Vallalar Universal Mission Trust   ramnad......
35. இயலுண்மை இன்ப சிற்சபை


69. இயற்கையுண் மையதாய் இயற்கையின் பமுமாய்

70. அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) நமது அருட்பெருஞ்ஜோதிபதி இயற்கையுண்மை வடிவும், இயற்கை விளக்க நிறைவும், இயற்கை இன்ப இயல்பும் கொண்டவராவார். இதனையே மெய்யறிவின்ப வடிவினர் எனவும், சச்சிதானந்தமான்வர் எனவும் கூறுவர். இங்கு முதல் அடியில் இயற்கையுண்மையாகிய சத்துநிலையும், இயற்கையின்பமாகிய ஆனந்தநிலையும் குறித்துவிட்டு, இயற்கை விளக்க நிலையைச் சுட்டாமற் சுட்டியுள்ளார் இரண்டாவது அடியில், அது. சிற்சபை என்றதால் குறிக்கபபட்டுள்ளதாகும். சிற்சபைதான் இயற்கை விளக்க நிறைவாகியுள்ள இடமாம். இதனைச் சத்தியஞானச் சிறு விண்ணப்பத்தில் கண்டு தெளியலாம். இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ ஞான சபையில், இயற்கையுண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து,இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பம் அடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம்வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே, என்று குறித்துள்ளார்.

மேற்படி நம் கடவுள் வெளிப்பட்டிலங்கும் இடம் சிற்சபை என்பது குறிக்கப்பட்டதோடு, அது, அயர்ப்பிலா” என்ற நித்திய விளக்கத் தன்மையுணர்த்தும், ஓர் அடைமொழியும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாம். இதன் உண்மை ஆழ்ந்து நோக்கின் விரிந்து விளங்கும், பெருமை தோன்றும் சிற்சபை என்பதைச் சித்சபை எனவும் கூறுவர். சிற்சபை என்றால் மிக நுண்ணிய சிறுநிலையைக் குறிக்கும், சித்தென்பது ஞானம், ஆகையால், சித்துவிளக்கம் கொண்ட ஆலயம் சித்சபை எனப்படுவதாம் , சித் அம்பரம் ஞானாகாச நிலையாம். சித் + அம்பரமே சிதம்பரமாம். இங்கு நம் அருட் சிற்சபை அல்லது அருள் ஞான சபை அருட்பெருஞ்ஜோதி கோயில் கொண்டிலங்குமிடமாயிருக்கின்றதாம்.

சித்தென்பது, மேலே இயற்கை விளக்க நிறைவாகிய இடம் என்று அறியலாகாது, இந்த் அகண்ட பிரபஞ்சத்தில் இறைவர் சத்துண்மைப் பொருளாய அகத்தில் நிலைத்துள்ளார். அச்சத்து நிலையிலிருந்து தன் அருளையே விரித்து அனந்த வண்ணவடிவங்களாக்கி தன்னைச் சூழக்கொண்டுள்ளார். இந்தச் சூழ் வடிவங்களாக்கித் தன்னைச் சூழக்கொண்டுள்ளார். இந்தச் சூழ்வடிவங்களில் எதுவும் நிலைப்பதேயில்லை. மாற்றம் அடைந்துகொண்டேயிருக்கின்றதாம். இந்த மாற்றம் ஏனென்றால், புறநிலை பக்குவம் உண்டாகி அகத்திலுள்ள நிறையின்பம் வெளிப்படற்கேயாம். அந்தப் பக்குவம்தான் இன்றைய சுத்த சன்மார்க்கிக்கு ஏற்படுகின்றதாம். சுத்த சன்மார்க்கியின் உண்மை வடிவம் அகத்தில் சத்துநிலை நின்று விரிந்து அருள் ஒளிநிறைவால் அகண்டவடிவமாய்த் திகழ்கின்றதாம். இவனுக்குப் பூரண இன்பம் நிலைத்த அனுபவமாகின்றாதோடு தேகம் சுத்த நித்த வடிவமாகவும் விளங்குவதாம். இவனைப் புறத்திருப்போர் பழைய உருவிலேயே இருப்பதாகக் காண்பர். ஆனால், அது அருளுடம்பாய் அழியாமை பெற்றிலங்குகின்றதாம். இப்பொழுது சித்சபைதான் இந்த அருள் உருவாகி நிலை கொண்டுவிட்டதாம். இதுதான் அயர்ப்பிலாச் சிற்சபை என்றதால் குறிக்கப்பட்டதாம். இந்த சித்து வடிவம் தளர்வும், சிதைவும், அயர்ச்சியும், இல்லாதது. அகையால், இதில் அகத்தில் சத்துண்மையும், ஆனந்த நிறைவும் எப்பொழுதும் விளங்குவதாம். இச் சன்மார்க்கி இச் சித்துருவில் ( சத் + ஆனந்தம்) சதானந்த வண்ணமாய் விளங்குவான் என்பது சத்தியம்.

சத்தான இறையுண்மை அகமாய் இருந்து அதற்கும் உள்ளீடாய் இயற்கை இன்பத்தை , வித்தினுட் கனிபோல் அதிசூக்குமநிலையில் வைத்திருந்து, அந்தப் பேரின்பக் கனி நிலை வெளிப்பட, அச்சத்தானந்த விதையைச் சூழ சித்துச்செயலாய் ஐம்பூதத் திரட்சியால் முளைத்துச் செடியாய், மரமாய், பூவாய், காயாய், முடிவில் பழுத்துக் கனிந்து, சச்சிதானந்தக் கனிப்பயன் கொண்டு அழியாது விளங்குவதாம்.

இவ்வளவு உண்மையும் அயர்விலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி என்றதில் அடங்கி வெளிப்பட்டுள்ளதாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்..

vallalarspace.com/vumt