மைநிலை என்று தெளிவுபெற்று நிற்பவனாகிவிட்டுள்ளான். புற நெறியாளரோ புறத்திருந்து, அகத்திலுள்ள கடவுளான்மாவைக் கண்டும், : தாம் அதுவெனப் பாவித்து நின்று பாவனையின் முடிவில் உடலைவிட்டே உள்ளொன்றி மறைந்து போகின்றார்களாம்.

நம் சன்மார்க்கி சிற்சபையிலிருந்து சாக்கிரத்தும் சொப்பனத்தும், சுழுத்தியினும் வாழ்ந்து விசாரசாதனை முதிர முதிர துரியம், துரியாதீதம் வரை சென்றுவிடுகின்றான். இத் துரியா தீதத்தில் இவன் கடவுளோடு ஒன்றி இருந்தும் கூட, தான் கெட்டு ஒழிந்துபோகாது, நிறையருளால், தான் அதுவாகி விளங்குகின்றான். இந்தத் துரியாதீத அனுபவம் இவனுக்கு இப்பொழுது விழிப்புநிலையிலும் நழுவாது விளங்குதல் உண்மையாம். இந்த சாக்கிரத்தில் துரியாதீத அனுபவநிலையையே சாக்கிராதீதம் ஆக மொழியப்படுகின்றது. இச்சாக்கிராதீத அனுபவத்தில் இவனது உள்ளுணர்வும் பிரபஞ்சவெளியலாம் கடந்து ஒளிர்கின்றதாம். ஆகவே, நம் அருட்பெருஞ்ஜோதிச் சிற்சபை இந்தத் துரியாதீதத் தனிவெளியில் நிறைவாக்கிப் பெற்று என்றுந் திகழ்கின்றதாம், இதனால், சுத்த சன்மார்க்கி சிற்றம்பலத்தே நிறை இன்பவாழ்வோடு என்றென்றும் விளங்குதல் சத்தியம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt.